ஏ.ஆர்.ஏ.பரீல்
ரஃபா பகுதியிலிருந்தும் வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காஸாவின் கிழக்குப் பிரதேசத்தின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இஸ்ரேல் இராணுவம் ரஃபா மீது கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் எட்டு சிறுவர்கள் உட்பட 22 பேர் பலியானார்கள். இதேவேளை ஹமாஸ் கரெம் அபூசலம் குறுக்குப் பாதை மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதால் இஸ்ரேலின் மூன்று இராணுவத்தினர் பலியானார்கள்.
ரஃபா மீது தரை வழித் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என கடந்த பல மாத காலமாக உலக தலைவர்களும், இராஜ தந்திரிகளும் இஸ்ரேலிடம் பல தடவைகள் கோரியிருந்தன. உதவி வழங்கும் நிறுவனங்களும் இத்தகைய கோரிக்கையை விடுத்திருந்தன.
ரஃபா மீது மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தரை வழித்தாக்குதல் காஸா மீதான மனிதாபிமான உதவிகளுக்கு தடையாக அமையும். அத்தோடு சவப்பெட்டி மீது இறுதி ஆணி அடிப்பதாக அமையும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
‘எந்தவொரு தரை வழித் தாக்குதலும் இன்னல்களையும் உயிரிழப்புகளையுமே ஏற்படுத்தும் என மனிதாபிமான உதவிகள் விவகார ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு மில்லியன் பலஸ்தீன் அகதிகள் ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் இவ் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரஃபாவின் மீது தரைவழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் ரஃபா சிவிலியன்களைப் படுகொலை செய்யும் நிலையமாக மாற்றம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடாத்துவது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வொண்டர் லெயன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ரஃபா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு மேற்கொண்டால் அது மிகவும் மோசமான நிலைமையினை ஏற்படுத்தி விடும். ரஃபாவில் மனிதாபிமான நிலைமை தற்போது மோசமடைந்துள்ள நிலையில் தாக்குதல் மேற்கொள்வது பெரும் ஆபத்தாக அமையும்’ என ஐரோப்பிய யூனியனின் 26 நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரஃபா மீதான தாக்குதல் திட்டத்தை தொடர்ந்து பல தடவைகள் எதிர்த்து வந்துள்ளனர். இஸ்ரேலை எச்சரித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தரை வழித்தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை தொடராக அறிவுறுத்தி வந்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாக்குதல்களைத் திட்டமிடாது அப்பகுதிக்கு மனிதாபிமான உதவிகளுக்கு ஒத்துழைக்குமாறும் அங்கு தஞ்சம் புகுந்துள்ள பலஸ்தீன மக்களின் நலன் மீது கரிசனை கொள்ளுமாறும் இஸ்ரேலிய பிரதமரை வேண்டியுள்ளார்.
ரஃபாவில் மனிதாபிமான நிவாரணங்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அவர்களது நிலைமை பெரும் ஆபத்துக்குள்ளாகும். மில்லியன் கணக்கான மக்கள் வேறு எங்கும் வெளியேற முடியாத நிலைக்குள்ளாக்கப்படுவார்கள் என நோர்வே அகதிகள் கவுன்ஸில் தெரிவித்துள்ளது. மேலும் பல உதவி வழங்கும் நிறுவனங்கள் ரஃபா மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதை எச்சரித்துள்ளன.
இஸ்ரேல் அமெரிக்காவிடம் விளக்கம்
காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் முழுமையான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அங்குள்ள பலஸ்தீனர்களை இவ்வாரம் அங்கிருந்தும் வெளியேற்றுவது தொடர்பான தனது திட்டத்தை இஸ்ரேல் பைடன் நிர்வாகத்திடம் விளக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அசோசியேடட் பிரஸ் நிவ்ஸ் ஏஜன்சியிடம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல், அமெரிக்க நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி ரஃபா மீது மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இராணுவ நடவடிக்கை அங்குள்ள அப்பாவி பலஸ்தீனர்களை அபாயத்துக்குள்ளாக்கிவிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ரஃபா மீதான இராணுவ நடவடிக்கையின் போது சிவிலியன்கள் பாதுகாக்கப்படுவதற்கான எவ்வித திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தனி பிளின்கன் கடந்த வாரம் தெரிவித்தார்.
பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்திள் உறுப்பினர்கள் இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமைக்கு பலத்த எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். யுத்தம் காரணமாக பலஸ்தீனின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளியேறிய மக்களின் இறுதி அகதி முகாமாக ரஃபாவே அமைந்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஒரு இலட்சம் பேர் வெளியேற்றப்படுவர்
கிழக்கு ரஃபாவிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என இஸ்ரேலிய இராணுவம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது. அங்கு தரை வழித் தாக்குதலை மேற்கொள்வதற்காகவே அவர்கள் வெளியேற்றப்படவுள்ளனர் எனவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளவுள்ள இராணுவ நடவடிக்கை அங்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள 1.5 மில்லியன் பலஸ்தீனர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும்என சர்வதேச சமூகம் எச்சரித்துள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி
ரஃபாவிலிருந்தும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளமை கெய்ரோவில் இடம்பெற்றுவரும் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. அத்தோடு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் ரஃபா மீதான ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்துகிறது என அல்ஜெஸீரா ஊடகவியலாளர் ஹானி மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, கரெம் அபு சலம் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக அல் மவாசி பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு கோரியுள்ளது. இப்பிரதேசம் முன்பு இஸ்ரேலிய இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை சிரேஷ்ட ஹமாஸ் உறுப்பினர் இஸ்ரேலிய பிரதமர் தற்போது நடைபெற்று வரும்யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் தொடர்பில் ஓர் உடன்படிக்கைக்கு வரவிருந்தனர். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ரஃபா மீதான தாக்குதலைத் திட்டமிட்டதால் யுத்த நிறுத்தம் சவாலுக்குள்ளாகியுள்ளது.
ரஃபா மீதான தாக்குதல் ஹமாஸின் யுத்த நிறுத்தம் தொடர்பிலான கோரிக்கையில் தளர்வினை ஏற்படுத்தும் என நியுயோர்க் பத்திரிகை தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நாங்கள் மிகவும் நெருங்கியிருந்த நிலையில் நெதன்யாகு உடன்படிக்கையை சிதைக்கும் நிலையிலே இருக்கிறார் என ஹமாஸின் சிரேஷ்ட அதிகாரி அபுமர்சூக் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்த பிரேரணை
கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த பிரேரணையை தாம் ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்த நிறுத்த பிரேரணை இஸ்ரேலின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என இஸ்ரேல் பிரதமரின் காரியாலயம் தெரிவித்துள்ளது. என்றாலும் இஸ்ரேல் அரசாங்கம் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக தூதுக் குழுவொன்றினை அனுப்பி வைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இஸ்ரேலின் போர் அமைச்சரவை, இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐ.நா. மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்கள் ரஃபா மீதான இராணுவ நடவடிக்கை நிலைமை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடும் என எச்சரித்துள்ளன.
ரஃபாவிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில் ரஃபா மீது கடந்த திங்கள் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அசோசியேடட் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் ரஃபா – எகிப்து எல்லையில் தாக்குதலை மேற்கொண்டதால் 12 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் யுத்தம் காரணமாக சுமார் 34,735 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 78,108 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட அக்டோபர் 7 தாக்குதல் காரணமாக இதுவரை 1,139 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டோர் ஹமாஸினால் பணயக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli