நாட்டில் வருடாந்தம் தென் மேற்குப் பருவ மழை காலத்திலும் சரி ஏனைய மழை காலங்களிலும் சரி வெள்ள அனர்த்தம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இம்முறை ஏற்பட்டுள்ள வெள்ளமும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் படி கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நேற்று வரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டைப் பொறுத்தவரை இவ்வாறான அனர்த்தங்கள் சகஜமாகிவிட்டன. இலங்கையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களை பாதித்தன. அத்துடன் 203 பேரை கொன்றதுடன் 96 பேர் காணாமல் போயிருந்தனர். 9000 வீடுகள் அழிக்கப்பட்டன. 75,000 மக்கள் இடம்பெயர்ந்தனர். 2017 வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் விவசாயம், போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளை பாதிப்புக்குள்ளாக்கியது. இவ்விழப்புக்களின் பெறுமதி இலங்கை நாணயப்பெறுமதிப்படி 70 பில்லியன் ரூபாக்களையும் தாண்டிவிட்டதாக இவ்வனர்த்தங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தமாக தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தை குறிப்பிட முடியும். எனினும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் சரி பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் சரி இவ்வாறு அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவிதமான தூரநோக்கான செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
அனர்த்தம் ஏற்பட்டவுடன் மக்களுக்கு சோற்றுப் பார்சல்களையும் தற்காலிக நிவாரணங்களையும் வழங்குவதோடு மாத்திரம் அரசாங்கம் தனது பணியை முடித்துக் கொள்வது துரதிஷ்டமானதாகும்.
இன்று இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. எங்கு எப்போது எத்தனை மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்படும் என்பதை சாதாரண பொது மக்கள் கூட அறிந்து கொள்ளுமளவுக்கு தொழில்நுட்பங்கள் மலிந்துள்ளன. அவ்வாறான சூழலில் அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கான பல வழிகள் இருந்தும் அரசாங்கம் இதுவிடயத்தில் அசட்டையாகவிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறான வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் கணக்கிடமுடியாதவை. ஒரு மனிதனின் வாழ்நாள் உழைப்பையே ஒரு கணப்பொழுதில் வெள்ளம் அடித்துச் சென்று விடுகிறது. பலர் வருடக் கணக்கில் உழைத்துகட்டிய கனவு இல்லங்களும் குருவிக்கூடு போல சேர்த்த வீட்டுத் தளபாடங்களும் ஏன் முக்கிய ஆவணங்களும் கூட மீளப் பெற முடியாதளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றன. எனவேதான் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிட்ட பொறிமுறைகளை ஒரு நாடு கொண்டிருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.
இன்று அரசாங்கம் மக்கள் மத்தியிலிருந்து கணிசமான வரியை அறவிடத் தொடங்கியுள்ளன. இந்த வரிப்பணம் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் சொகுசு வாழ்க்கைக்காக அல்ல என்பதை அழுத்தமாக வலியுறுத்த விரும்புகிறோம்.
மழை நீரை சேகரித்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஆச்சரியமிக்க திட்டங்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பங்களும் இல்லாத காலங்களில் கூட நமது நாட்டை ஆண்ட மன்னர்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். எனினும் பின்னாட்களில் ஓரிரு அணைக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டதைத் தவிர அவ்வாறான பாரிய திட்டங்கள் எதுவும் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ‘‘மண்ணில் விழும் ஒரு சொட்டு மழைத்துளி கூட பயன்படுத்தப்படாது கடலுக்குச் செல்ல அனுமதிக்கமாட்டேன்’’ என பராக்கிரமபாகு மன்னன் அன்று கூறிய வார்த்தைகளை ஆட்சியாளர்களும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் மறந்துவிட்டார்களா? மழை நீரை சேகரித்து விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை எப்போது நாம் நடைமுறைப்படுத்தப் போகிறோம்? இதில் தேர்ச்சி பெற்ற நாடுகளின் அறிவு மற்றும் அனுபவத்தை நாம் எப்போது பெறப் போகிறோம்? இந்தக் கேள்விகளுக்கு விடை காணாவிட்டால் வருடாந்தம் இவ்வாறு வெள்ளம் வருவதும் மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிடும்.- Vidivelli