கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கை
வெள்ள அனர்த்தம் தொடர்பான முஸ்லிம் சிவில் அமைப்புகளின் கூட்டத்தில் தீர்மானம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக வழங்குவதற்கு உலமா சபை தலைமையிலான முஸ்லிம் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
வெள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையக காரியாலத்தில் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்களின் பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது, நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு, எவ்வாறான உடனடி பங்களிப்புக்களை வழங்கலாம் என்பது தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதோடு பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்திடம் இருந்து வெள்ள நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் அந்தந்த பகுதிகளிலுள்ள மஸ்ஜித் சம்மேளனங்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கள நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்டு, விபரங்களை திரட்டுவதோடு அதற்கான முன்னெடுப்புக்களை கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யா ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்வதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஜம்இய்யா சார்பில் பொதுச்செயலாளர் அஷ்-ஷெக் எம். அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷெக் எம்.எஸ்.எம்.தாஸீம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷெக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோருடன் கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே, அனர்த்தங்கள் ஏற்படாத நாட்டின் ஏனைய பகுதிகளில் நிவாரணங்களை வழங்க விரும்புபவர்கள் பிரதேசத்திலுள்ள பிராந்தியத்தில் இயங்கும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடாக நிவாரண உதவிகளை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என ஜம்இய்யத்துல் உலமாவின் நிவாரண சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி, மல்வானை, காலி, போர்வை, தல்துவ உள்ளிட்ட 7 முஸ்லிம் பிரதேசங்களிலும் கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli