மெளலவி மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய ‘பிச்சைக்கார குடும்பம்’

வைரல் வீடியோ மூலம் வெளிப்பட்ட உண்மை!

0 173

எப்.அய்னா

அனு­ரா­த­புரம் மாவட்டம் ஹொரவ்­பொத்­தான நகரில் துணிக்­கடை வைத்­தி­ருக்கும் மெள­லவி ஒருவர் கடந்த பெப்­ர­வரி மாதம், ஹொரவ்­பொத்­தான பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். தன் கடைக்கு யாசகம் கேட்டு வந்த பெண் ஒரு­வரை, யாசகம் தரு­வ­தாக கடையின் அறை ஒன்­றுக்குள் அழைத்து சென்று துஷ்­பி­ர­யோகம் செய்தார் என கிடைக்கப் பெற்­றி­ருந்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமைய அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

ஹொரவ்­பொத்­தான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர்  விவ­கார விட­யங்­களை விசா­ரணை செய்யும் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட மெள­லவி பின்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் சில நாட்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். அது குறித்த வழக்கு தொடர்­கின்­றது.

இந் நிலையில், அண்­மையில் சமூக வலைத் தளங்­களில் உண­வூட்டும் போது சிறுமி ஒரு­வரை மிகக் கொடூ­ர­மாக ஒருவர் தாக்கும் காட்­சிகள் வெளி­யான நிலையில், அந்த தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் ‘குக்குல் சமிந்த’ எனும்  பெயரால் அறி­யப்­படும்  நபரை வெலி ஓய பொலிஸார் கைது செய்­தனர். அவ­ரோடு சேர்த்து சிறுமி மீதான தாக்­குதல் மற்றும் சிறு­மியை கொடூ­ர­மாக நடாத்த‌ உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறி, குக்குல் சமிந்­தவின் சட்ட ரீதி­யற்ற மனை­விகள் எனக் கூறப்­படும் இரு பெண்­க­ளையும் பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர். இவர்­களின் விப­ரங்கள் வீடியோ காட்­சிகள் பிர­தான செய்­தி­யாக தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பப்­பட்­ட­துடன் பத்­தி­ரி­கை­க­ளிலும் பிர­சு­ரிக்­கப்­பட்­டன.

இந்த செய்­திகள் தான் ஹொரவ்­பொத்­தான மெள­ல­விக்கு நடந்த கொடு­மையை வெளியே கொண்­டு­வ­ரவும், அவ­ருக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுக்­கவும் ஏது­வாக அமைந்­தது எனலாம்.

ஆம், இந்த செய்­தி­களை ஹொரவ்­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நவீன் தயா­நந்­தவும் பார்த்­துள்ளார். அப்­போது, வெலி ஓய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட மூவரில் அடங்கும் ஒரு பெண் தொடர்பில் அவர் விஷே­ட­மாக அவ­தானம் செலுத்­தி­யுள்ளார். அதற்குக் காரணம், துணிக்­க­டையில் வைத்து தன்னை துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக  ஹொரவ்­பொத்­தான பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­ட­ளித்த பெண்னை ஒத்த சாயலில் அவர் இருந்­த­மை­யாகும். அவ­ரது அடை­யா­ளத்தை வெலி ஓய பொலிஸார் ஊடாக பின்னர் பொறுப்­ப­தி­காரி உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார்.

இது தொடர்பில் உட­ன­டி­யாக தேடிப் பார்க்­கு­மாறு, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தயா­நந்த, தனது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் இந்­திக மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பெண் பொலிஸ் சார்ஜன் சந்­தியா ஜய­தி­லக்க ஆகி­யோ­ருக்கு ஆலோ­சனை அளித்­துள்ளார்.

அவ்­வாறு விஷேட அவ­தானம் செலுத்­தவும் காரணம் உள்­ளது. முறைப்­பாட்டை அளிக்க ஹொரவ்­பொத்­தான பொலிஸ் நிலை­யத்­துக்கு கடந்த பெப்­ர­வரி மாதம் வந்த அந்த பெண், அதன் பின்னர் இருக்கும் இடம் தெரி­யாமல் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமல் இருந்து வந்­துள்ளார். இதனால் குறித்த துஷ்­பி­ர­யோக வழக்கில் அவ­சி­ய­மான சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­களைக் கூட முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. நீதி­மன்ற‌ம் சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்­கான அறி­வித்­தல்­களை பிறப்­பித்தும் அவர் மன்­றையும் புறக்­க­ணித்து வந்­துள்ளார்.  இத­னா­லேயே   செய்­தி­களில் அப்­பெண்ணை கண்­டதும் பொறுப்­ப­தி­காரி அது தொடர்பில் ஆராய தன் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் அளித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் சிறுமி மீது கொடூ­ர­மாக தாக்­கி­ய­மைக்­காக வெலி ஓய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட குக்குல் சமிந்­தவும் இரு பெண்­களும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அதனால் நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட விஷேட அனு­ம­திக்கு அமைய, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூவரில் உள்­ள­டங்கும், கடந்த பெப்­ர‌­வரி மாதம் பாலியல் துஷ்­பி­ர­யோகம் குறித்து முறைப்­பா­ட­ளித்த பெண்ணை சிறையில் வைத்தே பெண் பொலிஸ் சார்ஜன் சந்­தியா ஜய­தி­லக்க விசா­ரித்­துள்ளார். அப்­போது தான் பல உண்­மைகள் வெளிப்­பட்­டுள்­ளன.

‘மேடம் … நாம் ஒவ்­வொரு நாளும் வெலி ஓயாவில் இருந்து யாசகம் எடுக்க ஒவ்­வொரு பிர­தே­சங்­க­ளுக்கு செல்வோம்.  அந்த பய­ணத்தில் சமிந்த, அவ­ரது இரு மனை­வி­மா­ரான (சட்ட ரீதி­யற்ற) நானும் மற்­றைய பெண்ணும் எனது சிறிய மகளும் செல்வோம். நாம் முச்­சக்­கர வண்­டி­யி­லேயே செல்வோம். எமக்கு பொய் கூறி யாசகம் எடுக்க சமிந்­தவே கூறுவார். எனது மாமனார் அதா­வது சமிந்­தவின் தந்தை இறந்­து­விட்­ட­தா­கவும் அவர் குறித்த தான விட­யங்­க­ளுக்கு எனக் கூறி வர்த்­த­கர்கள், பொது­மக்­க­ளிடம் யாசகம் பெறுவோம்.

குழந்­தையை காட்டி, அவ­ருக்கு ஒரு­வகை அரிய வகை நோய் பீடித்­த­தா­கவும், அந் நோய் குண­ம­டைந்தால், மக்­க­ளிடம் யாசகம் பெற்று நேர்ச்சை கடன் நிறை­வேற்­று­வ­தாக வேண்டி இருந்­த­தா­கவும், தற்­போது நோய் குண­ம­டைந்­ததால் நேர்ச்சை கடனை நிறை­வேற்ற யாசகம் பெறு­வ­தா­கவும் கூறி ஏமாற்றி மக்­க­ளிடம், வர்த்­த­கர்­க­ளிடம் பணம் பெறுவோம்.  இப்­படி ஏமாற்றி ஒரு நாளைக்கு பெரும் தொகை பணத்தை நாம் சம்­பா­தித்தோம். சமிந்த கூறி­ய­தா­லேயே அவற்றை  நாம் செய்தோம். அவ­ருக்கு ஊரில் குக்குல் சமிந்த என்ற பெயரும் உள்­ளது.

கடந்த பெப்­ர­வரி மாதம் நாம் ஹொரவ்­பொத்­தான நக­ருக்கு யாசகம் பெற சென்ற போது, அங்கு துணிக்­கடை முத­லாளி ஒரு­வ­ருடன் பிரச்­சினை ஏற்­பட்­டது. அப்­போது முச்­சக்­கர வண்­டியில் இருந்த சமிந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து, குறித்த முத­லா­ளியை கொல்­வ­தாக மிரட்­டினார். அப்­போது அந்த முத­லாளி, பொலி­ஸா­ருக்கு அறி­வித்து எங்­களை பிடித்துக் கொடுப்­ப­தாக கூறினார்.

இத­னை­ய­டுத்து சமிந்த அவ­ச­ர­மாக எங்­களை அழைத்­துக்­கொண்டு அங்­கி­ருந்து வெளி­யே­றினார். அந்த முத­லாளி பொலி­ஸா­ரிடம் செல்ல முன்னர் நாம் முந்­திக்­கொள்ள வேண்டும் என சமிந்த கூறினார்.

யாசகம் எடுக்க துணிக்­கடை ஒன்­றுக்கு சென்ற போது, அதன் முத­லாளி என்னை ஓர் அறைக்கு இழுத்துச் சென்று துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக முறைப்­பா­ட­ளிக்­கு­மாறு சமிந்த கூறினார். அத­னையே நான் செய்தேன். என் முறைப்­பாட்­டுக்கு அமைய அந்த முத­லா­ளியை பொலிஸார் கைது செய்­தனர்.  விளக்­க­ம­றி­ய­லிலும் வைத்­தனர். எனக்கு வைத்­திய பரி­சோ­த­னைக்கு வரு­மாறு பல முறை கூறியும் நான் செல்­ல­வில்லை. ஏனென்றால் நான் செய்த பொய் முறைப்­பாடு வெளிப்­பட்டு விடும் என்ற‌ பயத்தில் நான் செல்­ல­வில்லை.’ என குறித்த பெண் விசா­ர­ணை­களின் போது வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

இந் நிலையில்,  கெப்­பித்­தி­கொல்­லாவ பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே. விக்­ர­ம­நா­யக்­கவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் எதி­ரி­சிங்­கவின் நெறிப்­ப­டுத்­தலில் பொறுப்­ப­தி­காரி தயா­நந்­தவின் ஆலோ­ச­னையில் மேல­திக விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.

இதன்­போது வெலி ஓய பகு­திக்கு ஹொரவ்­பொத்­தான பொலிஸ் நிலைய குழு­வொன்று சென்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­துடன், குக்குல் சமிந்த இரு பெண்கள், குழந்­தை­யுடன் ஒவ்­வொரு நாளும் காலையில் முச்­சக்­கர வண்­டியில் வெளியே செல்­வதும் இரவு வேளையில் வீடு திரும்­பு­வ­தா­கவும் பிர­தேச மக்கள் தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அவர்கள் என்ன செய்­கி­றார்கள், என்ன தொழில் செய்­கி­றார்கள் என தெரி­யாது எனவும், எப்­போதும் அவர்­க­ளது கையில் பணப் புழக்கம் இருந்­த­தா­கவும் அய­ல­வர்கள்  பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.

இந் நிலையில், குக்குல் சமிந்த இரு பெண்­க­ளுடன் யாசகம் எடுக்கச் செல்லும் இடங்­களில் பெண்­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக கூறி மேலும் பல­ரிடம் பணம் பறித்­தி­ருக்­கலாம் எனவும் மானத்­துக்கு பயந்து பலர் அவற்றை பொலிஸில் முறை­யி­டாமல் இருந்­தி­ருக்­கலாம் எனவும் சந்­தே­கிக்கும் பொலிஸார் அது குறித்தும் விசா­ரித்து வரு­கின்­றனர்.

உண்­மையில், ஹொ   ரவ்­பொத்­தான துணிக்­கடை மெள­லவி கைது செய்­யப்­பட்ட போது அவரை விசா­ரித்த பொலிஸார் சரி­வர அவர்­க­ளது கட­மை­களை செய்­த­னரா என்ற கேள்வி எழு­கின்­றது. காரணம், வெறு­மனே முறைப்­பாட்­டாளர் கொடுத்த தக­வலை மட்டும் வைத்­துக்­கொண்டு வேறு எந்த சாட்­சி­களும் இன்றி அவர் கைது செய்­யப்­பட்­ட­மையே அவ்­வா­றான சந்­தே­கத்­துக்கு கார­ண­மாகும். இது தொடர்பில் அப்­போது கைது செய்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நிறு­வன மட்ட நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும்.

அவ்­வாறு குறித்த மெள­லவி கைது செய்­யப்­பட்­டது முதல் தன் மீதான துஷ்­பி­ர­யோக குற்­ற‌ச்­சாட்டை மறுத்து வந்­துள்ளார்.  கடைக்குள் வைத்து துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக முறைப்­பாட்டில் இருந்த போதும் குறித்த தினம் அக்­கடை மூடப்­பட்டே இருந்­துள்­ளது. அது தொடர்பில் கூட அப்­போது பொலிஸார் அவ­தானம் செலுத்தி இருக்­க­வில்லை.

இது தொடர்பில் விடி­வெள்ளி ஆராய்ந்த போது, குறித்த கைது நடக்கும் போது ஹொரவ்­பொத்­தானை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி இருக்­க­வில்லை எனவும் பெண் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரே அந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­தது.  எனவே  மெள­ல­வியின் கைது தொடர்பில்  உரிய பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நிறு­வன மட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும்.

இத­னை­விட, பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டி­ருந்­த­போதும், குற்­றச்­சாட்டை முன் வைத்த பாதிக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்ட பெண்ணை இது­வரை சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தாமை விசா­ர­ணையின் பாரிய குறை­பா­டாகும்.

உண்­மையில் மெள­ல­வியை நீதி­மன்றில் ஆஜர் செய்­த­போது, சட்ட வைத்­திய அதி­கா­ரி­யிடம் குறித்த பெண்ணை முன்­னி­றுத்தி அறிக்கை பெற நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த போதும், அன்­றைய தினம் குறித்த பெண்­ணுக்கு மாத­விடாய் காலம் என்­பதால் அந் நட­வ­டிக்கை தாம­தித்­துள்­ளது. எனினும் அதன் பின்னர் அவர் சட்ட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கவே இல்லை.

பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஒரு அப்பாவி மெளலவி சந்தித்த கொடுமைகள் ஏராளம். இதனால் அவர் சமூக அந்தஸ்துக்கு பாரிய இழுக்கு ஏற்பட்டதுடன் அவரது குடும்பத்தினர் பிள்ளைகள் முகம் கொடுத்த மன உளைச்சல் நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறுவது?

தற்போது, இச்சம்பவத்தின் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, இந்த துஷ்பிரயோக சம்பவம் ஒரு நாடகம் என்பதையும், அதற்கும் மெளவிக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்பதையும் அறிவித்து, மெளலவியை முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதே நேரம் பொய் முறைப்பாடு தொடர்பில்  குறித்த முறைப்பாட்டை அளித்த பெண்ணுக்கும், அதற்கு உடந்தையாக இருந்த குக்குல் சமிந்தவுக்கும் எதிராக பிறிதொரு வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.