யட்டிநுவர, வெலம்பட, மாவனெல்லை பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதம் மாவனெல்லையில் பலத்த பாதுகாப்பு
நால்வர் பொலிஸாரால் கைது; விசாரணைகளுக்கு சி.ஐ.டி. விரைவு; பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவங்களால் பிரதேசத்தில் இன ரீதியிலான வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தர் சிலைகள் தாக்கி சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நேற்று அதிகாலை சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மாவனெல்லை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை மாவனெல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி நால்வர் இதுவரை குறித்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எவ்வாறாயினும் இவ்வாறான புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள் கண்டி மற்றும் மாவனெல்லை பகுதியில் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளதால் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து பின்னணியில் உள்ளோரை கண்டறியுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) ஆலோசனை வழங்கியதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். அதன்படி நேற்று சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று கண்டி மற்றும் மாவனெல்லைக்கு விரைந்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
ஏற்கனவே கடந்தவாரம் மாவனெல்லை பொலிஸ் பிரிவில் இரண்டு பாதையோர புத்தர் சிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. இது தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதனை அண்டிய பகுதியிலிருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மனியளவில் மாவனெல்லை – திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்போது அந்த சந்தேக நபரின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் மாவனெல்லை வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதன் பின்னர் மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மாவனெல்லை பகுதிகளை அண்மித்த முஸ்லிம்கள் எனப் பொலிஸார் கூறினர்.
இதனைவிட யட்டிநுவர ஸ்ரீ தொடங்வல நாக விகாரை வளாகத்தில் உள்ள புத்தர் சிலை ஒன்றும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஸ்தலத்துக்கு சென்றுள்ள கண்டி மற்றும் பேராதனை பொலிஸார், தாக்கப்பட்ட புத்தர் சிலையை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன் விகாரையின் சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளையும் பெற்று விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே இரவில் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகளால் மீளவும் கண்டி பகுதிகளில் இன வன்முறைக்கு திட்டமிடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எந்த அசம்பாவிதமும் இடம்பெறாமல் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கண்டி மற்றும் மாவனெல்லை பகுதிகளில் தேவையான பாதுகாப்புக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் உதவிக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணவீரவின் கீழ் விஷேட பாதுகாப்பு கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இந்த புத்தர் சிலை உடைப்பு விவகாரங்கள் தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழான சிறப்புக்குழு கண்டி மற்றும் மாவனெல்லை நோக்கி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட உயர்மட்ட கூட்டம்
மாவனெல்லையில் இனங்களுக்கிடையில் அசாதாரண நிலை உருவாகாமலிருப்பதற்காக நேற்றுக் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவனெல்லை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் கபீர் ஹாசிமும் கலந்து கொண்டார். மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், விசேட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவனெல்லை பிரதேச செயலாளர், சர்வ மதத் தலைவர்கள், மாவனெல்லை பிரதேசத்தின் பள்ளி வாசல்களின் நிர்வாகிகள் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள், பன்சலையின் பௌத்த குருமார்கள் என்போர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேசத்தின் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரியுமாறும் பொலிஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மதத்தினை நிந்திக்கும் இவ்வாறான செயல்கள் தனிப்பட்டவர்களினாலே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை. இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை இனங்காண பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக முஸ்லிம்கள் தரப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டதாக ஹிங்குள பள்ளிவாசல் தலைவரும் மாவனெல்லை பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான ஹமீத் ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
உலமா சபையின் அவசர கூட்டம்
புத்தர் சிலை உடைப்பு தொடர்பாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நேற்று ஆராய்ந்தது, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய உலமாசபை நேற்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
நாட்டில் இனக் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சகவாழ்வினை அழிவுக்குள்ளாக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என உலமா சபை கோரியுள்ளது என உலமா சபையின் பிரதிச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்தார்.
-Vidivelli