17 வயது மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 15 வயது மாணவன் மரணம்
ஹம்பாந்தோட்டை பகுதியில் அதிர்ச்சி சம்பவம்
எப்.அய்னா
ஹம்பாந்தோட்டை, சிப்பிக்குளம் சாமோதாகம பகுதியில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவரை 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் கடந்த வாரம் பதிவானது.
ஹம்பாந்தோட்டை சாஹிரா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்ற, ஆராபொக்க பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் பைரூஸ் ஆனிப் மொஹம்மட் எனும் மாணவனே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். கடந்த 5 ஆம் திகதி சிப்பிக்குளம், சாமோதாகம பகுதியில் உள்ள மேலதிக வகுப்புக்கு செல்லும்போது, குறித்த மாணவன் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு படு காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொலை குற்றச்சாட்டில் ஹம்பாந்தோட்டை ஆராபொக்க பகுதியைச் சேர்ந்த, சென். மேரி பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதுடைய எம். அவ்ஷான் எனும் மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி அம்மாணவன் ஹம்பாந்தோட்டை நீதிவான் ஓஷத மிகார மஹாரச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 20 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். அதன்படி அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில், நீதிமன்றின் உத்தரவின் பிரகாரம் சந்தேக நபரான மாணவன் ஏனைய கைதிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இந்தச் சம்பவம் தொடர்பில் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்னவின் ஆலோசனைக்கு அமைய ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த விசாரணைகளில், கிரிக்கட் போட்டி ஒன்று தொடர்பில் இரு மாணவர்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாட்டை மையப்படுத்திய வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சைகளுக்காக அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டப வளாகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியமை, இதனால் ஒரு மாணவன் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மோதல்களிடையே பரீட்சை வளாகத்துக்குள் புகுந்து மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறி மாணவன் ஒருவனின் தாய் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவமானது ஒரு தனிப்பட்ட குற்றச் சம்பவமாக பதிவாகியுள்ள போதும், எமது இளம் மாணவ சமூகத்தினரிடையே அண்மைக் காலமாக குழு மோதல்கள் பதிவாவதை நாம் அவதானிக்கின்றோம். குறிப்பாக அண்மையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சைகளுக்காக அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மண்டப வளாகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியமை, இதனால் ஒரு மாணவன் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மோதல்களிடையே பரீட்சை வளாகத்துக்குள் புகுந்து மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறி மாணவன் ஒருவனின் தாய் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை விடிவெள்ளி அறிக்கையிட்டிருந்தது.
இவ்வாறான பல குழு மோதல்கள், மாணவர்களிடையே ஆங்காங்கே பதிவாகின்றன. இது ஆரோக்கியமான நடவடிக்கை அன்று. குறிப்பாக, ஒழுக்கமுள்ள, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க உள்ள கட்டமைப்பான பாடசாலைகளில் கற்கும் போதே இவ்வாறு வன்முறை கலாசாரத்துக்கு வழியமைக்கும் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவர்களது எதிர்காலத்தையே பெரிதும் பாதிக்கும்.
அவ்வாறெனில் மாணவர்களை அவ்வாறான வன்முறைகள் நோக்கி செல்லாது தடுப்பதற்கான சூழலை அமைத்துக்கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
இதற்காக பாடசாலைகள் மட்டுமன்றி, ஊரின் பள்ளிவாசல்கள், சமூக நலன் சார் அமைப்புக்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வெறுமனே பாடப் புத்தகத்தை மட்டும் கற்றுக்கொடுக்கும் இடங்களாக பாடசாலைகள் இயங்காது, முரண்பாடுகளை தீர்க்கும் வழிமுறைகளை கற்பிக்கும், ஒன்றிணைந்து செயற்படும் திறனை வளர்க்கும், மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்கும், சகித்துக்கொள்ளும் விடயங்களை ஊக்குவிக்கும் இடங்களாகவும் செயற்பட வேண்டும்.- Vidivelli