(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கைக்கு இவ்வருடம் 3500 ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் கருத்து தெரிவிக்கையில், ‘ஹஜ் தூதுக் குழுவில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்சரிடம் இலங்கைக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கோரியிருந்தார். ஆனால் மேலதிக கோட்டா சவூதி ஹஜ் அமைச்சினால் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு 500 ஹஜ் கோட்டா மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 700 பேர் ஹஜ் யாத்திரை செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பல ஹஜ் முகவர்களும் மேலதிக கோட்டாவில் ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் வதந்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு மேலதிகமாக ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli