இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் இந்தியாவில் முக்கிய இடங்களையும் நபர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்தனர் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த இரு வார காலமாக இது தொடர்பான செய்திகள் இந்திய மற்றும் இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.
இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ளதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள போதிலும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இதுவரை இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை. கடந்த இரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித துரும்புகளும் கிடைக்கவில்லை என்றே இலங்கையின் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல தீவிரவாத குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிசாருக்கு இவர்கள் கடந்த சில வருடங்களாக இந்தியாவிலிருந்து கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமையும் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்னரே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமையுமே தெரிய வந்துள்ளது. அத்துடன் இவர்கள் தொடர்பில் இந்திய பொலிசார் முன்வைக்கும் சந்தேகங்கள் எவையும் இவர்களது பின்னணியுடன் எந்தவகையிலும் பொருந்திப் போகவில்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த வருடம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐ.எஸ். பீதியைக் கிளப்புவதன் ஊடாக மக்கள் மத்தியில் மீண்டும் ‘தேசியப் பாதுகாப்பு’ எனும் கோஷத்தை முன்னிறுத்துவதற்கான ஒரு திட்டமிடலாகவும் இந்தக் கைதுகள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் காலாகாலமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதன் மூலமாக தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள இவ்விரு நாடுகளிலும் உள்ள அரசியல் தரப்புகள் முனைந்து வருவது கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். அவ்வாறான பிரசாரங்கள் மூலமாக முஸ்லிம்கள் மீது அநியாயமாக தீவிரவாத சாயம் பூசப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ள இன்றைய நிலையில் மீண்டும் ஐ.எஸ். புரளியைக் கிளப்பியிருப்பது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. இது சமூகங்கள் மத்தியில் சந்தேகங்களைத் தோற்றுவித்து அதனூடாக வாக்குகளைக் கொள்ளையடிக்கும் அரசியல் தந்திரோபாயமே அன்றி வேறில்லை.
இதனிடையே இலங்கையில் நூற்றுக் கணக்கான ஐ.எஸ். உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் இது தொடர்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவினால் புனர்வாழ்வளிக்குமாறு சிபாரிசு செய்யப்படட 300 பேரின் பெயர்ப்பட்டியலில் இந்தியாவில் கைதான நால்வரின் பெயர்களும் இருப்பதாகவும் ஊடகம் ஒன்றில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கூற்று பொய்யானது என்பதாலேயே கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்த நபர் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இது போன்று தினம் தினம் முஸ்லிம்கள் மீது பொய்யான தீவிரவாத முத்திரை குத்தும் அரசியல்வாதிகளும் கைது செய்யப்படுவார்களா? மதத்தலைவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டவர்களை உடனுக்குடன் கைது செய்து சட்டநடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறான கதைகள் தோற்றம் பெறுவதை தடுத்திருக்க முடியும். டாக்டர் ஷாபிக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாகவும் வலம் வருவது இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை போலும்.– Vidivelli