மாவனெல்லையில் துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தி இனவாதிகள் தமது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றலாம் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
மாவனெல்லையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை குறித்து நேற்று வெலிகமன விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது விடயமாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், மாவனெல்லையில் துர்ப்பாக்கியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடியதாக கூறப்படும் மற்றுமொருவர் தேடப்பட்டு வருகிறார்.
இந்த விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை வைத்து இனவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த பொலிஸார் பொறுப்புடன் செயற்படுகின்றனர். அத்துடன் பிக்குகளும் உலமாக்களும் சமாதானத்துக்காக முன்னின்று உழைக்கின்றனர் என நன்றியுடன் கூறியே ஆக வேண்டும்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இதேவேளை மாவனெல்லை பிரதேசத்தில் சுமுகமான நிலையொன்றை ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னிடம் தெரிவித்தார்.
விசாரணைகளை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli