இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் அடையாளம் தொடர்பான தடுமாற்றம்!

0 371

எம்.எல்.எம்.மன்சூர்

இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்­பாக 1990களின் பின்னர் முக்­கி­ய­மான பல சமூக, சமய மற்றும் கலா­சார ரீதி­யான மாற்­றங்­களை எதிர்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அதற்கு வழி­கோ­லிய கார­ணிகள் எவை என்­பதை விரி­வாக எடுத்து விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்த மாற்­றங்கள் எடுத்து வந்த குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு தாக்கம் ‘சிங்­கள –பெளத்த பெரும்­பா­னமை நாடான இலங்­கையில் எங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வது எப்­படி’ என்­பது தொடர்­பாக முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட தடு­மாற்ற நிலை­யாகும்.
இப்­பின்­ன­ணியில், நாங்கள் ”இலங்கை முஸ்­லிம்­களா” அல்­லது ”இலங்­கையில் வாழும் முஸ்­லிம்­களா” என்ற கேள்வி எழுந்­தது.

முதலில் ”இலங்கை முஸ்­லிம்கள்” என்ற பதம் எதனைக் குறிக்­கின்­றது என்­பதை பார்ப்போம்.

இலங்கை முஸ்­லிம்கள் அல்­லது சுதேச முஸ்­லிம்கள் – இலங்­கையில் பிறந்து, இலங்­கையில் வாழ்ந்து, இலங்­கையில் மர­ணிப்­ப­வர்கள். உரிமை கொண்­டா­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு வேறு நாடுகள் எவை­யு­மில்லை. இலங்­கையின் தேசி­யக்­கொடி, தேசிய கீதம் மற்றும் அர­சியல் யாப்பு என்­ப­வற்­றுக்கு (ஏனைய பிர­ஜை­களைப் போலவே) உரிய கௌர­வத்தை அளிப்­ப­வர்கள். இலங்­கையின் முதன்மை கலா­சாரம் மற்றும் பாரம்­ப­ரி­யங்கள் என்­பன குறித்த பிரக்­ஞை­யுடன் செயற்­பட்டு, அவற்றை கண்­ணி­யப்­ப­டுத்தும் அதே வேளையில், தமது தனித்­து­வ­மான சமய மற்றும் பண்­பாட்டுப் பாரம்­ப­ரி­யங்­களை பேணி வாழ்­ப­வர்கள்.

கிட்­டத்­தட்ட ஆயிரம் ஆண்­டு­க­ளாக சுதேச முஸ்­லிம்கள் அப்­ப­டித்தான் இந்­நாட்டில் வாழ்ந்து வந்­தி­ருக்­கி­றார்கள். அந்த ‘ஈடி­ணை­யற்ற சக­வாழ்வை’ லோர்னா தேவ­ராஜா விரி­வாக பதிவு செய்­தி­ருக்­கிறார். ‘கிரா சந்­தே­ஸய’ (கிளி விடு தூது) போன்ற மத்­திய கால சிங்­கள காப்­பி­யங்­களும், நூற்­றுக்­க­ணக்­கான வாய்­மொழி வர­லாற்றுத் தக­வல்­களும் அதனை மேலும் ஊர்­ஜிதம் செய்­கின்­றன.

இரண்­டா­வது வகை அடை­யாளம் ”இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள்” என்­பது. அதா­வது, அந்தச் சிந்­த­னையை கொண்­டி­ருப்­ப­வர்கள் பின்­வரும் விதத்தில் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள விரும்­பு­கி­றார்கள்:

”உல­கெங்­கிலும் 100 கோடிக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கி­றார்கள். ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்து வரு­கின்­றன. இலங்­கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்­லிம்கள் அந்த உல­க­ளா­விய முஸ்லிம் உம்­மாவின் உறுப்­பி­னர்கள். அந்த வகையில், எமது நாட்­டுக்கு வெளியில் மத அடை­யா­ளத்தின் அடிப்­ப­டையில் எமக்கு ஒரு பாரிய பாது­காப்பு அரண் இருந்து வரு­கின்­றது.”

ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பான கருத்­தி­யலை உரு­வாக்கி, அதற்கு செயல் வடிவம் கொடுத்த நபர்­களும் அனே­க­மாக இத்­த­கைய ஒரு சிந்­த­னை­யி­னாலே தூண்­டப்­பட்­டி­ருந்­தார்கள். தமது செயல்கள் எடுத்து வரக்­கூ­டிய மிகப் பயங்­க­ர­மான பின்­வி­ளை­வுகள் குறித்து கிஞ்­சித்தும் கவ­லைப்­ப­டாமல் அந்தக் கொடூ­ரத்தை நிகழ்த்­து­வ­தற்கு அத்­த­கைய ஒரு தீவி­ர­வாத மன­நி­லையே அவர்­களைத் தூண்­டி­யி­ருந்­தது.

”ஈஸ்டர் தாக்­கு­தல்கள் பௌத்த பன்­ச­லை­களை இலக்கு வைத்து நிகழ்த்­தப்­பட்­டி­ருந்தால் இன்­றைக்கு இலங்­கையே இருந்­தி­ருக்க மாட்­டாது” என அண்­மையில் முக்­கி­ய­மான பிக்கு ஒருவர் பொது வெளியில் பேசி­யி­ருந்தார். இலங்­கையில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்­ள­வி­ருந்த இந்த நூற்­றாண்டின் மிகப் பெரிய ‘Genocide’ எவ்­வாறு மயி­ரி­ழையில் தவிர்க்­கப்­பட்­டது என்­ப­த­னையே அவர் மறை­மு­க­மாக சுட்டிக் காட்­டி­யி­ருந்தார்.

இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான கிரிக்கட் போட்­டிகள் நடக்கும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒரு சிலர் அடை­யாளம் தொடர்­பான இந்த தடு­மாற்ற நிலையை அனு­ப­விக்­கி­றார்கள்.

சிங்­கள தேசி­ய­வா­தி­களும், இன­வா­தி­களும், ஒரு சில தீவிர அர­சியல் பிக்­கு­களும் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை இந்த இரண்­டா­வது அடை­யா­ளத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நோக்கி வரு­கி­றார்கள். அதுவே இங்­குள்ள மிகப் பெரிய பிரச்­சினை. ”எங்­க­ளுக்கு இருப்­பது இந்த ஒரு நாடு மட்­டும்தான். உங்­க­ளுக்கு எத்­த­னையோ நாடுகள் இருக்­கின்­றன” என்ற விதத்­தி­லான அபத்­த­மான கருத்­துக்­களை அவர்கள் இந்தக் கண்­ணோட்­டத்­தி­லேயே அடிக்­கடி முன்­வைத்து வரு­கின்­றார்கள்.

இலங்கை தமிழ் மக்கள் முன்­னெ­டுத்த 30 வருட கால விடு­தலைப் போராட்டம் – தமது மற்ற அடை­யா­ளங்­க­ளான இந்து மத இந்­தியா மற்றும் தமி­ழர்கள் வாழும் தமிழ்­நாடு என்­பன இறுதி வரையில் தமக்கு ஒரு பெரும் பாது­காப்பு அர­ணாக இருந்து வரும் என்ற நம்­பிக்­கையில் முன்­னெ­டுத்த போராட்டம் – முள்­ளி­வாய்க்­காலில் நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்­களின் மர­ணத்­துடன் எவ்­வாறு முடி­வுக்கு வந்­தது என்­ப­தையும், தமி­ழீழக் கனவு இறு­தியில் எவ்­வாறு சிதைந்­தது என்­ப­தையும் நாங்கள் பார்த்தோம். மன்னார் கரை­யி­லி­ருந்து வெறு­மனே 18 மைல் தூரத்தில் ஏழு கோடி தமி­ழர்கள் வாழ்ந்து வந்த ஒரு பின்­பு­லத்தில் இந்தப் பேர­னர்த்தம் நிகழ்ந்­தது என்­பது தான் பெரும் கொடுமை.

பூகோள–அர­சியல் நலன்கள் மற்றும் பிராந்­திய நலன்கள் என்­ப­வற்­றுக்கு நாடுகள் உயர் முன்­னு­ரிமை வழங்கி வரும் இன்­றைய உலகச் சூழலில், இலங்­கையில் வாழ்ந்து வரும் சிறு­பான்மை சமூ­கங்கள் யதார்த்­தத்­துக்கு புறம்­பான இவ்­வா­றான எதிர்­பார்ப்­பு­களை கொண்­டி­ருப்­பது மிக மிக ஆபத்­தா­னது என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஜனாஸா எரிப்பு விவ­கா­ரத்தின் போது முஸ்லிம் நாடுகள் தன் மீது அழுத்தம் பிர­யோ­கித்­த­தாக தனது நூலின் எந்த ஒரு இடத்­திலும் கோட்­டா­பய ராஜ­பக்ச குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தையும் நாங்கள் கவ­னத்தில் எடுக்க வேண்டும்.

அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் முஸ்லிம் சமூ­கத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் சாத­க­மான மாற்­றங்­களில் ஒன்று அவர்கள் தமது முத­லா­வது வகை அடை­யா­ளத்தை -அதா­வது, நாங்கள் இலங்­கையின் சுதேச முஸ்­லிம்கள் என்ற அடை­யா­ளத்தை -பொது வெளியில் வலு­வான விதத்தில் வலி­யு­றுத்தி வரு­வ­தாகும். அதே வேளையில், (சம­கால பூகோள -அர­சியல் யதார்த்­தங்­க­ளுடன் எவ்­வி­தத்­திலும் பொருந்திச் செல்­லாத) இரண்­டா­வது வகை அடை­யா­ளத்தை முன்­வைக்க விரும்பும் சிறு தொகை­யி­னரின் குரல்கள் இப்­பொ­ழுது பெரு­ம­ள­வுக்கு பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கின்­றன. அது ஒரு வர­வேற்­கத்­தக்க மாற்றம்.

அண்­மையில் வெசாக் மற்றும் பொசொன் வைப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட அன்­ன­தான நிகழ்­வு­களில் தென்­னி­லங்­கையில் (குறிப்­பாக சிங்­கள கிரா­மங்­களை அண்டி வாழும்) முஸ்லிம் சமூ­கத்­தினர் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் பங்­கேற்­றி­ருக்­கி­றார்கள். தேசியப் பெரு­வாழ்வின் ஒரு பாக­மாக இணைந்து கொள்­வ­தற்­கான அவர்­க­ளு­டைய விருப்பின் ஒரு பிர­தி­ப­லிப்­பா­கவே இதனைப் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. (இது தொடர்­பான முகநூல் பத்­வாக்கள் என்­ன­வாக இருந்து வந்த போதிலும்) இந்தச் சம்­பவம் ஒவ்­வொன்­றையும் குறிப்­பிட்ட பின்­புலம், அந்­தந்த ஊர்­களில் இனங்­க­ளுக்­கி­டையில் நீண்ட கால­மாக நிலவி வரும் உற­வுகள் மற்றும் பன்­சல – பள்­ளி­வாசல் இடை­யி­லான நல்­லி­ணக்கம் என்­ப­வற்றின் பின்­ன­ணி­யிலே (Case by case) அணுக வேண்­டி­யி­ருக்­கி­றது.

அடுத்து வரும் மாதங்­களில் இலங்கை அர­சி­ய­லிலும், சமூ­கத்­திலும் முன்­னொ­ரு­போதும் இருந்­தி­ராத அள­வி­லான பாரிய மாற்­றங்கள் ஏற்­பட முடியும் என்ற விதத்தில் பர­வ­லாக எதிர்­பார்ப்­புகள் நிலவி வரும் ஒரு வர­லாற்றுத் தரு­ணத்தில் நாங்கள் இப்­பொ­ழுது வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். தீவிர சிங்­கள தேசி­ய­வாத நிலைப்­பாட்டை முன்­வைக்கும் புதிய அர­சியல் அணியும் கூட அதன் பரப்­பு­ரை­களில் ‘அனை­வ­ரையும் அர­வ­ணைக்கும் இலங்கை’ (Inclusive Sri Lanka) என்ற வாச­கத்தை சேர்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. அதன் கொடியில் இளம் பிறை­யையும் காட்­சிப்­ப­டுத்­து­கின்­றது.

முஸ்­லிம்­க­ளுடன் தன்னை மிக நெருக்­க­மான விதத்தில் அடை­யா­ளப்­ப­டுத்தி வந்த ஒரு சிங்­கள அர­சி­யல்­வா­தியின் மர­ணத்தின் போது (அவர் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக கூட இல்­லாத நிலை­யிலும்) முழு நாடும் பெரும் எடுப்பில் கண்ணீர் அஞ்­சலி செலுத்­தி­யதை நாங்கள் பார்ப்போம்.

சிங்­கள கலை, பண்­பாட்டுத் துறையின் மிக முக்­கி­ய­மான ஆளு­மை­களில் ஒரு­வ­ரான உபுல் சாந்த சன்­னஸ்­கல அண்­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்­க­ளுடன் ஒரு நேர்­கா­ணலை நடத்­தி­யி­ருந்தார். கிட்­டத்­தட்ட 100 நிமிட நேரத்தைக் கொண்ட அந்தக் காணொளி சன்­னஸ்­க­லவின் பிர­பல்­ய­மான யூடியூப் தளத்தில் வெளி­யி­டப்­பட்ட பொழுது அதற்கு தெரி­விக்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான பின்­னூட்­டங்கள், குறிப்­பாக சிங்­கள மத்­திய தர வர்க்­கத்தின் சிந்­தனைப் போக்கில் ஏற்­பட்டு வரும் சாத­க­மான மாற்­றங்­களை துல்­லி­ய­மாக பிர­தி­ப­லிப்­ப­ன­வாக இருந்து வந்­தன.

‘இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இலங்­கையில் சிங்­கள இன­வாதம் இன்­னமும் வலு­வாக இருந்து வரு­கி­றது’ என அங்­க­லாய்ப்­ப­வர்­க­ளுக்கு ஒரு வார்த்தை ஆம் இன­வாதம் இன்­னமும் உயி­ர்ப்­புடன் இருக்­கி­றது. (எல்லா இனங்­க­ளிலும்) குறிப்­பிட்ட சத­வீ­தத்தில் இன­வா­திகள் இருந்து வரு­கி­றார்கள். ஆனால், இன்­றைய இலங்­கையின் பெரும்­போக்கு அர­சி­யலில் (Mainstream Politics) இன­வா­தமோ அல்­லது மத­வா­தமோ ஒரு நிர்­ணய கார­ணி­யாக இருந்து வர­வில்லை. அத்­த­கைய சுலோ­கங்­களை இனி­மேலும் சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்ற விட­யத்தை அனைத்துத் தரப்பு அர­சி­யல்­வா­தி­களும் இப்­பொ­ழுது நன்கு உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அடை­யாளம் குறித்துப் பேசும் பொழுது, வன்­னி­யிலும், கிழக்­கிலும் ‘முஸ்லிம் அடை­யாள அர­சியல்’ செய்து வரும் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் குறித்தும் தவிர்க்க முடி­யாத விதத்தில் சில கருத்­துக்­களை சொல்ல வேண்­டி­யி­ருக்­கி­றது.

இங்கு முத­லா­வது சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் 1994 தொடக்கம் 2019 வரையில் கிட்­டத்­தட்ட 25 வருட காலம் அக்­கட்­சிகள் கொழும்பு சிங்­கள அர­சாங்­கங்­க­ளுடன் செய்து வந்த, அவர்­க­ளுக்கு நன்கு பரிச்­ச­ய­மான அர­சியல் பேரங்­களை இனியும் அதே விதத்தில் செய்ய முடி­யாது என்­ப­தாகும். அதா­வது, கூட்­டணி அர­சாங்­கத்தில் ஒரு கெபினட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்­சர்கள், ஒரிரு கூட்­டத்­தா­பனத் தலைவர் பத­விகள் மற்றும் வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களில் ஒரு சில நிய­ம­னங்கள் என்ற வகை­யி­லான பேரங்கள் இனி­மேலும் சாத்­தி­ய­மில்லை. அத்­த­கைய பேரங்­க­ளுக்கு அடிப்­ப­ணியும் ஒரு அர­சாங்கம் (SJB அர­சாங்­க­மாக இருந்­தாலும் கூட) வெளிச் சக்­தி­க­ளி­லி­ருந்து கடும் அழுத்­தங்­களை எதிர்­கொள்ள முடியும். அது இறு­தியில் அந்த அர­சாங்­கத்தின் ஸ்திர நிலையை கூட ஆட்டம் காணச் செய்ய முடியும்.

அடுத்த விடயம் அடுத்து வர­வி­ருக்கும் புதிய அர­சாங்­கத்­தினால் பாரிய உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளையோ அல்­லது பெருந்­தொ­கை­யான அரசதுறை நிய­ம­னங்­க­ளையோ வழங்க முடி­யாது என்­ப­தாகும். நாட்டின் பல­வீ­ன­மான பொரு­ளா­தாரம் கார­ண­மாக (குறைந்­தது அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு) அத்­த­கைய செல­வி­னங்­களை மேற்­கொள்ள முடி­யாது என்­பது யதார்த்தம்.

ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், கூட்­டணி அர­சு­களில் இணைந்து கொள்ளும் சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க வேண்­டிய கோரிக்­கைகள் எவை? ஆழ­மாக சிந்­தித்துப் பார்க்க வேண்­டிய ஒரு விடயம் இது. கிழக்கில் அதி­கூ­டிய குடி­சனச் செறி­வினைக் கொண்­டி­ருக்கும் காத்­தான்­குடி, கல்­முனை மற்றும் அக்­க­ரைப்­பற்று போன்ற பிர­தே­சங்­களின் இப்­போ­தைய முன்­னு­ரிமைத் தேவை குடி­யேற்­றங்­களை விஸ்­த­ரிப்­ப­தற்­கான புதிய காணிகள், புதிய வாழிடப் பிர­தே­சங்கள். சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்­துவ அர­சி­ய­லுடன் பெரு­ம­ள­வுக்கு சம்­பந்­தப்­பட்ட ஒரு தீவிர பிரச்­சி­னை­யாக (Explosive Issue) காணிப் பிரச்­சினை இப்­பொ­ழுது கிழக்கில் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றது.

சிறு­பான்மை கட்­சி­களால் மட்டும் இப்­பி­ரச்­சி­னை­களை தீர்த்து வைக்க முடி­யாது. இன– மத லேபல்கள் இல்­லாத ஒரு பொதுச் செயல் திட்­டத்தின் கீழ் தென்­னி­லங்­கையின் முற்­போக்கு சக்­தி­க­ளுடன் இணைந்து, அவற்றின் கரங்­களை பலப்­ப­டுத்­து­வதன் மூலமும், அதற்­கூ­டாக இன­வாத / மத­வாத சக்­தி­களை பலவீனமடையச் செய்வதன் மூலமும் மட்டுமே இதனைச் சாதித்துக் கொள்ள முடியும்.

இறுதியில் ஒரு எச்சரிக்கை – நாங்கள் எதனை மாற்றியமைக்க வேண்டும் என போராடுகிறோமோ ஒரு போதும் அதில் நாங்களும் ஒரு பாகமாக இருந்து வர முடியாது. அதாவது, நாங்கள் கடுமையான இனவாத / மதவாத நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு, ‘மற்றவர்கள் அவ்வாறு இருந்து வரக்கூடாது’ எனச் சொல்வதற்கான தார்மீக உரிமை எமக்கில்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.