‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்
தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டார்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், காத்தான்குடியில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார்.
இதனை பார்வையிடுவதற்கு வருகைதந்த சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் எஸ்.எஸ்.எம்.ஜாபீர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதன்போது வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் ‘நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம் நிறுவனத்தின் பணிப்பாளர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் அப்துல் கரீம் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் வருகை தந்தனர்.
சவூதி அரேபிய தூதுவருக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபீர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்
கண்புரை சத்திர சிகிச்சை மேற் கொள்வதை தூதுவர் பார்வையிட்டதுடன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலையில் தங்கியிருப்பவர்களையும் தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் கடந்த (06) திங்கட்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமானது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் ‘நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்’ (King Salman Humanitarian Aid and Relief Centre) இதற்கான நிதி அனுசரணையை வழங்குகின்றது.
அத்துடன், ‘சவூதியின் ஒளி’ பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை இடம் பெறுகிறது
எதிர்வரும் 17ம் திகதி வரை இடம் பெறுவதுடன் இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண் வைத்தியர்கள் இங்கு சத்திர சிகிச்சையை மேற் கொள்கின்றனர்.
இத்திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசோதனை முகாம்கள் மூலம் சகல இனங்களையும் சேர்ந்த வசதி குறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல், மருந்து மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு வழங்குதல் ஆகியன அடங்கும்.
இத்திட்டமானது, கடந்த காலங்களில் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களின் தொடராகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 06ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தென்னிலங்கையில் வலஸ்முல்ல மற்றும் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் இவ்வாறான தன்னார்வத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையமானது, உலகெங்கிலும் தேவையுடைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னணியில் உள்ளது.
டிசம்பர் 31, 2023 வரையான காலப்பகுதியில், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தினால் உலகின் 98 நாடுகளில் மொத்தமாக 6,532,536,783 அமெரிக்க டொலர் செலவில் 2,673 திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் 14,311,611 அமெரிக்க டொலர்கள் செலவில் 17 திட்டங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli