சபையில் சூடுபிடித்தது ஜனாஸா விவகாரம்

0 176

றிப்தி அலி

கொரேனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. விரைவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே இந்த விடயம் சூடு பிடித்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்­தி­லேயே இந்த பல­வந்த எரிப்பு இடம்­பெற்­றது. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் வழி­காட்­ட­லையும் மீறியே இந்த எரிப்பு இடம்­பெற்­றது.

சீனா­விற்கு அடுத்­த­தாக இலங்­கையில் மாத்­தி­ரமே கொரோனா வைரஸ் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் எரிக்­கப்­பட்­டமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. சர்­வ­தேச நாடுகள் மற்றும் அமைப்­புக்­களின் எதிர்ப்­பு­க­ளையும் மீறியே பல­வந்த எரிப்பு இடம்­பெற்­றது.

இதன் மூலம் அப்­போ­தைய ஆட்­சி­யா­ள­ரினால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனுக்கள் கூட எந்­த­வித விசா­ர­ணை­க­ளு­மின்றி தள்­ளு­படி செய்­யப்­பட்­டன.

இதற்­கான பிர­தான காரணம் சுகா­தார அமைச்­சினால் அப்­போது நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணர்கள் குழுவின் தீர்­மா­ன­மாகும். வைத்­திய நிபுணர் சன்ன பெரேரா தலை­மை­யி­லான குறித்த குழுவின் தீர்­மானம் இர­வோடு இர­வாக மாற்­றப்­பட்ட விட­யமும் யாவரும் அறிந்த உண்­மை­யாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக இலங்­கையில் உயி­ரி­ழப்­ப­வர்­களை தகனம் அல்­லது அடக்கம் செய்ய முடியும் என குறித்த குழு­வினால் வெளி­யி­டப்­பட்ட வழி­காட்­டியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக நீர்­கொ­ழும்­பினைச் சேர்ந்த முஸ்­லி­மொ­ருவர் மர­ண­ம­டைந்­ததை அடுத்து இலங்­கையில் தகனம் மாத்­தி­ரமே செய்ய முடியும் என குறித்த வழி­காட்டி இர­வோடு இர­வாக மாற்­றப்­பட்­டது.

அது மாத்­தி­ர­மல்­லாது, குறித்த குழுவின் உறுப்­பி­ன­ரான பேரா­சி­ரியர் மெத்­தி­காவும் இதற்கு ஆத­ர­வாக குரல் எழுப்­பினார். அதா­வது, கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்தால், அந்த உடல்­க­ளி­லுள்ள வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற கருத்­தினை முன்­வைத்தார்.

எனினும், குறித்த விடயம் தற்­போது பொய் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. எனினும், இன­மொன்­றினை இலக்கு வைக்­கப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட விட­யத்­திற்கு இன்றுவரை யாரும் பொறுப்புக் கூற­வில்லை.

இவ்­வா­றான நிலையில் கடந்த 18ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யொன்­றினை நிகழ்த்­திய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இந்த விட­யத்­தி­னையும் சுட்­டிக்­காட்­டினார். அது மாத்­தி­ர­மல்­லாமல், பல­வந்­த­மாக உடல்கள் எரிக்­கப்­பட்­ட­மைக்கு ஜனா­தி­பதி மன்­னிப்பும் கோரினார். இதன்­போது அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
“உலக சுகா­தார நிறு­வ­னத்­திடம் இந்த விடயம் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனாலும் இலங்­கையில் நாங்கள் ஒரு குழுவை நிய­மித்தோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அடக்கம் செய்ய அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று குழு பரிந்­து­ரைத்­தது. உலக சுகா­தார நிறு­வனம் வேறு­பட்ட கருத்தை எடுத்­தது.

ஆனால் பின்னர் உயர் நீதி­மன்றம் அந்தக் குழுவின் பரிந்­து­ரையை உறுதி செய்­தது. எனவே அதை அர­சாங்கம் பின்­பற்ற வேண்­டி­யேற்­பட்­டது. அப்­போது மாற்று வழி இருக்­க­வில்லை. ஆனால் இப்­போது அவை அனைத்தும் முடிந்­து­விட்­டது.

மேலும், இவை அனைத்­தையும் நாம் எதிர்­கொண்டோம். இந்த நாட்டில் அடக்­கப்­ப­டு­வதா அல்­லது எரிக்­கப்­ப­டு­வதா என்­பதை தீர்­மா­னிக்கும் உரிமை அனை­வ­ருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்­த­வரின் உடலை புதைக்­கவோ, தகனம் செய்­யவோ அல்­லது மருத்­துவ பீடத்­திற்கு தான­மாக வழங்­கவோ உரிமை வழங்கும் சட்­டத்தை இவ்­வி­ட­யத்­திற்குப் பொறுப்­பான அமைச்சர் கொண்டு வர­வுள்ளார்.

இந்தக் காலகட்­டத்தில், முக்­கி­ய­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு மன­ரீ­தி­யி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்­துக்கள், பௌத்­தர்கள், கிறிஸ்­த­வர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்­வதை விரும்­பு­கி­றார்கள். எனவே நடந்­த­தற்கு அவர்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்­டுக்­கொள்­கிறோம். மேலும், இது தொடர்­பாக முன்­வைக்­கப்­படும் சட்­ட­மூ­லத்­திற்கு இந்தச் சபை ஆத­ர­வ­ளிக்கும் என்று நம்­பு­கிறேன்” என்றார்.

இத­னை­ய­டுத்து எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரும் இந்த விடயம் தொடர்பில் உரை­யாற்­றினர்.

கோட்­டா­பய ராஜ­பக்ச அர­சாங்கம் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வாத அடிப்­ப­டையில் செயற்­பட்டு ஜனா­ஸாக்­களை எரித்­தது என எதிர்க்­கட்சித் தலைவர் குற்­றஞ்­சாட்­டினார்.

தேசிய ரீதி­யாக நிபுணர் குழு­வொன்றை நிய­மித்து அவர்­களின் பரிந்­துரை என்ற பெயரில் செயற்­பட்டு, முஸ்லிம் மக்­களின் உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார். இதற்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதே­வேளை, குறித்த விடயம் தொடர்பில் அப்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட போது, இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி எடுத்த தீர்­மா­னத்­திற்கு நாம் அனை­வரும் ஆத­ரவு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.
பேரா­சி­ரியர் மெத்­திக்கா என்­ப­வரின் பொய்­யான இன­வாத கருத்­தி­னா­லேயே கட்­டாய தகனம் எமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என வெளி­வி­வ­கார அமைச்சர் குறிப்­பிட்டார்.

அப்­போ­தைய காலப் பகு­தியில் அமைச்­சர்­க­ளாக இருந்த விமல் வீர­வன்ச மற்றும் உதய கம­்மன்­பில ஆகியோர், கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்களை அடக்கம் செய்ய எந்த எதிர்ப்­பி­னையும் வெளி­யி­ட­வில்லை. நிபுணர் குழுவே எதிர்ப்பு வெளி­யிட்­டது எனவும் அமைச்சர் கூறினார்.
மத நம்­பிக்­கை­களை மீறி பல­வந்­த­மாக ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

எவ்­வா­றா­யினும், நடந்து முடிந்த இந்தச் சம்­ப­வத்­தினை பேசிப் பேசி காலத்­தினை வீண­டிப்­ப­தனால் எந்தப் பலனும் ஏற்­படப் போவ­தில்லை. மாறாக, ஜனா­தி­ப­தி­யினால் கூறப்­பட்­டுள்ள புதிய சட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அனைவரதும் தலையாய கடமையாகும்.

அதாவது, இறந்தவரின் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ அல்லது மருத்துவ பீடத்திற்கு தானமாக வழங்கவோ உரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி அறிவிப்பொன்றை மேற்கொண்டிருந்தார். எனினும், குறித்த சட்டத்தின் வரைபு இன்று வரை வெளியாகவில்லை.

எமது நாட்டுக்கு மிகவும் இன்றியமையாததொன்றான இந்த சட்டத்தினை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.