எப்.அய்னா
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவமானது, பணத்துக்காக முன்னெடுக்கப்பட்ட நாடகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் பிரத்தியேக விசாரணைகளில் இச்சந்தேகம் வலுத்துள்ளதாக, விசாரணையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இலங்கையில் 8 பேர் கைது :
அதன்படி இதுவரை (இக்கட்டுரை எழுதப்படும் போது) 8 பேர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. விசாரணை தகவல்கள் பிரகாரம் பெரும்பாலும், இலங்கையின் விசாரணைகளில் கைது செய்ய முடியுமான அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக அறிய முடிகின்றது. அதில் பிரதான சந்தேக நபராக தெமட்டகொடை பகுதியை சேர்ந்த ஒஸ்மன் ஜராட் புஷ்பகுமாரிடம் முன்னெடுத்த விசாரணையிலேயே, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டதாகவும் அதன் உண்மைத் தன்மை மற்றும் அந் நபர் தொடர்பில் பிரத்தியேக குழுவொன்று விசாரித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் என்று பார்க்கின்ற போது, முதலில் மாளிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் லேனை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிலாபம் பங்கெதெனிய பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் ஒஸ்மான் ஜெரோட்டின் உடன் பிறந்த சகோதரர்களாவர். பின்னர் மாவனெல்லையை சேர்ந்த்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் கொழும்பில் தனது உருவத்தை மாற்றி மறைந்திருந்த ஒஸ்மன் ஜெரோட்டும் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து வத்தளை பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காணொளிகளை வெளியிடும் இஸ்மத் என பலராலும் அறியப்படும் நபரும் உள்ளடங்குகின்றார்.
இந்திய தொடர்பு மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த விசாரணை :
குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு இந்திய தொடர்புகள் சில இருப்பதாக கூறும் புலனாய்வாளர்கள் அது தொடர்பிலும் அவரது வங்கிக் கணக்குக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பணம் தொடர்பிலும் விசாரிப்பதாக கூறுகின்றனர்.
அதே நேரம், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரினதும் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பிரத்தியேக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அதற்காக கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு சில கட்டளைகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
குஜராத் பொலிஸார் வருகை :
இந் நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான சிறப்புக் குழுவொன்று அடுத்த வாரம் அளவில் இலங்கை வரவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் விசாரிக்கவுள்ளதாகவும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று இந்தியா சென்று, அங்கு கைதாகி உள்ள நால்வர் தொடர்பில் விசாரிப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
பாதுகாப்பு செயலாளர் கூறுவதென்ன? :
இந்தியாவில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையினுடைய பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் கமல் குணரட்ன தகவல்களை வெளியிட்டுள்ளார். இது இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் பொது வெளியில் இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்ட உத்தியோகபூர்வ கருத்தாக கொள்ளப்படுகின்றது.
குறிப்பாக கடந்த இரு வாரங்களாக விடிவெள்ளி இந்த விவகாரம் தொடர்பில் வெளிப்படுத்திய விடயங்களை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவின் கருத்து மேலும் உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அம்பாறையில் நடந்த வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்பு செயலர் கமல் குணரட்ன, “நாங்கள் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதை கண்டறிந்துள்ளோம். அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர்” என இந்தியாவில் கைதான நலவர் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.
எவ்வாறாயினும் இந்தியாவில் கைதான நால்வருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடாத்தப்படுவதையும், அவ்விசாரணைகளில் அவர்களின் போதைப் பொருள் தொடர்புகள் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதையும் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டியிருந்தார்.
விசாரணைகளில் நடாத்தப்பட்ட சோதனைகள் :
அதன்படி சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் கட்டுப்பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனை மற்றும் கட்டுப்பாட்டில் சிறப்புக் குழு இவ்விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைகளில், மாளிகாவத்தை மற்றும் சிலாபம் பகுதிகளில் உள்ள இரு வீடுகள் விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக அதில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்கு இடமான கொடியொன்று எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமைக்கான எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அளித்துள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஒப்பீடு செய்து, எரிக்கப்பட்ட கொடி ஐ.எஸ். கொடியா அல்லது வேறு ஏதுமா என்பது தொடர்பில் பகுப்பாய்வுகள் நடக்கின்றன. இந்தியா செல்ல முன்னர், தற்போது அங்கு கைதில் உள்ள நால்வரும் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்காக பையத் எனும் உறுதி மொழியை எடுத்துக்கொண்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனினும் அது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகத்தின்படி விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஐ.எஸ். நாடகமொன்றினை பணத்துக் காக அரங்கேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகங்களை தோற்றுவிக்கவல்ல விடயங்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.- Vidivelli