எப்.அய்னா
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி, இலங்கையிலும் சில கைது நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
அதன்படி இதுவரை (இக்கட்டுரை எழுதப்படும் போது) 3 பேர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் தொடர்பில் விசாரணை நடப்பதாக அறிய முடிகிறது. அதில் பிரதான சந்தேக நபராக தெமட்டகொடை பகுதியை சேர்ந்த ஒஸ்மன் ஜெராட் என்பவரை பொலிஸ் தேடி வருகின்றது. இவர் தொடர்பில் தகவல் தருவோருக்கு 20 இலட்சம் ரூபா பணப் பரிசிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சல்:
இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். கைதுகளின் ஆரம்பம் கடந்த 12 ஆம் திகதி அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலைய மின்னஞ்சலுக்கு வந்த ஒரு அநாமதேய மின்னஞ்சலில் இருந்து ஆரம்பிக்கிறது. அதில் விமான நிலையத்தை தாக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந் நிலையில், விமான நிலைய பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தீவிர விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல் :
இவ்வாறான பின்னணியில் மே 18 அல்லது 19 இல் நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து வருகை தந்து தென் இந்தியாவிலிருந்து குஜராத்துக்கு ரயில் அல்லது விமானம் ஊடாக வருவதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகரான ஹரிஷ் உபாத்யாயாவுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதன்படியே இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து இன்டிகோ விமான சேவையின் 6 ஈ 848 விமானம் ஊடாக அஹமதாபாத் விமான நிலையம் வர நால்வரும் டிக்கட் முன் பதிவு செய்துள்ளமையை குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கண்டறிந்ததாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உயரதிகாரியான ஹரிஷ் உபாத்யாயா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவ்வாறான நிலையிலேயே அஹமதாபாத் சென்ற பொலிஸ் அத்தியட்சர்களான சித்தார்த், கே.கே.பட்டேல் பிரதி பொலிஸ் அத்தியட்சர்களான ஹரிஷ் உபாத்யாயா மற்றும் சங்கர் சவுத்ரி ஆகியோரின் தலைமையில் விமான நிலையத்தில் காத்திருந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மே 19 ஆம் திகதி இரவு 8.10 மணியளவில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரத்தியேக விசாரணை :
இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நால்வரை கைது செய்ததாக அறிக்கை வெளியிட்ட குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவர்களை இரகசிய இடத்தில் தடுத்து வைத்து விசாரிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை மட்டும் அறிந்துள்ளதால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.
குஜராத் பொலிஸ் பிரதானியின் தகவல் :
இதுகுறித்து குஜராத் பொலிஸ் பிரதானி விகாஸ் சஹாய், குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகளான ஹரிஷ் உபாத்யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். அதில் ‘பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கர் உத்தரவின்பேரில் இந்த 4 பேரும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மட்டுமே பேசுகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21, 22-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த சூழலில், நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் தீட்டி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர்கள் நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அவர்களது தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் இதுதொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு பயங்கரவாத சந்தேக நபரின் செல்போனில் அஹமதாபாத்தின் நர்மதா நதி கால்வாயின் புகைப்படம் இருந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் பொலிஸார் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது 20 தோட்டாக்களுடன் கூடிய, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள், ஐ.எஸ். பயங்கரவாத இயக்க கொடி ஆகியவற்றை கைப்பற்றினர்.’ என அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் நடவடிக்கை :
இலங்கையர்களான பயங்கரவாதிகள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் அது தொடர்பில் இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.
இந் நிலையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் சிறப்பு குழுவை அமைத்து பொறுப்புக்களை ஒப்படைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் கூறினார்.
அதன்படி சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் கட்டுப்பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனை மற்றும் கட்டுப்பாட்டில் சிறப்புக் குழு இவ்விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக இரு பொலிஸ் அத்தியட்சர்கள் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சி.ரி.ஐ.டி. விசாரணை :
சி.ரி.ஐ.டி. எனப்படும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இப்போதும் தொடர்கிறது. தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர், பகிர்ந்துகொண்ட தகவல்கள் பிரகாரம், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கும் பயங்கரவாத தொடர்புகள் இருப்பது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளில் எந்த தகவல்களும் இதுவரை வெளிப்படவில்லை என குறிப்பிட்டார்.
அத்துடன் அவர்கள் அனைவருக்கும் போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகள் இலங்கையில் இருப்பதும், ஒருவருக்கு எதிராக இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கைதானோர் தொடர்பில் உள்ளக
விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள் :
1. நுஸ்ரத்.
இவர் 1991 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பிறந்தவர். நீர்கொழும்பு , பெரியமுல்லை, ரஹுமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர். 40 தடவைகள் வரை இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார் நுஸ்ரத். இதுவரையிலான விசாரணைகளில் இந்தியாவிலிருந்து தங்கம் கடத்தி வரவும், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்டவற்றை சட்ட விரோதமாக எடுத்து வந்து இலங்கையில் விற்பனை செய்யவும் நுஸ்ரத் இவ்வாறு அதிகமாக இந்தியா சென்று வந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
அத்துடன் நுஸ்ரத் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுடனும் தொடர்புபட்டிருப்பதாக உள்ளக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நுஸ்ரத்தின் தந்தை தொழில் நிமித்தம் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நீர்கொழும்புக்கு வந்து அங்கு குடியேறியுள்ள நிலையில், அவருக்கு நீர்கொழும்பில் தங்க நகை விற்பனை நிலையம் ஒன்று இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தகவல்கள் பிரகாரம், நுஸ்ரத்தே இந்த நால்வர் கொண்ட சந்தேக நபர்கள் குழுவுக்கு தலைமை தாங்கியதாகவும் அவருக்கு பாகிஸ்தானுக்கான வீசாவும் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
2. மொஹம்மட் நப்ரான்.
27 வயதான இவர் கொழும்பு 12, எம்.ஜே.எம். லதீப் மாவத்தையில் வசிப்பவர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்த போது இறந்த பொட்ட நெளபர் எனப்படும் மொஹம்மட் நியாஸ் நெளபரின் 2 ஆம் மனைவியின் மகன். 1997 ஜூலை 12 ஆம் திகதி பிறந்துள்ள நப்ரான் சுமார் 38 தடவைகள் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளதுடன், பல்வேறு கடத்தல் வர்த்தகத்தோடு அவருக்கு தொடர்பிருப்பதாக உள்ளக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 இல் இலங்கை பொலிஸாரால் நப்ரான் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக தேசிய இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. போதைப்பொருள் தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இவர்கள் இருவரையும் தவிர கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் முதல் முறையாக இந்தியாவுக்கு சென்றவர்கள் ஆவர். அவ்விருவரும் கூலித் தொழிலாளர்களாக இலங்கையில் செயற்பட்டவர்கள் என உள்ளக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
3. மொஹம்மட் ரஷ்தீன்
43 வயது மொஹம்மட் ரஷ்தீன் கூலித் தொழிலாளராகவும் முச்சக்கர வண்டிச் சாரதியாகவும் செயற்பட்டுள்ளார். இவர் ஒருகொடவத்தை நவகம்புர, 2 ஆம் கட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவராவார். 1980 செப்டம்பர் 5 ஆம் திகதி பிறந்துள்ள அவர், பகஞ்சிபானை இம்ரான் குழுவினரோடு நெருங்கி செயற்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், பல்வேறு போதைப்பொருள்சார் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளதாக கூறுகின்றனர்.
4. மொஹம்மட் பாரிஸ்
மாளிகாவத்தை , ஜும்ஆ மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் மொஹம்மட் பாரிஸ். இவர் புறக்கோட்டை பகுதியில் கூலி வேலை செய்பவர். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி பிறந்துள்ள இவருக்கும் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்திய விசாரணை தகவல் :
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம், இந்த நால்வரும் கடந்த 2024 பெப்ரவரி மாதமே ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தானிலிருந்து இவர்களை ‘அபூ பாகிஸ்தானி’ எனும் பெயரால் அறியப்படும் நபர் இயக்கியுள்ளதாக கூறும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, இவர்கள் இந்தியாவில் தற்கொலை தாக்குதல்களை நடாத்த தயாராக இருந்ததாக கூறுகின்றனர்.
வீடுகளில் நடாத்தப்பட்ட சோதனை :
இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதும் இவர்களுக்கு சொந்தமான வீடுகளில் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் அதன் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியன இணைந்து சோதனைகளை நடாத்தினர். எனினும் அவ்வீடுகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான எவையும் சிக்கவில்லை. இந்த நான்கு பேருடனும் தொடர்புடையவர்கள், உறவினர்களை பொலிஸார் விசாரித்துள்ள நிலையில், அவர்களிடம் இருந்தும், சாதகமான எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் இவர்கள் ஐ.எஸ். உடன் தொடர்பா என அவர்கள் கூட அறியவில்லை எனவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கூறுகின்றனர்.
உள் நாட்டில் நடந்த கைது:
எவ்வாறாயினும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், இதுவரை மூவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொறுப்பில் எடுத்து தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹம்மட் பாரிஸின் நண்பர் என விசாரணையாளர்கள் கூறினர். பாரிஸ் விவாகரத்தாகி அவரது மனைவி, பிள்ளைகள் வேறாக வசிக்கும் நிலையில், அவரது பெற்றோரும் உயிருடன் இல்லை.
இந்த நிலையில் மாளிகாவத்தை ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் அவருடன் தங்கியிருந்ததாக கூறப்படும் மிக நெருக்கமான நண்பராக கருதப்படும் அப்துல் ஹமீட் அமீர் என்பவர் இவ்வாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
மற்றொருவரை கைது செய்ய தகவல்
தருவோருக்கு 20 இலட்சம் பரிசு :
இவ்வாறான நிலையில் இதுவரை அப்துல் ஹமீட் அமீரிடம் இருந்து விசாரணைகளில், பயங்கரவாதம் தொடர்புபட்ட ஆதாரங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை என விசாரணை தகவல்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் அமீருடனும் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுடனும் மிக நெருக்கமான தொடர்புகளை பேணிய ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொரளை வானத்துமுல்ல, டேம்ப் தோட்டத்திலும், தெமட்டகொட வேலுவன வீதியிலும் அடிக்கடி நடமாடும் குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். ஒஸ்மன் ஜெராட் என அறியப்படும் குறித்த நபரின் புகைப்படத்தையும் பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட நிலையில், இந்தியாவில் கைதான நால்வரையும் இலங்கையிலிருந்து இயக்கியவர் இவரே என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு கண்டறிந்துள்ளது.
குறிப்பாக தற்போதும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் காவலில் இருக்கும் அமீர், இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரும் அங்கு செல்ல விமான பயணச் சீட்டுக்களைப் பெறும் நடவடிக்கையில் உதவியவர் என கூறப்படுகின்றது.
சிலாபத்தில் நடந்த கைது :
இவ்வாறான பின்னணியில் ஜெராட்டை தேடும் விசாரணைகளில் சிலாபத்தில் வைத்து இருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பங்கதெனியவைச் சேர்ந்த சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும் ஒஸ்மன் ஜெராட்டின் உடன் பிறந்த இளைய சகோதரர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஒஸ்மன் ஜெராட்டை தேடி விசாரணைகள் தொடர்வதுடன் கண்டி மாவட்டத்திலும் இருவர் தொடர்பில் விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்தக் கைதுகளின் பின்னணி என்ன?
உண்மையில் இலங்கையில் உள்ள தகவல்கள் பிரகாரம், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் பயங்கரவாத தொடர்புகளை நேரடியாக கொண்டவர்கள் என சொல்லுமளவுக்கு சான்றுகள் அற்றவர்கள் என அறிய முடிகின்றது. அவ்வாறான நிலையில் இந்திய அதிகாரிகள், இந்த நால்வருக்கும் எதிராக இந்திய தண்டனை சட்டக் கோவையில் 120 பி (குற்றவியல் சதி ), 121 ஏ ( இந்திய அரசுக்கு எதிரான யுத்த பிரகடனம்) மற்றும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த 4 பேரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்டிஜே) என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தற்போது 4 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர் எனவும் ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, இந்த நால்வரும் ஒரு போதும் என்.ரி.ஜே.யின் உறுப்பினர்களாக செயற்பட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்யும் நிலையில் ஐ.எஸ். ஐ.எஸ். தொடர்புடையவர்கள் என்ற தகவலையும் இதுவரையிலான விசாரணை தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து மறுக்கின்றது.
இவர்கள் கடத்தல் போதைப்பொருள் அல்லது வேறு பொருட்கள் கடத்தலுக்காக இந்தியா சென்றிருக்கலாம் என இலங்கையின் விசாரணையில் சந்தேகிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கையும்
கைதானோரின் பின்னணியும்:
உண்மையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நால்வர் தொடர்பிலும் இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில், அவர்கள் மத ரீதியிலான விடயங்களில் ஈடுபாடு அற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
எனினும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இந்த நால்வரும் தமிழ் மொழியை மட்டும் அறிவதாக கூறுகின்றனர். அத்துடன் இவர்கள் ‘புரொடோன்’ மின்னஞ்சலை பயன்படுத்தி பாகிஸ்தானின் அபூ என்பவருடன் தொடர்புகளை பேணியதாகவும், அந்த தொடர்பாடல் அரபு மொழியினால் ஆனது எனவும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை ஆதாரம் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
உள்ளக விசாரணை தகவல்கள் படி, இந்த நால்வரும் தமிழ், சிங்கள மொழிகளை தவிர வேறு மொழிகளை அறிந்ததாக தகவல்கள் இல்லை. குறிப்பாக இவர்கள் அரபு மொழியை பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அறிவுடையவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினரின் வாக்கு மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அவ்வாறெனில், குஜராத் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவல்களும், உள்ளக விசாரணை தகவல்களும் முரண்படுகின்றன.
ஐ.எஸ்.இன் புதிய தாக்குதல் வடிவமா?
உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, இதுவரை மத ரீதியிலான நம்பிக்கையை திரிபுபடுத்தி, ஏக இறை கொள்கையை முன்னிறுத்தி அதன்பால் திரிபுபடுத்தப்பட்ட சிந்தனையில் தீவிர மயப்படுத்தப்படும் முஸ்லிம்களையே தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கையில், மத ரீதியிலான கொள்கை பிடிப்பில்லாத, போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கள், பாவனைகள் உடையோரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது இலக்கை அடைந்துகொள்ள நாடினரா என்ற கேள்விக்கு விசாரணைகளில் பதில் அவசியமாகும்.
அத்துடன் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரில் இருவர் முஸ்லிம் அல்லாதவர்கள். இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரை இயக்கியதாக கூறி தேடப்படும் 20 இலட்சம் ரூபா பணப் பரிசில் அறிவிக்கப்பட்டுள்ள நபரும் முஸ்லிம் அல்லாதவர். கைது செய்யப்பட்டவர்கள் உண்மையில் அந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளில் இருந்து, ஒப்பந்த அடிப்படையிலேனும் அவ்வமைப்புக்காக தாக்குதல் நடாத்த தயாராக இருந்திருப்பின், அது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் வடிவத்தில் காணப்படும் மாற்றத்தையும், அவர்களது கொள்கை நிராகரிக்கப்பட்டுள்ளமையையும் வெளிப்படுத்தும் சான்றாகும்.
பயங்கரவாத பட்டம் எதற்காக?
அவ்வாறில்லையேல் இந்தியா ஏன் இவர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் தேர்தல் நிலைமை, இலங்கையில் தேர்தல் காலம் நெருங்குவது போன்ற காரணிகள் இந்த ஐ.எஸ். ஐ.எஸ். கதையின் பின்னனியாக கூட இருக்கலாம் என பாதுகாப்பு அவதானிகள் கூறுகின்றனர்.
இந்திய தேர்தலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ். உத்தி எவ்வளவுதூரம் வலுச் சேர்க்கும் என்பது கடந்த 2019 இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களின் எடுத்துக்காட்டாகும். அந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் கூட இந்தியா மீது விரல்நீட்டப்படுவதும், அங்கு நடந்த தேர்தல் போன்றவற்றை மையப்படுத்தியும் அண்மைக் காலங்களின் பல விடயங்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருகின்றன.
அதேபோல இலங்கையிலும் தேர்தல் ஒன்று நெருங்கும் நிலையில், இவ்வாறான ஐ.எஸ். ஐ.எஸ். பெயரிலான சம்பவங்கள் இலங்கையின் தேர்தலிலும் தாக்கம் செலுத்தலாம். அல்லது அதனூடாக ஒரு அவசர நிலைமை ஏற்படுமாயின் இலங்கையின் தேர்தல் நடாத்துவது தொடர்பில் கூட யோசிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இவ்வாறான உள்ளக, பரந்துபட்ட அரசியல் தேவைகள், இந்த ஐ.எஸ். ஐ.எஸ். கைது சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விசாரணை நிறைவுறும் வரை காத்திருப்பு:
இந்நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் நிறைவுற்று அது குறித்து இலங்கைக்கு அறிக்கையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை இலங்கை காத்திருக்கிறது. தற்போதும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தொடர்பாடல்களை முன்னெடுத்து தகவல்களை பறிமாறி வருகின்றது. அத்துடன் உள்ளக ஆரம்பகட்ட விசாரணைகள் பிரகாரம், உள்ளூரில் பாரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று இருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின.
இலங்கை வரும் குஜராத் பொலிஸ் படை:
இந் நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இலங்கை வர தீர்மானித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்டு இந்த கைதுகளின் உண்மை பின்னணி வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
ஊதிப் பெருப்பிக்கும் ஊடகங்கள்:
இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து தினமும் அறிக்கையிட்டு வருகின்றன. இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தற்போதும் ஐ.எஸ். ஆதரவு கொள்கை குடிகொண்டுள்ளது இவர்களால் இலங்கைக்கு மாத்திரமன்றி இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் உள்ளது போன்ற அபிப்பிராயத்தை அப்பாவி மக்கள் மத்தியில் தோற்றுவிக்க இவை முனைகின்றன. கடந்த கால நிகழ்வுகளிலிருந்து ஊடகங்கள் இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதையே இந்த சம்பவம் நன்கு உணர்த்திநிற்கிறது.- Vidivelli