இவ்வருடம் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளனர்.
மே 26 ஆம் திகதி வரை 532,958 பேர் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் 9210 பேர் தரை வழியாகவும் 19 பேர் கடல் வழியாகவும் மீதமானோர் ஆகாய மார்க்கமாகவும் சவூதியை வந்தடைந்துள்ளனர்.
யாத்திரிகர்களை வரவேற்று தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை சவூதியின் பல்வேறு திணைக்களங்களும் முன்னெடுத்துள்ளன.
இதேவேளை இம்முறை சவூதி அரேபிய மன்னரும் இரு புனித தலங்களின் காவலருமான சல்மானின் அழைப்பின் பேரில் 2322 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர். இவர்களில் 88 நாடுகளைச் சேர்ந்த 1300 பிரமுகர்கள் உள்ளடங்குவதுடன் பலஸ்தீனில் உயிரிழந்த காயமடைந்த சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் 1000 பேரும் உள்ளடங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டிப்பிறந்தவர்களை வெற்றிகரமாக பிரிப்பதற்கான அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் 22 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சவூதி மன்னரின் ஹஜ் மற்றும் உம்ரா விருந்தினர் நிகழ்ச்சித் திட்டமானது இஸ்லாமிய விவகாரங்கள் பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 26 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 60 ஆயிரம் பேர் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்தும் 20 பேர் புனித ஹஜ் யாத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli