மெளலவி ஏ.ஜி.எம்.ஜலீல் (மதனி),
மஃஹதுஸ் ஸுன்னா அறபுக்கல்லூரி, காத்தான்குடி
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களும் இஸ்லாத்தின் பார்வையில் மிகச் சிறந்த தினங்களாகும். ரமழான் மாதத்தின் பிந்திய 10 தினங்களும் சிறப்பு பெறுவதற்கு லைலத்துல் கத்ர் இரவு காரணமாக இருப்பது போல் துல்ஹஜ்ஜின் முதல் 10 இரவுகளும் சிறப்பு பெறுவதற்கு அதில் ஒன்பதாம் தினத்தில் இடம்பெறும் அரபா தினம் காரணமாகும். ஆகவேதான் துல்ஹஜ்ஜின் முதல் பத்து தினங்கள் ரமழானின் பிந்திய பத்து இரவுகளுக்கு சமமானதாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
நபியவர்கள் கூறுகின்றார்கள்.. மனிதர்கள் துல்ஹஜ் முதல் பத்தில் செய்யும் அமல்களை அல்லாஹ் விரும்புவதுபோல் எந்தக் காலத்திலும் அவ்வளவு அதிகம் அமல்களை விரும்புவதில்லை என்ற போது இறைபாதையில் போரிடுவதை விடவும் இக்காலப்பகுதியில் இபாதத் செய்வது அல்லாஹ்வுக்கு விருப்பமானதா? என சஹாபாக்கள் வினவ, ஆமாம் ஜிகாதை விடவும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு இக்காலப் பகுதியில் விருப்பமானவை தான். போருக்கு புறப்பட்டு போரிலேயே ஷஹீதாகிவிடும் உயிர்த்தியாகியைத் தவிர.. எனவே அந்நாட்களில் அதிகம் தக்பீர் தஹ்லீல், திக்ர் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். (நூல்: புகாரி)
அறபா தினத்தன்று அல்லாஹுத்தஆலா கீழ் வானத்துக்கு இறங்கி வந்து அரஃபா மைதானத்தில் ஒன்று கூடியிருக்கும் மக்களைக் கண்டு பூரிப்படைந்து மலக்குகளிடம் இவர்கள் எதற்காக இங்கு ஒன்று கூடி இருக்கின்றார்கள் என்று பெருமை பாராட்டி பேசுகின்றான் (முஸ்லிம்)
அரஃபா நாளான ஒன்பதாம் தினத்தன்று ஹஜ்ஜுக்கு செல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். நபியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்பதிலும் ஆஷூரா தினத்திலும் மற்றும் ஒவ்வொரு மாதத்தின் 3 தினங்களும் நோன்பு நோற்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (நூல் : அபூதாவூத்)
அவ்வாறே நபில் தொழுகைகள் திகிர், திலாவத், தஸ்பீஹ், இஸ்திஃபார், தக்பீர் போன்றவற்றில் இந்நாட்களில் நேரத்தை செலவிடுவது மிகச் சிறந்ததாகும்
உழ்ஹிய்யா தொடர்பான சட்டங்கள்
தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஒரு முஸ்லிம் நிறைவேற்ற வேண்டிய இபாதத்களில் முக்கியமானது உழ்ஹிய்யாவாகும். ஹஜ் பெருநாளன்றோ அல்லது அதற்கு அடுத்த மூன்று தினங்களிலோ அல்லாஹ்வுக்காக அறுத்து கொடுக்கப்படும் குர்பானி ஆடு, மாடு ஒட்டகங்களுக்கு உழ்ஹிய்யா எனப்படும். நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்து வருடகாலத்தில் ஒரு தடவை கூட தவறாது நிறைவேற்றி வந்த முக்கியமான ஒரு சுன்னத்தாக இது இருக்கின்றது. இதனாலேயே சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாய கடமை என்றும் வலியுறுத்துகின்றனர். இருப்பினும் அது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதே ஏராளமான அறிஞர்களின் கருத்தாகும். வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு வருடமும் இதனை நிறைவேற்றுவது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத் ஆகும்.
உழ்ஹிய்யா யாருக்காக ?
உழ்ஹிய்யா பற்றிய தவறான நம்பிக்கை நம்மவர்களிடத்தில் காணப்படுகின்றது. அதாவது நமது நாட்டு முஸ்லிம்களில் அதிகமானோர் குர்பான் கொடுப்பது மரணித்தவர்களுக்காக செய்யப்படும் ஒரு கிரியையென தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மாறாக இது உயிரோடு இருப்பவர்களுக்காக நிறைவேற்றப்படும் ஒரு கிரியை ஆகும்.
நாம் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் குர்பானி கொடுக்கும் போது மரணித்தவர்களான எமது உறவினர்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்ளலாம். தவிர மரணித்தவர்களுக்கென பிரத்தியேக உழ்ஹியா கொடுப்பதற்கு ஸுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அது மரணித்தவருக்காக ஸதகா செய்ததாகவே ஆகும்.
அவ்வாறே உழ்ஹிய்யா ஒருவருக்கு ஆயுளில் ஒரு தடவை தான் என்றும் எம்மில் சிலர் எண்ணுகின்றனர். இதுவும் தவறாகும். வசதியிருந்தால் ஒவ்வொரு வருடமும் இதனை நிறைவேற்றுவது சுன்னத்தாகும்.
உழ்ஹிய்யா கொடுக்கும்
பிராணிகள் யாவை?
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் மாத்திரமே உழ்ஹிய்யாக் கொடுக்க முடியும். ஒரு ஆட்டை ஒரு நபருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் கொடுக்கலாம் அவ்வாறே ஒரு மாட்டையோ ஒட்டகத்தையோ ஒருவர் தனக்காக- தன் குடும்பத்திற்கு மாத்திரமும் விரும்பினால் ஏழு பேர் வரைக்கும் கூட்டு சேர்ந்தும் கொடுக்கலாம். அவ்வேழு நபர்களுடன் அவர்களின் குடும்பங்களும் அடங்கும். (பதாவா இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹ்.)
நபியவர்கள் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை அறுத்து உழ்ஹிய்யாக் கொடுத்தார்கள். அதன் மாமிசத்தை அவர்களும் உண்டு ஏனையவர்களுக்கும் கொடுத்தார்கள் (ஆதாரம் திர்மிதி)
நபியவர்கள் ஒட்டகம் மற்றும் மாட்டில் எங்களில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று கட்டளையிட்டார்கள் (ஆதாரம்: முஸ்லிம்)
ஆகவே, மிகச் சிறந்தது ஒருவர் ஒரு ஒட்டகத்தை கொடுப்பதாகும். அடுத்தது மாட்டை கொடுப்பதும், அதற்கடுத்தது ஆட்டை கொடுப்பதும் அதற்கடுத்ததாக மாடு அல்லது ஒட்டகத்தில் கூட்டுச் சேர்வதும் சிறந்ததாக கணிக்கப்படும்.
உழ்ஹிய்யா பிராணியில் கவனிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள்
1-. குறித்த பிராணி குறிப்பிட்ட வயதெல்லையை அடைந்திருக்க வேண்டும். அதாவது செம்மறி ஆடாயின் ஆறு மாதங்களும் வெள்ளாடாயின் ஒரு வருடமும், மாடு இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாகவும் ஒட்டகம் ஐந்து வருடங்கள் பூர்த்தியானதாகவும் இருக்க வேண்டும். குறித்த வயதெல்லையை அடைந்த பிராணி கிடைக்காவிடில் அதைவிட குறைந்த வயது பிராணியை அறுப்பதில் தவறில்லை என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
2-. பிராணி அங்க குறைபாடு அற்றதாக இருக்க வேண்டும். அதாவது குறித்த குறையினால் அதன் மாமிசமோ அல்லது அதன் பெறுமதியோ குறையாத அளவுக்கு குறைபாடுகள் அற்றதாக இருக்க வேண்டும். சிறு காயங்கள் கீறல்கள், தழும்புகள் ஏற்பட்டிருப்பதில் பிரச்சனை இல்லை.
நபியவர்கள் கூறினார்கள்…
நான்கு குறைபாடுகள் உள்ள பிராணியை உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. தெளிவான குருடு, தெளிவான முடம், தெளிவான நோயுற்றது, கடுமையாக மெலிந்தது ஆகியவைகளாகும் என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஉ)
3.-அறுக்கப்படும் பிராணியின் எப்பகுதியையும் விற்பதோ கூலியாக கொடுப்பதோ கூடாது. நபி அவர்கள் கூறினார்கள் குர்பானி பிராணியின் தோலை யாராவது விற்றால் அவருக்கு குர்பானியே கிடையாது. (ஆதாரம்: அல் ஜாமிஉ)
4-. குர்பானி பிராணியை குறித்த நேர எல்லைக்குள் அறுக்க வேண்டும். அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியது முதல் அன்றைய தினமும் அதற்கடுத்த அய்யாமுத்தஷ்ரீக் தினங்களான துல்ஹஜ் 11,12,13ம் தினங்களிலும் மாலை நேரம் வரை உழ்ஹிய்யாப் பிராணியை அறுக்க முடியும். முதல் தினத்தில் அறுத்து விடுவது சிறந்ததாகும்.
நபியவர்கள் கூறினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் யாராவது குர்பானி பிராணியை அறுத்து விட்டால் அவர் வேறொரு பிராணியை குர்பானி கொடுக்கட்டும். (ஆதாரம்: புகாரி)
அலி ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அறுக்கும் தினங்களாவன பெருநாள் அன்றும் அதற்கடுத்த 3 தினங்களும் ஆகும். ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் உடனடியாக குர்பானி கொடுத்து அப்பிராணியின் மாமிசத்தில் இருந்து புசிப்பது நபியவர்கள் செய்து வந்த வழிமுறையாகும்.
நபியவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தன்று காலை உணவு அருந்தாமல் தொழச் செல்வதில்லை. ஹஜ் பெருநாளன்று காலை உணவு உண்ணாமல் தொழுகைக்குச் சென்று தொழுதுவிட்டு வந்து குர்பானி கொடுத்து பிராணியின் மாமிசத்திலிருந்து உண்பார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)
5.- குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதிகளாக பிரித்து ஒன்றை தனக்கும் அடுத்ததை உறவினர்களுக்கும் மற்றையதை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது விரும்பத்தக்க வழிமுறையாகும்.
6-. உழ்ஹிய்யா குர்பானி கொடுக்க நிய்யத் வைத்தவர் துல்ஹஜ் தலைப்பிறை பிறந்ததிலிருந்து குர்பானி பிராணியை அறுக்கும் வரைக்கும் தனது உடலின் முடிகள் ரோமங்கள், நகங்களை அகற்றாமல் இருப்பது நபி வழியாகும்.
நபியவர்கள் கூறுகின்றார்கள்.. உங்களில் குர்பானி கொடுக்க நிய்யத்து வைத்தவர் தலைப்பிறை பிறந்ததிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது உடலிலுள்ள முடிகள் ரோமங்களை அகற்றாமல் பார்த்துக் கொள்ளட்டும். (ஆதாரம் :முஸ்லிம்)
குர்பானி பிராணியை உரியவரே தன் கையினால் அறுப்பது சிறந்ததாகும். அவர் விரும்பினால் அறுப்பதற்கு வேறு ஒருவரையும் பொறுப்பாக்கலாம். அவ்வாறே தனது குர்பானி பிராணியை வாங்குவதற்கும் அறுத்து விநியோகிப்பதற்கும் ஒருவரை நியமிப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் ஹக்கீம் பின் ஹிஸ்ஸாம் எனும் நபித்தோழரிடம் ஒரு தீனாரை கொடுத்து தனக்காக ஒரு குர்பானி பிராணியை வாங்குமாறு பணித்தார்கள். (நூல் :அஹமத்)
அவ்வாறே நபியவர்கள் இறுதி ஹஜ் ஜின் போது குர்பானிக்காக வந்திருந்த பிராணிகளில் 63 பிராணிகளை தனது கைகளினாலேயே அறுத்தார்கள். அதன் பின்பு கத்தியை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து மீதி பிராணிகளை அறுக்குமாறு பணித்தார்கள் (நூல்: முஸ்லிம் )
எனவே இந்த துல்ஹஜ் மாதத்தில் அபார நன்மைகள் செய்து இறையருளைப் பெற முயற்சிப்போமாக. ஆமீன்.- Vidivelli