ஹஜ் யாத்திரிகர்களுக்கு உயர் தர வசதிகளை வழங்க வேண்டும்
சவூதி அதிகாரிகளிடம் மன்னர் சல்மான் வலியுறுத்து
இம்முறை ஹஜ் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உயரிய தரத்தில் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு அவர்களின் கிரியைகளை எளிதாகவும் வசதியாகவும் செய்ய உதவும் வகையில் சிறந்த வசதிகளையும் சிறந்த சேவைகளையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை மன்னர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் ஜித்தாவில் நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய மன்னர், இந்த வருடம் யாத்திரை செய்ய உலகம் முழுவதிலுமிருந்து சவூதி அரேபியாவுக்கு வருகை தரும் யாத்திரிகர்களை வரவேற்றார். மக்கா மற்றும் மதீனா புனித தலங்களுக்கு சேவை செய்வது, அங்கு வருகை தரும் யாத்திரிகர்களை நலன்களைக் கவனிப்பது மற்றும் அவர்களின் வசதியை உறுதி செய்வது ஆகியவை சவூதியின் முன்னுரிமைக்குரிய பணிகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா, அரபா மற்றும் முஸ்தலிஃபா போன்ற புனிதத் தலங்களில் உள்ள யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சிறந்த சேவைகளை தொடர்ந்து வழங்குமாறு அரசாங்கத்தின் ஹஜ் திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் சல்மான் அறிவுறுத்தினார். இந்த மகத்தான மற்றும் புனிதமான பணியை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அவர் இதன்போது பிரார்த்தனை செய்தார்.
இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் சவூதி அரேபியாவுக்கு யாத்திரிகர்கள் வருகை தர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli