அளுத்கம, பேருவளை வன்முறைகளுக்கு 10 வருடங்கள்: அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17 இல்
(எப்.அய்னா)
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் நடை பெற்று 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் இன்னும் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
நான்கு மனுதாரர்கள் சார்பில் 4 பேரின் வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் வாதமும், பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபரின் வாதமும் எஞ்சியுள்ளது.
இம்மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்கம வன்முறைகளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமிடங்களும் ஆற்றிய உரை (அபசரண உரை என அறியப்படும் உரை) ஏற்கனவே உயர் நீதிமன்றில் காணொளியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காணொளியின் திரை வசன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, ஞானசார தேரருக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், அவ்வாணைக் குழு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்டவர்கள் ஆஜராகின்றனர்.
ஏற்கனவே மனுக்கள் மீதான விசாரணையின் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் வாதங்களை முன் வைத்துள்ளனர்.
பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க ஆஜராகின்றார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி தர்காநகர் அதிகாரிகொட, வெலிபிட்டிய, சீனன் வத்த, துந்துவ, பேருவளை, வெலிப்பன்னை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் பதிவாகின. இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுவின் பிரதிவாதிகளாக அப்போதைய பொலிஸ் மா அதிபர், அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, அப்போதைய பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்ளியூ.சி.என். ரணவன, அபோதைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த வன்முறைக் காரணமாக 48 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் (சூட்டுக் காயங்கள் உட்பட), 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், 2248 முஸ்லிம்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்ததாகவும், 79 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் (17 வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிப்பு) மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையிலேயே தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், வன்முறைகளுடன் தொடர்புடையோருக்கு, அதற்கு காரணமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli