சபீர் மொஹமட்
கண்டி, இலங்கையின் கலை கலாசார பண்பாட்டு அம்சங்களின் தாயகம். அந்த கண்டி நகரத்தின் மையத்திலிருந்து டி எஸ் சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து பழைய மாத்தளை வீதியை அடைந்தபோது கண்டிய நடனக்கலை பாடல்கள் காதைத் தொட்டது. பாடல்கள் வந்த திசைநோக்கி கால்கள் நடந்தன. சிலநொடிகளிலே நிமிர்ந்துபார்க்கவும் இஸ்லாமிய கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த புராதன வீடு மிடுக்குடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பெண்களும், சிறுவர்களும் கண்டிய நடனப்பாடல்களுக்கு அபிநயித்து ஆடல் பயற்சியைக் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அரேபிய கட்டடக் கலையுடனான புராதன வீட்டில் கண்டிய நடனப் பயிற்சிக் கல்லூரியா என்று உள்மனதில் ஒருகேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு அப்போதே விடைதேடவும் உத்வேகம் ஏற்பட்டது.
அந்த வீட்டில் நடனப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தயக்கத்துடன் பேச்சுக்கொடுக்க முற்பட்டபோது, முதலில் பெண் பயிற்சியாளர் தயங்கினார். இது யாருடைய வீடு என்ற கேள்வியைத் தொடுக்கவும் அவர் இது அந்தநீஸ் என்றொரு வைத்தியருக்கு சொந்தமான ஒரு வீடு என்றார். அத்துடன் அவர் நிறுத்திவிடவில்லை. ‘இதற்கு முன்னரும் ஒருசிலர் இந்த வீட்டை யாரோ ஒரு முஸ்லிம் பெரியாருடைய வீடு என கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவருடைய வீடு இதுவல்ல. அவர் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற வீடு கீழே முன்பு இருந்துள்ளதாக சிலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன். அவர் தமிழர் ஒருவருடைய வீட்டில் கூலிக்காக இருந்துள்ளார். பின்னர் 1983 சிங்கள தமிழ் கலவரத்தின் போது அந்த வீட்டை எரித்ததாக சிலர் கூறுகின்றார்கள்’ என்று ஒரே மூச்சுடன் முடித்தார். ஆனால் அந்தப் பயிற்சியாளருடனான உரையாடலில் மயக்கங்கள் பல இருந்தன. அவருக்கும் வெளிப்படையாக பேசுவதில் தயக்கங்களும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அதற்கு மேல் உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கு முழுமையான விடைதேடவேண்டிய உத்வேகம் இன்னமும் அதிகரித்தது.
இலங்கையை பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலான முறுகல்கள், மோதல்கள், கலவரங்கள், வன்முறைகள் என்பது தசாப்தத்திற்கு ஆகக்குறைந்தது ஒன்று என்ற வகையில் வரலாறு நெடுகிலும் நடைபெற்று இருக்கின்றன. 1915ஆம் ஆண்டு கண்டியில் நடந்த சிங்கள முஸ்லிம் கலவரம், 1958ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்,சிங்கள கலவரம் 1977ஆம் ஆண்டு கலவரம் மற்றும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படுகின்ற 1983தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் என்று இந்தப் பட்டியல் நீளுகின்றது. இதனால் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் வலுத்தது என்பது பரகசியம்.
இந்தப் பின்னணியில் கண்டியில் அரபியக் கட்டடக்கலையுடனான வீட்டின் பின்னணி பற்றிய உரையாடலை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான நபராக இருந்தவர் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ். பேராசிரியர் அனஸுடனான உரையாடல் ஆரம்பமானது. அப்போது கண்டியில் வெறுமனே அரபியக் கட்டடக்கலை என்பதற்கு அப்பால் கண்டியில் வாழ்ந்து சரித்திரம் படைத்த முதுபெரும் அறிஞர் சித்திலெப்பை பற்றிய பல்வேறு தகவல்களை பேராசிரியர் அனஸ் வெளிப்படுத்தினார். அறிஞர் சித்திலெப்பை வாழ்ந்த வீடு, எழுதி வெளியிட்ட பத்திரிகை, குடும்பம், மனைவி முதல் அவருடைய கல்லறை இருக்கும் இடம் வரை பல வரலாற்றுச் சான்றுகளையும் பேராசிரியர் அனஸ் பட்டியலிட்டுக் கூறினார்.
அறிஞர் சித்திலெப்பை ஒரு தலை சிறந்த சட்டத்தரணியாகவும் எழுத்தாளராகவும் இருந்துள்ளார். மேலும் அவர் கண்டி மாநகர சபையின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் கடமையாற்றியுள்ளதுடன் கண்டி மாநகர சபையின் கீழ் காணப்பட்ட நீதிமன்றத்தில் சுமார் நான்கு ஆண்டுகள் நீதிபதியாகவும் கடமை ஆற்றியுள்ளார்.
பேராசிரியர் அனஸ் அவர்களின் கூற்றுக்கள் தேடலுக்கான தாகத்தினை அதிகரித்தது. மறுதினம், மஹியாவ காட்டுப் பள்ளி என அழைக்கப்படுகின்ற பள்ளிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டபோது அங்கே அறிஞர் சித்திலெப்பையுடைய கல்லறையை அடையாளம் காண்பதில் சிரமங்கள் இருந்தன.
அழகான முறையில் பாதுகாக்கப்படுகின்ற ஒரு கல்லறை முதலில் காண்பிக்கப்பட்டது. அது அருகில் சென்று பார்க்கையில் 1880 ஆம் ஆண்டுகளில் எகிப்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷாவுடையதாகும். குறித்த கல்லறையை எகிப்து நாட்டு தூதரகம் பராமரித்து வருவதாகவும் ஒராபி பாஷா கலாசார நிலையம் ஒன்று கூட கண்டியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதேநேரம் அறிஞர் சித்திலெப்பையின் கல்லறை கண்டறியப்பட்டுள்ளபோதும் எந்தவிதமான பாதுகாப்போ பராமரிப்போ இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதனையடுத்து ஒராபி பாஷா கலாசார நிலையத்திற்கு சென்றபோது எகிப்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒராபி பாஷா, 1880 களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததன் விளைவாக அவரும் அவருடன் இணைந்திருந்தவர்களும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஒராபி பாஷா இலங்கைக்கு வரும்போது அறிஞர் சித்திலெப்பை அவரை வரவேற்பதற்காக துறைமுகத்திற்கு சென்றிருந்தார். பிற்பட்ட காலங்களில் ஒராபி பாஷா அறிஞர் சித்திலெப்பையுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களின் நவீன கல்வி மறுமலர்ச்சிக்கு மிகப்பெரிய சேவைகளை ஆற்றினார் என்ற வரலாற்றுத் தகவல்கள் கிடைத்தன.
ஒராபி பாஷா கண்டியிலே தங்கியிருந்த வீடுதான் தற்போது ஒராபி பாஷா கலாசார நிலையமாக மாற்றப்பட்டு அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் அவருடைய ஞாபகங்கள் என்று பல்வேறு விடயங்களும் பத்திரமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை எகிப்து நாட்டு தூதரகம் பராமரிப்பதாக அங்கே பொறுப்பாக இருந்த மொஹமட் ஹாரூன் கூறினார். எகிப்து நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷாவின் நினைவுகளை இலங்கையில் எகிப்திய தூதரகம் பாதுகாக்கின்றது. ஆனால் இலங்கையில் பிறந்து இலங்கைக்கு சேவை ஆற்றிய அறிஞர் சித்திலெப்பையுடைய கல்லறை கணக்கில் கொள்ளப்படாதிருக்கின்றதே என்ற இயல்பான ஆதங்கம் எனக்குள்ளும் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, நடனப்பயிற்சிப் பள்ளி நடைபெறும் வீடு சித்திலெப்பையினுடையது என்றாலும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதில் பல்வேறு திரிவுபட்ட நிலைமைகளே காணப்படுகின்றன.
இதனையடுத்து கண்டி மீரா மக்காம் ஜும்ஆ பள்ளிக்குச் சென்றபோது, அங்கு சில வரலாற்றுத் தகவல்கள் மயிர்க்கூச்செறியச் செய்தன.
கண்டி அஸ்கிரிய மகா விகாரைக்குச் சொந்தமான காணியில் இருந்து கண்டி அரசர் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கவினால் முஸ்லிம்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியிலே அமைக்கப்பட்ட ஒரு பள்ளிவாயலே கண்டி மீரா மக்காம் பள்ளியாகும். தற்போது காணப்படுகின்ற பள்ளிவாயல் 1864 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அது கிட்டத்தட்ட 160 வருடங்கள் பழைமையானது.
இலங்கையில் தொல்பொருள் கட்டளை சட்டத்திற்கு அமைவாக 100 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டடங்கள் யாவும் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக யுனெஸ்கோ உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கண்டி நகரில் அமையப்பெற்றுள்ள பழைய கட்டடங்களை தொல்பொருள் திணைக்களமும் யுனெஸ்கோ அமைப்பும் மிகவும் கரிசனையுடன் பராமரித்து வருகின்றார்கள். ஆனால் 160 வருடங்கள் பழமையான கண்டி மீரா மக்காம் ஜும்ஆ பள்ளிவாயலில் தொல்பொருள் திணைக்களத்தினால் எந்தவொரு பராமரிப்புக்களும் இடம்பெறவில்லை. குறித்த பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் அதுபற்றி கேள்விகளைத் தொடுத்தபோது, அவர்கள் எந்தவொரு விடயத்தினையும் அறிந்திருக்கவில்லை என்பது உறுதியாகின்றது.
இதுகுறித்து மேலும் ஆராய்வதற்காக கண்டி மாநகர சபைக்கு சென்றபோது முன்ணால் துணை மேயர் டீ.எம்.இலாஹி ஆப்தீனை சந்திக்க முடிந்தது. இவர் கண்டி மீரா மக்கா ஜும்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபை தலைவராகவும் உள்ளார். அந்த வகையில் அவரிடத்தில் முதலில் பள்ளிவாயல் விடயம் சம்பந்தமாக வினவியபோது, உணர்ச்சிவசப்பட்டவராக சில கருத்துக்களை பரிமாறினார்.
‘கண்டி நகரில் மீரா மக்காம் ஜும்ஆ பள்ளிவாயலுக்குப் பின்னர் கட்டப்பட்ட கட்டடங்கள் கூட தொல்பொருள் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக எமது பள்ளியை எவருமே கண்டு கொள்வதில்லை’ என்றார். மேலும் ‘கண்டி நகரில் காணப்படுகின்ற முஸ்லிம்களுடைய கலாசார வரலாற்று சின்னங்கள் எதுவுமே உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை’ என்ற பாரிய குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். அதுமட்டுமன்றி நடனப்பயிற்சி கூடமாக இருக்கும் புராதன வீடு தான் அறிஞர் சித்திலெப்பையுடையது என்று டீ.எம்.இலாஹி ஆப்தீன் உறுதியாகக் கூறினார். (தற்போது அந்த வீட்டில் வாழ்ந்து வருபவர்களை வாழிடம் அற்றவர்களாக ஆக்குவதோ அல்லது அவர்களிடத்திலிருந்து உரிமை பறிப்பதோ இக்கட்டுரையினதும், கட்டுரையாளரதும் நோக்கமல்ல)
தொடர்ச்சியாக சித்திலெப்பை மாநகர சபை உறுப்பினராகவும் மாநகர சபைக்கு கீழ் காணப்பட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த பல அதிகாரிகளிடமும் கட்டுரையாளர் உரையாடிய போது எவருமே அறிஞர் சித்திலெப்பை பற்றிய எந்தவித குறிப்புகளும் இல்லை என்றே கூறினார்கள். அதேநேரம் ஒரு சிலர் அறிஞர் சித்திலெப்பை என்ற பெயரையே அன்றுதான் கேட்டுள்ளார்கள் என்பதும் வேடிக்கையாக இருந்தது.
பின்பு தொல்பொருள் திணைக்களத்தின் கண்டி காரியாலயத்திற்கு சென்றபோது சித்திலெப்பையுடைய எந்தவொரு அடையாளங்களும் எவ்வாறு தொல்பொருள் திணைக்களத்தால் பாதுகாக்கப்படவில்லை என்று வினாத்தொடுத்தபோது உரிய பதிலகள் கிடைத்திருக்கவில்லை. அதுமட்டமன்றி அங்கிருந்த அதிகாரிகள் யார் சித்திலெப்பை அவர் என்ன செய்துள்ளார் எனக் கேள்வி எழுப்பிய துரதிஷ்டமான நிலைமைகளும் இருந்தன. ஒருசிலர் ‘நீங்கள் கூறிய தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலமாக ஒரு வேண்டுகோளை எனக்குத் தாருங்கள்’ என்று கூறி அவர்களுடைய மின்னஞ்சலை வழங்கிய சூழுலுக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது.
கண்டியில் இலங்கைத் தேசிய இனமான முஸ்லிம்களின் நிலைமை இவ்வாறு இருக்கும் போது மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக 25 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் அஷ்ரபுக்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய அறிஞர் சித்திலெப்பை வாழ்ந்த வீடு எதுவென்று கூட எவருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டி நகரில் உள்ள வரலாற்றுத் தொன்மம் நிறைந்த முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதுவுமே இன்னும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அல்லது உலக மரபுரிமை சின்னம் என பெயரிடப்படவில்லை. குறிப்பாக டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள சிவப்பு பள்ளி, சமகி மாவதையில் உள்ள மீரா மக்காம் பள்ளி மஹ்லரத்துல் நக்ஷ்பந்தியா தக்கியா மஸ்ஜித் மற்றும் காட்டுப்பள்ளி என்று அழைக்கப்படுகின்ற மஹியாவ ஜும்ஆ பள்ளி என்பன நூறு வருடங்களையும் தாண்டி மிடுக்குடன் காட்சியளிக்கின்றன. ஆனால் இலங்கையிலோ தொல்பொருள் என்றால் அது பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான வரலாறு என்ற ஒரு விம்பம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.
இறுதியாக நாம் மத்திய மாகாண தொல்பொருள் அத்தியட்சகர் டிஎம்விகேடி திசநாயக்க அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணடி நகரில் காணப்படுகின்ற முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்ற கட்டடங்கள் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய மரபுகள் எதுவும் பாதுகாக்கப்படவில்லையா என வினவினோம். அப்போது அவர், முஸ்லிம்கள் அவற்றை பராமரிப்பதற்கு இடம் தருவதில்லை. நாங்கள் முயற்சிக்கின்றோம். என்னை வந்து நேரில் சந்தியுங்கள் எனக் கூறினார்.
இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக பௌத்த மதத்திற்கு முதலிடம் என்ற நிலைப்பாடுடன் பெரும்பான்மை வாதம் தலை தூக்கியதால் அது, அதிஉச்ச பிரிவினைவாதம் வரை சென்றுள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களாக வாழ்கின்ற முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கூட இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக எம்மால் உறுதிப்படுத்த முடியும்.– Vidivelli