திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை
மீள் திருத்த விண்ணப்ப காலமும் நிறைவு; சட்ட நடவடிக்கை தொடர்பில் பேச்சு
(எப்.அய்னா)
பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவை இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் 6 நாட்களில் பெறுபேறுகளை வெளியிடுவதாக கல்வி அமைச்சரும், பரீட்சைகள் திணைக்களமும் உறுதியளித்திருந்த போதும் அக்கால எல்லை நிறைவடைந்துள்ள பின்னணியிலும் இன்னும் அப்பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை என பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் தெரிவித்தனர்.
அத்துடன் உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பிலான மீள் திருத்த விண்ணப்பமானது கடந்த 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில், அக்கால எல்லையும் தற்போது நிறைவடைந்துள்ளது. அவ்வாறு எனில் மீள் திருத்த விண்ணப்ப காலப்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 70 மாணவிகளுக்கும் அதற்கான சந்தர்ப்பமும் இல்லாமல் போயுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இந்த பெறுபேறுகள் விடயத்தில், சட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர். அரசியல் ரீதியிலான பேச்சுக்கள் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், ரிட் மனு ஊடாகவோ அல்லது அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஊடாகவோ பெறுபேறு தொடர்பில் தீர்வைப் பெறுவது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.- Vidivelli