எழுபது வருட சமய, சமூகப் பணியில் கால்பதிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

0 307

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான இலங்கை முஸ்­லிம்­களின் இஸ்­லா­மிய சிந்­தனை, ஆன்­மீக மற்றும் சமூக அபி­வி­ருத்­தியில் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளுக்கு இருக்­கின்ற வகி­பா­கத்­தினை எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது. இந்த வகையில், 1954 ஜூலை 18ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி தனது சமய, சமூகப் பய­ணத்தில் எழு­ப­தா­வது அக­வையில் கால்­ப­தித்து நிற்­கின்­றது.

மத ரீதி­யான வழி­காட்­டல்­களும், ஒழுக்கப் போத­னை­க­ளுமே நல்ல சமூ­கங்­களை இவ்­வை­ய­கத்தில் உரு­வாக்­கி­யுள்­ளன. இஸ்­லாத்தின் வழி­காட்­டல்­களை மக்­க­ளுக்கு எத்­தி­வைப்­பதும், அதன் படி வாழ்­வ­தற்கு வழி­காட்­டு­வதும் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி அன்று முதல் இன்று வரை செய்­து­வரும் மிகப் பிர­தான பணி­யாகும். தனது சஞ்­சி­கைகள், நூற்கள், உரைகள், கலந்­து­ரை­யா­டல்கள், இஜ்­தி­மாக்கள் ஊடாக சமூ­கத்­திற்குத் தேவை­யான இஸ்­லா­மிய அறி­வையும் சிந்­த­னை­யையும் வழங்கும் ஜமா­அத்தே இஸ்­லாமி, ஊர் மட்­டத்தில் இயங்கும் தனது கிளைகள் ஊடாக சிறுவர் முதல் முதியோர் வரை இஸ்­லாத்தைக் கற்­ப­தற்கும், அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­மான ஏற்­பா­டு­களை கொண்டு இயங்­கு­கின்­றது. அல்-­குர்­ஆனைக் கற்றல், சமூக ஒற்­றுமை, கூட்டு ஸக்காத், பண்­பா­டு­க­ளோடு வாழ்தல், உள்­ளத்தைப் பண்­ப­டுத்தல், உல­கத்­திலும் மறு­மை­யிலும் வெற்­றி­பெறல் ஆகி­யன ஜமா­அத்தே இஸ்­லாமி சமூ­க­ம­யப்­ப­டுத்­திய சிந்­த­னை­களில் சில­வாகும்.

1960-1980களில் இலங்கை முஸ்­லிம்­களில் உலகக் கல்­வியைக் கற்­ற­வர்­க­ளுக்கும் இஸ்­லா­மிய மார்க்­கத்­திற்­கு­மி­டையில் ஓர் இடை­வெளி இருந்­து­வந்­ததை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஒரு­கட்­டத்தில் அவர்கள் மதத்தை மறுக்­கின்ற மாற்று சிந்­த­னை­களின் தாக்­கத்­திற்கு உள்­ளாகும் சூழல் காணப்­பட்­டது. ஜமா­அத்தே இஸ்­லாமி வஹியை அறி­வோடு இணைத்து இஸ்­லாத்தை தத்­து­வார்த்­த­மாக முன்­வைத்த முறை, ஆன்­மீ­கத்தை வலி­யு­றுத்தி உல­கத்தை புறக்­க­ணிக்­காத அதன் நடு­நிலை சிந்­தனை என்­ப­வற்றால் படித்த வர்க்கம் இஸ்­லாத்­தோடு நெருங்­கு­வ­தற்கும் சமூக மாற்­றத்தில் பிர­தான பங்­கா­ளர்­க­ளாக மாறு­வ­தற்­கு­மான வாய்ப்பும் சூழலும் உரு­வா­னது.

ஜமா­அத்தே இஸ்­லாமி சமூக மேம்­பாட்­டுக்­காக இந்­நாட்டில் முன்­வைக்கும் திட்டம் வாழ்வின் சகல மட்­டங்­க­ளையும் அனைத்து பிர­ஜை­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாகக் காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்­கலாம். தனி மனிதன், குடும்பம், கிராமம், சமூகம், நாடு என்ற அனைத்து தளங்­க­ளையும் அது செயற்­பாட்­டுக்­கு­ரிய அல­கு­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றது.

மேலும், சமூ­கத்தின் கல்வி, பொரு­ளா­தாரம், சுகா­தாரம், அர­சியல் என்­பவை மேம்­பட வேண்டும் என்ற சிந்­த­னையை ஜமா­அத்தே இஸ்­லாமி முன்­வைப்­ப­தோடு அதற்­கான செயற்­திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. இத்­த­கைய செயற்­திட்­டங்கள் ஜமா­அத்தே இஸ்­லாமி என்ற தனி நிறு­வ­னத்தின் ஊடாக அன்றி சமூ­க­மாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யவை என்­பதை அது உறு­தி­யாக நம்­பு­கின்­றது. எனவே, இத்­த­கைய இலக்­கு­க­ளோடு செயற்­படும் தனி மனி­தர்­க­ளோடும் நிறு­வ­னங்­க­ளோடும் இணைந்து பணி­யாற்­று­வதை அது ஆத்­மார்த்த திருப்­தி­யா­கவும் தேவை­யா­கவும் உணர்­கின்­றது.

பல்­லி­னங்கள் வாழும் நாடு இலங்கை என்ற வகையில் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பரஸ்­பர நல்­லெண்­ணத்­தையும், ஐக்­கி­யத்­தையும் வளர்ப்­ப­தற்­கான செயற்­பா­டு­க­ளையும் ஜமா­அத்தே இஸ்­லாமி முன்­னெ­டுப்­பதைக் காணலாம். சிங்­கள, தமிழ் சமூ­கங்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள், விஜ­யங்கள் என்­ப­வற்றை அது செயற்­ப­டுத்தி வரு­வ­தோடு இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்­களைக் களை­வ­தற்­கான பல்­வேறு முயற்­சி­க­ளையும் அது மேற்­கொண்டு வரு­கின்­றது.

அத்­தோடு, நாட்டின் பொது­வான நல­னுக்­கான சூழல் பாது­காப்பு, மனித உரிமை, சக­ல­ருக்கும் நீதி ஆகிய விட­யங்­களில் அது பல்­வேறு தரப்­பி­ன­ரோடும் ஒத்­த­ழைப்­போடு செயற்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்­கலாம்.

ஏழு தசாப்­தங்கள் கடந்தும் ஓர் அமைப்பு நிலைத்து நின்று செயற்­ப­டு­வ­தென்­பது ஒரு சாதாரண விடயமல்ல. பல்வேறு கஸ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இந்த நீண்ட பயணத்தை ஜமாஅத்தே இஸ்லாமி கடந்துவந்திருக்கிறது. அதன் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்மாதம் (ஜூன்) 29ஆம் திகதி அதன் தேசிய அங்கத்தவர் மாநாடு பெரும் ஏற்பாடுகளுடன், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அதன் 1500ற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் மற்றும் 600ற்கு மேற்பட்ட பிரமுகர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற இருப்பது விசேட அம்சமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.