(எம்.ஐ.அப்துல் நஸார்)
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை யுத்தத்தில், யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகரித்தமையினை ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.
ஹமாஸ் அமைப்பு கடந்த திங்களன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறித்த தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்திருந்தது, 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபை யுத்த நிறுத்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஹமாஸ் அமைப்பு, காஸாவில் நிரந்தர யுத்த நிறுத்தம், இஸ்ரேலியப் படைகள் முற்றிலுமாக வெளியேறுதல் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஆகியவை பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கிறது’ எனத் தெரிவித்தது.
இத் திட்டத்தின் ஏனைய விதிகளான ‘காஸா பகுதியின் புனரமைப்பு, இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் திரும்புதல், மக்கள்தொகை மாற்றத்தை அல்லது காஸா பகுதியில் குறைப்புச் செய்வதை நிராகரித்தல் மற்றும் எமது மக்களுக்கு தேவையான உதவிகள் விநியோகம் போன்றவற்றையும் அங்கீகரிப்பதாக ஹமாஸ் மேலும் தெரிவித்துள்ளது.
‘எமது மக்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இயைபான இக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மத்தியஸ்தர்களுடன் ஒத்துழைக்க தமது குழுவின் தரப்பில் தயாராக இருப்பதாக’ குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவின் எதிர்ப்புக் குழுக்களால் நடத்தப்பட்ட பதிலடி நடவடிக்கையான அல்-அக்ஸா புயலுக்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் போரைத் தொடங்கியது, இதன் போது சுமார் 250 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
கொடூரமான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் இதுவரை பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 37,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்தும் கட்டாரும் கடந்த நவம்பரில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்து வந்தன, இதன் போது அல்-அக்ஸா புயலின் போது சிறைபிடிக்கப்பட்ட 105 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
மே மாத ஆரம்பத்தில், ஹமாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்தவும், சிறைபிடிக்கப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளை விடுவிக்கவும் உதவும் மற்றுமொரு போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் இஸ்ரேல் இந்த திட்டத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli