மேமன் கவி
இன்று உலக மட்டத்தில் பேசப்படும் விடயம் பலஸ்தீன விடுதலை போரட்டமும் அதன் துயர நிலையும்தான்.
இஸ்ரேல் சியோனிச எனும் தீய- ஆக்கிரமிப்பு நாசகார சக்தி பலஸ்தீனம் எனும் நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் கட்டவிழ்த்து இருக்கும் அராஜகத்தின் வரலாறு நீண்டது.
இதன் காரணமாகப் பலஸ்தீன போரட்டத்தை பற்றி உலக அறிவு ஜீவிகளாலும் பல்வேறு இயக்கங்களாலும், காலம் காலமாகப் பேசப்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேல் பலஸ்தீன மண்ணில் நிகழ்த்தும் கொடூரத்தைக் கண்டு அதற்கு எதிரான உலக அளவான குரல் வலுப் பெற்று வருகிறது. அதற்குச் சிறந்த உதாரணம் இஸ்ரேல் நிகழ்த்தும் பலஸ்தீன் மீதான அராஜகத்திற்கு மட்டுமல்லாமல் உலக அளவில் நடக்கின்ற அநியாயத்திற்கு துணை போகும் அமெரிக்க மண்ணிலேயே அதன் பல்கலைக்கழக மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுப்பி இருக்கும் குரல்தான். அக்குரலுடன் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும், சியோனிசத்திற்கும் எதிராக இஸ்ரேல் மண்ணிலும் உலக அளவிலும் தோன்றிய இயக்கங்களின் குரல்களையும் இணைத்துப் பார்க்கலாம்.
பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆரம்பம் தொடக்கம் உலக அளவிலான அறிவுஜீவிகள் குரல் எழுப்பி வந்துள்ளார்கள். அவர்களில் சிறந்த உதாரணமாகவும், முன்னோடியாக திகழ்ந்தவர்தான் எட்வர்ட் ஸெய்த்.
எட்வர்ட் ஸெய்த்
ஜெரூசலமில் 1935 ஆம் ஆண்டு பிறந்த ஒரு கிறிஸ்துவர். பின்காலனிய கோட்பாட்டின் முதன்மையானவர். மேலை நாடுகளில் உயர் கல்வி மேற்கொண்டவர். ஆங்கிலம் பிரெஞ்சு, அரபு என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1948 இல் இஸ்ரேல் உருவான பொழுது ஏற்பட்ட நெருக்கடியால் பலஸ்தீனத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்.
மேலைய நாட்டில் வாழ்ந்த பொழுது, மேற்குலகு கீழைத்தேய சமூகத்தினர் பற்றி கொண்டிருந்த மோசமான கருத்துகளை அறிந்து கொண்டு அவற்றை இனங்காட்டும் வகையிலும், மேற்குலகு கீழைத்தேயினர் பற்றி கொண்டிருந்த கருத்துகளை விமர்சித்த இவரது ‘ஓரியண்டலிசம் (Orientalism’ எனும் நூல், உலகம் இவரை திருப்பி பார்க்க வைத்த நூலாகும்.
இஸ்ரேல் என்ற சியோனிச சக்தி தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அச்சக்திக்கு எதிராக பல கருத்துகளை அறிவுஜீவிகள் முன்வைத்து வந்துள்ளார்கள். அவர்களில் முன்னோடியாக இயங்கியவர் எட்வர்ட் ஸெய்த்.
ஸெய்த் பின் காலனிய கோட்பாட்டில் கீழைத்தேயத்தையிட்டு மேற்குலகின் பார்வை பற்றி அரபு உலகத்தை பற்றியும், பலஸ்தீனத்தை பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் ஆழமாகவும் அகலமாகவும் முன் வைத்தார்.
இதைபற்றி “எட்வர்ட் ெஸய்த்தும் கீழைத்தேய இயலும்” (2009) என்ற நூலில் எச்.பீர் முஹம்மது, எட்வர்ட் ெஸய்த்தின் பின் காலனியத்தை பற்றி பேசவரும் பொழுது,
“கீழைச் சமூகத்தின் தொன்மங்கள், வரலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனிதப் பிரதிகள், ஆவணங்கள் போன்றவற்றைப் போலியானவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது, உலக நாகரீகத்தைக் கண்டறிந்ததும் அதைப் பரப்பியது மேற்குதான் என்பதான புனைவை அது உருவாக்கியிருக்கிறது. கீழைத்ேதயச் சமூகத்தின், குறிப்பாக மத்திய கிழக்கு அரபுச் சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் பொருட்படுத்தத் தகாதவை என்று மேற்கு காலம் காலமாகக் கருதி வந்திருக்கிறது. இதன் மூலம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.” (பக்கம்-11)
மேற்படி மேற்கின் கருத்தையும், கீழைத்தேசத்தை பற்றியும் அரபுலகைப் பற்றியும் ஸெய்த் செய்த ஆய்வுகள் மூலம், நிலவிய மேற்கின் பிரதியாதிக்கத்தை உடைத்ததோடு உலகம் பலஸ்தீனத்தின் இருப்பின் நியாயத்தையும் புரிந்து கொண்டதோடு, பலஸ்தீனத்திற்கு ஆதாரவான ெஸய்த்தீன் குரலின் பலமும் புரிந்தது.
ஸெய்த் பலஸ்தீன தேசிய கவுன்சில், அதன் பிறகு பலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவற்றில் இணைந்து செயல்பட்டார்.
ஆனால், எட்வர்ட் ஸெய்த் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உருவான இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை(1993) கடுமையாக விமர்சித்தார்.
உயர்கல்விக்காக மேற்குலக சூழலில் ெஸய்த் வசித்த போது அவர்களுடன் பலஸ்தீன பிரச்சினை பற்றி விவாதித்து இருக்கிறார், அந்த அனுபவங்களை கொண்டு இவர் வெளியிட்ட The Question of Palestine (1972) எனும் நூல் முக்கியமான ஒரு நூலாகும்.
இந்த நூலை பற்றி உலகில் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டன. அசல் மற்றும் ஆழமான ஆத்திரமூட்டும் புத்தகம் என்றும், பலஸ்தீனத்தை ஒரு தீவிர விவாதத்தின் பொருளாக மாற்றிய முதல் புத்தகம் என்றும், “அடையாளம் மற்றும் நீதிக்கான ஒரு கட்டாய அழைப்பு” -என அந்தோணி லூயிஸ் போன்றோர் முன்வைத்த கருத்துகளும், நியூயார்க் டைம்ஸ் போன்றவை இப்புத்தகத்தை பற்றி முன்வைத்த விமர்சன கருத்துகள், ெஸய்த் பலஸ்தீன பிரச்சினை பற்றி சொன்ன சிந்தனைகளின் கனதியினை எமக்கு எடுத்து காட்டின.
பலஸ்தீனை பற்றிய அவரது அடுத்த நூலான The Last Sky Palestine (1992) பற்றி பின்வருமாறு கூறப்பட்டது. “பலஸ்தீனிய வாழ்க்கை மற்றும் அடையாளத்தின் ஒரு ஆழமான உருவப்படம், அது எட்வர்ட் ெஸய்த்தின் உரிமை கோர முடியாத கடந்த காலத்தின் ஒரு ஆய்வு மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு ஒரு சாட்சி” அடுத்து இந்த நூலை பற்றி ெஸய்தின் மாணவர் கௌரி விஸ்வநாதன் ,
“ பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியர் ஏவிவிட்ட வன்முறையைக் கண்டு கொதிப்படைந்து போயிருந்த ஸெய்த், After the Last sky; Palestinian Lives என்ற நூலில், உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களையும், தகவல்களையும் தொகுத்திருந்தார். அந்த நூலை வெளியிட்டதே, அவருக்குப் பெரிய மன அமைதி தருவதாய் இருந்தது. ஒரு புதிய சாந்தம் அவரிடம் குடிகொண்டது. இஸ்ரேலிய அரசின் அராஜகத்தினால், நாடு கடத்தப்பட்டு, முடிவிலா துயரை அனுபவித்து வரும் தமது மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கொடுமையிலிருந்து ஒருவித விடுதலை கிடைத்தவர் போல் காணப்பட்டார். பலஸ்தீனியரின் அடையாளத்தையும், வரலாற்றையும் அழித்தொழிக்கும் இஸ்ரேலின் முயற்சிகளை மீறி, அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை வார்த்தைகளிலும், படங்களிலும் பதிவுசெய்ததன் மூலம், அவற்றை அவர் வாழ்ந்து பார்த்தார்”.. என்றார்
ஸெய்த் பலஸ்தீன தேசிய கவுன்சில், அதன் பிறகு பலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவற்றில் இணைந்து செயல்பட்டார்.
ஆனால், எட்வர்ட் ஸெய்த் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உருவான இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை(1993) கடுமையாக விமர்சித்தார்.
அது பலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்கச் செய்வதற்கான அறிகுறி என்றார். மேலும், காஸாவிலும் மேற்குக்கரைப் பகுதியிலும் இருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால், கடைசிவரை அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விடயங்களை தீர்க்கதரிசனமாக தெரிந்து கொண்டதால் ஸெய்த் அந்த ஒப்பந்தந்தை கடுமையாக விமர்சித்தார்.
ஸெய்த் அந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்ததிற்கும், தீர்க்கதரிசனமாக மேற்படியான எதிர்வு கூறலும், இஸ்ரேல் மீதான அவரது நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டியது.
பலஸ்தீனத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கான வரலாற்றின் நீட்சியாக, இஸ்ரேல் இரண்டாம் உலகப்போருக்கு பின் சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு துணை போகும் நாடுகளை ஸெய்த் இனங்காட்டியுள்ளார்.
அதில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு சமீப காலமாக மிகத் தீவிரமாக இருக்கிறது. அதை அன்று தொடக்கம் ஸெய்த் அடையாளப்படுத்தி அதிலும் குறிப்பாக அமெரிக்கா தொடர்ச்சியாக உலகின் முஸ்லிம்களை அழிப்பதில் உலக அரசியலில் முன் நிற்பதோடு, இன்றுவரை முஸ்லிம்களை அழிக்கும் சக்திகளுக்கு அது துணை போகும் ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை அழிப்பதில் அமெரிக்கா யூதர்களுக்கு துணை போகிறது. அதற்கு வரலாற்று ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன என்பதை ெஸய்த் பலப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்திலும் இஸ்ரேல் புரியும் அநியாயத்திற்கு அமெரிக்கா துணை போய்க் கொண்டு தான் இருக்கிறது. இன்று இஸ்ரேல் பலஸ்தீன் மீதான வன்முறைக்கு பரவலாக உலகம் பூராவும் எதிர்ப்பு இயக்கம் தோன்றியிருப்பதனால், இஸ்ரேல் பலஸ்தீன் மீதான கட்டவிழ்த்திருக்கும் வன்முறையை (பலஸ்தீன குழந்தைகளையும் பெண்களை கொல்வது, உடைமைகளை நாசமாக்குவது) கண்டிப்பதுபோல் அமெரிக்கா கபட நாடகம் நடத்துகிறது. (பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுவது போல்)
இறக்கும் வரை பலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ெஸய்த்தின் குரல் இன்றும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது.
பலஸ்தீன் போராட்டத்திற்கான ஆதரவாகவும் இஸ்ரேல் என்ற சியோனிஸத்திற்கு எதிராகவும் ஒலித்த ெஸய்த்தின் குரல் இன்று பௌதிக ரீதியாக ஓய்ந்து போய் இருந்தாலும், அதற்காக எட்வர்ட் ஸெய்த் முன் வைத்து சென்றிருக்கும் கருத்தியல் ஆவணங்கள் வலிமைமிக்க ஆயுதங்களாக பலஸ்தீன போராட்டத்திற்கு பயன்பட்டு கொண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.– Vidivelli