- இலங்கையின் சி.ஐ.டி, ரி.ஐ. டி.யினரால் தொடர்ந்து தீவிர விசாரணை முன்னெடுப்பு
- குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தகவல்கள் முரண்படுவதாக தெரிவிப்பு
- பொய்யான தகவல் வெளியிட்ட விரிவுரையாளரும் கைதாகி பிணையில் விடுவிப்பு
( எப்.அய்னா)
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான தீவிர விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட நான்கு பேரும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பை பேணி வந்துள்ளனர் என்பதற்கான தகவல்களே சான்றுகளே இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தமை தொடர்பான விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்திய குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்களும் இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் வெளிவந்த தகவல்களும் முரண்படுவதாகவும் தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க, நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி, பொய்யான, மக்களை அச்சுறுத்தும் கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட்டமைக்காக கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பயங்கரவாத புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, அடிப்படைவாதிகள் 300 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை தனது பரிந்துரையில் உள்ளடக்கி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க கோரியிருந்ததாகவும், அப்பட்டியலில் இருந்த நால்வரே இந்தியாவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலாநிதி புன்சர அமரசிங்க தனியார் தொலைக்காட்சி செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்பிலேயே அவரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். நேற்று முன் தினம் (28) மாலை சி.ரி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட கலாநிதி புன்சர அமரசிங்க விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட கலாநிதி புன்சர அமரசிங்க நேற்று (29) கோட்டை நீதிவான் கோசல சேனாதீர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது கலாநிதி புன்சர அமரசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ மன்றில் ஆஜரானார்.
மன்றுக்கு பீ அறிக்கை சமர்ப்பித்த பொலிஸார், சந்தேக நபர் ஜனாதிபதி விசாரணைக் குழு அறிக்கையில் இல்லாத விடயங்களை பொய்யாக கூறி, மக்களை பயமுறுத்தும் கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளதாக கூறினர். இந்நிலையிலேயே சந்தேக நபர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், இந்தியாவில் கைதான நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகளை சிவில் பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அந்த நபர்கள் தொடர்பில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தி விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு, சிலாபம் பகுதிகளில் கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன் குறிப்பட்ட நான்குபேரினது வலையமைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli