தேசிய மட்டத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகள் அல்லது பரீட்சார்த்திகள் தமது கலாசார ஆடையை அணிந்து தோற்றுவதில் தொடர்ச்சியாக சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகளின் ஆடையை மையப்படுத்தி ஏதோ ஒரு பரீட்சை மண்டபத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் பதிவாகாமல் இருப்பதில்லை. தற்போது இது ஒருபடி மேல் சென்று 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு வியாபித்துவிட்டது.
இம்முறை பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை எழுத தமது பாடசாலை சீருடையுடன் இணைந்ததாக பர்தா அணிந்து சென்ற மாணவிகளுக்கு அவர்களது காதையும் முகத்தையும் காட்டுமாறு கூறப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்கள சுற்றுநிருபத்துக்கு அமைய இதற்கான கட்டளை பரீட்சை மண்டப மேற்பார்வையாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாணவிகள் அக்கட்டளைகளை பின்பற்றியுள்ளதாக கூறுகின்றனர். 70 மாணவிகளில் 68 மாணவர்கள் பர்தாவை கழட்டிவிட்டு, கையில் வைத்திருந்த துப்பட்டாவினால் தலையை மறைத்துக்கொண்டு பரீட்சை எழுதியுள்ளனர்.
அதே பரீட்சை மண்டபத்தில் வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 10 முஸ்லிம் மாணவிகளும் பரீட்சை எழுதியுள்ளனர். அவர்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இவற்றை பார்க்கும்போது, திருமலை ஸாஹிரா கல்லூரி திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளது என பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இந்த விடயத்தில் பரீட்சைகள் திணைக்களம் மாணவிகளிடம் விசாரணை நடாத்தும் போதும் உரிய முறைமையினை பின்பற்றாது, பலாத்காரமாக, அச்சுறுத்தி சில விடயங்களை எழுதிப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடந்த இரு வாரங்களாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி, கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் என சகல தரப்புக்களுடனும் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் அவர்களின் பெறுபேறுகள் மட்டும் வெளியிடப்படவில்லை.
உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பிலான மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. ஆனால் இந்த 70 மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த 9 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் திருகோணமலைக்கு சென்று இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதும், நேற்று மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்சருடன் அமைச்சில் வைத்து பேசிய போதும் இன்னும் 6 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பதிலளிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெறுபேறுகளை வெளியிடுவதாக இடை நிறுத்தப்பட்ட தினத்திலிருந்து ஒவ்வொரு திகதியை அதிகாரிகள் கூறிய போதும் இன்னும் அவை வெளியிடப்பட்டதாக தெரியவில்லை.
அத்துடன் 6 நாட்களில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும், இந்த 70 பேருக்கு மீள் திருத்தல் குறித்து விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் இல்லை.
எனவே இந்த மாணவிகள் பரீட்சை பெறுபேறு இடை நிறுத்தம் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பரீட்சை திணைக்கள அதிகாரிகள் அல்லது கல்வி அமைச்சு, இம்மாணவிகளின் விடயத்தில் தொடர்ச்சியாக அசமந்த போக்குடனும், பொறுப்பற்றும், நியாயமின்றியும் செயற்படுமானால் முஸ்லிம் சமூகம் நீதிமன்றை நாட தயங்கக் கூடாது.
குறிப்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து, தேசிய மட்ட பரீட்சைகளின் போது எந்த தங்கு தடையும் இன்றி முஸ்லிம் மாணவர்கள் அவர்களது கலாசார ஆடைகளை அணிந்து தோற்ற அனுமதிக்கும் வகையிலான வழிகாட்டல்களை தீர்வாக பெற முஸ்லிம் சமூகம் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில், முஸ்லிம் மாணவர்களின் ஆடையை மையப்படுத்தி எந்த பழிவாங்கல்களுக்கும் அவர்கள் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.- Vidivelli