எப்.அய்னா
பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டபோது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. எனினும் உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டு இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்த 70 மாணவிகளின் பெறுபேறுகள் தொடர்பிலான விவகாரத்தில் இன்னும் தீர்வு கிட்டவில்லை.
உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பிலான மீள் திருத்த விண்ணப்பமானது கடந்த 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு எனில் மீள் திருத்த விண்ணப்ப காலப்பகுதி கூட இன்னும் 6 நாட்களில் நிறைவடையும் நிலையில், திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் அடிப்படை பெறுபேறுகள் கூட இதுவரை வெளியிடப்படாமை கவலையளிக்கிறது.
இந்த விடயம் பாராளுமன்றத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் அரசியல் ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்தும் இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை.
எனவே குறித்த மாணவிகளின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்திக் குழு உள்ளிட்ட பாடசாலை மாணவிகளும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய வேண்டும்.
உண்மையில் இந்த விடயத்தில் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், புனித ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மூதூரைச் சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்து பாரிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 10 முஸ்லிம் மாணவிகளும் அதே மண்டபத்தில் பரீட்சை எழுதியுள்ளனர். அவர்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இவற்றை பார்க்கும்போது, திருமலை ஸாஹிரா கல்லூரி திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளது என பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே இந்த விடயத்தின் பாரதூர தன்மையை விளங்கி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் திருமலை சாஹிரா கல்லூரிக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர் மற்றும் அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடியிருந்தார்.
அதே நேரம் நேற்று (12) பாராளுமன்ற உறுப்பினரும் மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்சுக்கு சென்று பேச்சு நடாத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்,
“உயிரியல் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளில் தோற்றிய இந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு, இதுவரை வெளிவராதுள்ளன. இதனால், இந்த மாணவிகள் வேதனையுடனும் மன உளைச்சலுடனும் இருக்கின்றனர். திட்டமிட்டு இந்தச் சதி இடம்பெற்றுள்ளது. சுமார் பத்து வருடங்களாக, தொடர்ச்சியாக வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கி வரும் திருமலை ஸாஹிரா கல்லூரியின் மீது, குறிவைத்து இனவாதம் பாய்ந்துள்ளது. இந்தப் பாடசாலையில் உள்ள திறமையான மாணவர்களை இருட்டடிப்புச் செய்யும் நோக்கில், தவறிழைக்காத இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
பரீட்சை பிரதி ஆணையாளருடன் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் குறித்த மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகும் என்று அவர் கூறியிருக்கின்றார். அவ்வாறு பெறுபேறுகள் வராவிட்டால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் குரல் கொடுப்போம். நீதிமன்றத்தையும் நாடுவோம். எங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று கூறினார்.
உண்மையில் பரீட்சை எழுத பர்தா அணிந்து சென்ற மாணவிகளுக்கு அவர்களது காதையும் முகத்தையும் காட்டுமாறு கூறப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்கள சுற்றுநிருபத்துக்கு அமைய இதற்கான கட்டளை பரீட்சை மண்டப மேற்பார்வையாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாணவிகள் அக்கட்டளைகளை பின்பற்றியுள்ளதாக கூறுகின்றனர். 70 மாணவிகளில் 68 மாணவர்கள் பர்தாவை கழட்டிவிட்டு, கையில் வைத்திருந்த துப்பட்டாவினால் தலையை மறைத்துக்கொண்டு பரீட்சை எழுதியுள்ளனர். ஏனைய இரு மாணவிகளும் தமது பர்தாவை கழட்டிவிட்டு, அதை மீண்டும் தலையில் போட்டுள்ளனர். எல்லோரும் காதையும் முகத்தையும் காட்டியவர்களாகவே அம்மாணவிகள் பரீட்சை எழுதியுள்ளனர். இவ்வாறான நிலையிலும் மேலதிகாரிகளில் ஒருவர் மாணவிகளை பார்த்து, உங்களது பரீட்சை பெறுபேறுகள் வருவது நிச்சயம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது மாணவிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் நடவடிக்கை மட்டுமன்றி அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான சூழலை மாற்றி அவர்களை நெருக்கடிக்குள் அல்லது அழுத்தத்துக்குள் தள்ளும் நடவடிக்கையும் கூட. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியமாகும்.
அத்துடன், பரீட்சை முடிவடைந்து சில நாட்களின் பின்னர், குறித்த மாணவிகள் கொழும்பில் உள்ள பரீட்சை திணைக்களத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், சிலரின் வேண்டுகோளுக்கு அமைய முடிவுகள் மாற்றப்பட்டு, ஒரு சில பரீட்சை திணைக்கள அதிகாரிகள் திருகோணமலைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர், மாணவிகள் தவறிழைத்ததாக எழுத்து மூலம் எழுதித்தருமாறு மாணவிகளை அதிகாரிகள் பணித்துள்ளனர்.
எனினும், மாணவிகள் தாம் தவறிழைக்கவில்லை என்றும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் எழுதிக் கையொப்பமிட்டுள்ளனர். ‘பரீட்சை ஆணையாளர் என்ன முடிவெடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவோம்’ என்று எழுதித் தருமாறும் மாணவிகள் பணிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு எழுத முடியாது என மாணவிகள் மறுத்தபோது, ‘அவ்வாறு எழுதித்தராவிட்டால் உங்களது பரீட்சை பெறுபேறுகள் வெளிவராது’ என அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, வற்புறுத்தியதன் பின்னரே, மாணவியர் விசாரணை அதிகாரிகள் கூறியவாறு எழுதிக்கொடுத்துள்ளதாக மாணவிகள், அவர்களது பெற்றோரை சந்தித்த பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியிருந்தார்.
உண்மையில் பரீட்சை மண்டபத்தில் வைத்து மட்டுமல்லாது, அது தொடர்பில் விசாரணை செய்யவென வந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகளும் மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாகவே தெரிகின்றது. எனவே மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே அரசியல் ரீதியிலான பேச்சுக்களோடு நின்று விடாது இத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ேச்சுக்களோடு நின்று விடாது இத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, பரீட்சைகள் ஆணையாளர் என பொறுப்பு வாய்ந்த தரப்பினருடன் பேச்சுக்கள் நடாத்தப்பட்டும் இதுவரை குறித்த 70 மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில், மேன் முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.
அதே நேரம் பெறுபேறுகள் இனி மேல் வெளியிடப்பட்டாலும், நடந்த அநீதிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடுவதுடன், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து, எதிர்காலத்தில் இவ்வாறான அநீதிகள் நடக்காவண்ணம் பரிந்துரைகளையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.- Vidivelli