அனாதைச் சிறார்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தவே ‘Orphan Care’ திட்டம்
அமானா வங்கியின் சமூக நல திட்டம் தொடர்பில் அதன் தலைவர் அசாத் ஸஹீட் வழங்கிய நேர்காணல்
நாட்டில் இயங்கும் அனாதை இல்லங்களில் தங்கியுள்ள சிறார்கள் 18 வயதை அடைந்த பின்னர் அவர்கள் தமது வாழ்வின் அடுத்த கட்ட பயணத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதார ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் ஆதரவளிக்கும் நோக்கில் அமானா வங்கியால் ‘Orphan Care’ எனும் தனியான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இத்திட்டத்தின் தலைவர் அசாத் ஸஹீட் தெரிவித்தார்.
இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பில் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு :
அமானா வங்கி Orphan Care எனும் அனாதைகள் நலன் திட்டத்தை முன்னெடுப்பது ஏன்?
வங்கித் துறையில் ஒன்றரை தசாப்த அனுபவம் கொண்ட அமானா வங்கி கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதும் அவ்வாறான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. உதாரணமாக, களுபோவில வைத்தியசாலையில் ஒரு நோயாளர் விடுதியை அமானா வங்கி பொறுப்பெடுத்து நிர்வகித்து வருகிறது.
விடுதியை புனரமைத்தது முதல் மாதாந்தம் தேவையான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அவசிய தேவைகளை அமானா வங்கி கவனித்து வருகிறது. மூக்குக் கண்ணாடி வழங்குதல், சக்கர நாற்காலிகள், கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் என அமானா வங்கி தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. எனினும் வங்கியின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க எமது முகாமைத்துவம் சமூகத்தில் தாக்கத்தைச் செலுத்தக் கூடியதொரு நிலைபேறான சமூக மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிந்தித்தது. அதன் வெளிப்பாடாகவே 2019 இல் இந்த Orphan Care திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
உண்மையில் இது ஒரு குறுகிய கால திட்டம் அல்ல. நீண்ட காலத்தில் விளைவைத் தரக் கூடிய ஒரு திட்டமாகும்.
Orphan Care என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனமாகும். இதன் நிர்வாகிகளாக நாட்டின் முன்னணி துறைசார் நிபுணர்களே உள்ளனர்.
Orphan Care திட்டம் பற்றி விளக்கமாக கூறுங்கள்?
நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ள அனாதைகள் இல்லங்களிலிருந்து இந்தி திட்டத்திற்காக சிறுவர்கள் இன மத பேதமின்றி தெரிவு செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் ஓர் அனாதைச் சிறாரை பொருளாதார ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் வலுவூட்டுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அனாதை இல்லங்கள் சிறார்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன. எனினும் அவர்கள் 18 வயதின் பின்னர் குறித்த நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவர்களது எதிர்காலம் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதே Orphan Care திட்டமாகும்.
தற்போது வரை எமது திட்டத்தில் 90 அனாதை இல்லங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. 3120 சிறார்கள் இத்திட்டம் மூலம் தற்போது நன்மை பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் சிறுவர்களுக்கு அமானா வங்கியில் ஒரு கணக்கு திறக்கப்பட்டு ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தொகைப் பணம் வைப்பிலிடப்படும். இவ்வாறு வைப்பிலிடப்படும் பணத்தை அவர்கள் 18 வயது வரை பயன்படுத்த முடியாது. 18 வயதை அடைந்த பின்னரே அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள பணம் அவர்களுக்கு வழங்கப்படும். இந்தப் பணத்தை உயர் கல்வி தேவைகளுக்கு பயன்படுத்துவதா அல்லது அதனைக் கொண்டு சிறு தொழிலை ஆரம்பிப்பதா அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்குப் பயன்படுத்துவதா என்பதை அவரே தீர்மானிப்பார். அதில் வங்கி தலையிடாது.
இத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்பதற்கான இரண்டாவது வாய்ப்பொன்றை நாம் வழங்குகிறோம். சிறு வயதில் பெற்றோரை இழந்த அவர்கள் 18 வயதானதும் மீண்டும் சமூகத்தால் கைவிடப்படவில்லை என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்துகிறோம்.
அனாதை இல்லங்களிலிருந்து 18 வயதானவுடன் வெளியேறும் இவர்கள் அதன் பின்னர் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரலாம். தமக்கு யாரும் இல்லாதபோது வீதிகளில் பிச்சை எடுக்கலாம், விபச்சாரத்தில் ஈடுபடலாம், களவு, கொள்ளைகளில் ஈடுபடலாம் அல்லது பணம் சம்பாதிப்பதற்காக ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடலாம். இவ்வாறான சமூக விரோத செயல்களின்பால் அவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒருவர் தான் 18 வயதை அடைந்ததும் அருகிலுள்ள ஏதேனுமொரு அமானா வங்கிக் கிளைக்கு தனது பாதுகாவலர் ஒருவருடன் சென்று தனது கணக்கிலுள்ள பணத்தை மீளப் பெறலாம். எனினும் நாம் ஒருவர் வந்து கேட்டவுடன் பணத்தைத் தூக்கிக் கொடுப்பதில்லை. மாறாக அவர்கள் இப் பணத்தை எவ்வாறு சிறந்த வழியில் செலவு செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவோம்.
இதற்கு முன்னர் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள சிறார்கள் 15 அல்லது 16 வயதை அடையும் போதே நாம் அவர்கள் பற்றிய தகவல்களை அவர்களை பராமரிக்கும் அனாதை இல்லங்களிலிருந்து பெற்றுக் கொள்வோம். அவர்கள் எதிர்காலத்தில் என்ன துறையில் கால்வைக்கப் போகிறார்கள்? அவர்களது ஆர்வம் என்ன? என்பது பற்றிய விபரங்களைச் சேகரிப்போம். அதற்கமைவாக அவர் பொருத்தமானதொரு துறையில் அப் பணத்தை செலவு செய்வதற்கு நாம் ஏற்பாடுகளைச் செய்வோம். உதாரணமாக ஒருவர் சமையல் கலை நிபுணராக வர விரும்பினால் அதற்குப் பொருத்தமான பயிற்சியைப் பெற நாம் வழிகாட்டுவோம். உயர்கல்வி கற்க விரும்பினால் அதற்கும் வழிகாட்டுவோம்.
இத்திட்டத்தின் உள்வாங்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு பணத்துக்கு அப்பால் வேறு ஏதேனும் ஆதரவுகளை இத்திட்டம் வழங்குகிறதா?
நிச்சயமாக. இத்திட்டத்தின் மூலமாக வெறுமனே பணத்தை மாத்திரம் வழங்காமல் அவர்களுக்கு ஒரு தோழனாக, வழிகாட்டியாக, ஆலோசகராக Orphan Care இருக்கிறது.
நீங்கள் 18 வயதை அடைந்து அனாதை இல்லத்தை விட்டு வெளியேறினால் உங்களுக்கு கை கொடுக்க அமானா வங்கியின் Orphan Care திட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையை, எதிர்பார்ப்பை பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட ஒவ்வொரு சிறாருக்கும் இத்திட்டம் வழங்குகிறது.
அனாதைச் சிறுவர்கள் பாரிய மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் துஷ்பிரயோகங்களையும் சந்திக்கின்றனர். சில நேரம் வாழ்வில் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்து கொள்வோமா என்றும் சிந்திக்கின்றனர். எனவே இவ்வாறான உளவியல் நெருக்கடிகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்குத்தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் ஏனைய துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து நாம் வழங்குகிறோம். தற்கொலைகளைத் தடுப்பதற்காக பணிபுரியும் சுமித்ராயோ நிறுவனத்துடனும் பற்சிகிச்சை, கண் சிகிச்சை போன்ற மருத்துவ முகாம்களை நடாத்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட ரோட்டரி கழகம் போன்றவற்றுடனும் நாம் கைகோர்த்துள்ளோம்.
இதற்கான பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள்? முஸ்லிம்கள் மாத்திரமா பயனாளிகள்?
இந்த திட்டத்திற்கு இன, மத வேறுபாடுகள் கிடையாது. ஐக்கிய நாடுகள் சபையின் எடுகோள்களுக்கமைய பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த எந்தவொரு சிறாரையும் நாம் இத்திட்டத்தில் உள்வாங்குவோம். அமானா வங்கி ஓர் இஸ்லாமிய வங்கியாக இருக்கின்ற போதிலும் அதன் சேவை அனைத்து மக்களுக்குமானது. அந்த வகையில் Orphan Care திட்டமும் அனைத்து அனாதைகளுக்குமானது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெளத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்களைப் பின்பற்றுகின்ற நிறுவனங்களால் நடாத்தப்படும் அனாதை இல்லங்கள் அனைத்தும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி எங்கிருந்து கிடைக் கிறது? இதில் அமானா வங்கியின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
இந்த திட்டத்திற்கான பிரதான நிதி மூலமாக அமானா வங்கியே உள்ளது. இதனை அமுல்படுத்துவதற்கான நிர்வாக செலவுகளையும் எமது வங்கியே முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பிள்ளைகளின் கணக்கிலிருந்து ஒரு சதம் கூட செலவிடப்படாது. இதற்கு மேலதிகமாக மேலும் சில நிறுவனங்கள், தனி நபர்களும் நிதி உதவிகளை வழங்குகின்றனர். அமானா வங்கியில் கணக்கை வைத்திருப்போர் ஸ்டான்டிங் ஓடர்கள் மூலம் மாதாந்தம் ஒரு தொகை பங்களிப்பை வழங்குகின்றனர். மேலும் இணைய வழி நிதிப் பரிமாற்றம், வீசா, மாஸ்டர் அட்டைகள் மூலமான நிதிப் பரிமாற்றம் மூலமும் பங்களிப்புகள் கிடைக்கின்றன. அதேபோன்று வெளிநாடுகளில் வசிக்கின்ற, தொழில்புரிகின்ற இலங்கையர்களையும் இத்திட்டத்திற்காக அணுகியுள்ளோம். மேலும் வர்த்தக நிலையங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு அதன் மூலமும் நிதி திரட்டப்படுகிறது.
இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர்கள் மூலம் எமது கணக்கறிக்கை தயாரிக்கப்படுகிறது.
தனி நபர்கள், வியாபார நிறுவனங்கள் எவ்வாறு இந்தப் பணியில் பங்கெடுக்கலாம்?
வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை விற்பனை செய்யும்போது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ஓபன் கெயாருக்கு வழங்கலாம். உதாரணமாக தண்ணீர் போத்தல் விற்பனை நிறுவனம் ஒன்று தாம் விற்பனை செய்யும் ஒவ்வொரு போத்தலிலிருந்தும் ஒரு சிறு தொகையை இத்திட்டத்திற்கு வழங்குகிறது. கொழும்பிலுள்ள பேக்கரிப் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று தாம் விற்பனை செய்யும் ஒவ்வொரு இறாத்தல் பாணிலிருந்தும் ஒரு தொகையை வழங்குகிறது. இவ்வாறு சிறிய, பெரிய வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தமது வசதிக்கு ஏற்றவாறு நிதி உதவிகளை வழங்குகின்றன. இதற்கென எம்மால் விநியோகிக்கப்படும் உண்டியல்களைப் பெற்று நிதி சேகரித்து வழங்கலாம்.
இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் ஒருவர் எவ்வாறு உங்களைத் தொடர்பு கொள்ளலாம்?
அருகிலுள்ள அமானா வங்கிக் கிளைக் குச் செல்வதன் மூலம் இதுபற்றிய மேல திக விபரங்களைப் பெற்று விருப்பமான வழியில் உதவலாம். அல்லது இத்திட் டத்தின் இணையதளமான https://www.orphancare.org இற்கு விஜயம் செய்யலாம். +94117756775 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.
-Vidivelli