எம்.எப்.எம்.பஸீர்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, இந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட சட்ட ரீதியிலான தகைமை இல்லை என உயர் நீதிமன்றம் ‘உரிமைவினா நீதிப் பேராணை’ (Writ of Quo warranto) ஒன்றினை பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், எஸ்.சி. மேன்முறையீடு. இல. 11/2024 எனும் சிறப்பு மேன் முறையீட்டு மனுவை விசாரணை செய்து இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
அத்துடன் மனுதாரருக்கு வழக்குச் செலவுகளை செலுத்தவும் பிரதிவாதி டயானா கமகேவுக்கு இந்த தீர்ப்பூடாக கட்டளை இடப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல லக்மால் ஹேரத் சார்பில் இந்த சிறப்பு மேன் முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
கெளரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன் முறையீட்டு மனுவின் விசாரணையின் தீர்ப்பே நேற்று (8) அறிவிக்கப்பட்டது.
குறித்த மேன் முறையீட்டு மனுவில் பிரதிவாதிகளாக டயானா கமகே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் இலுக்பிட்டிய மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 15 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மேன் முறையீட்டு மனு விசாரணைகளின் போது மனுதாரர் சார்பில், ஹபீல் பாரிஸ் தலைமையில் நிஷிக பொன்சேகா, சனோன் திலகரட்ன, ரஞ்சித் சமரசேகர, சஞ்ஜீவ கொடித்துவக்கு ஆகியோர் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனை பிரகாரம் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
பிரதிவாதி டயானா கமகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோவும், 4 ஆம் பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிமும் ஆஜராகினர்.
ஏனைய பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திஸ்னா வர்னகுல தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.
மேன் முறையீட்டு நீதிமன்ற வழக்கு :
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையை உடையவர் என்பதனால் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவும், பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும், பாராளுமன்ற வாக்களிப்புக்களில் பங்கேற்கவும் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு சட்டபூர்வ உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் முதலில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், தனது முடிவை அறிவித்த நிலையில், பெரும்பான்மை நீதிபதிகளின் நிலைப்பாட்டுக்கு அமைய மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு மேன் முறையீட்டு மனு :
இந்த நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரியும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என ‘உரிமைவினா நீதிப் பேராணை’ ஒன்றினை அளிக்குமாறும் இம்மேன்முறையீட்டு மனுவூடாக உயர் நீதிமன்றிடம் கோரப்பட்டது.
மேன் முறையீட்டு விசாரணை :
அதன்படி இந்த சிறப்பு மேன் முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி விசாரிக்கப்பட்டது. அத்துடன் மனுதாரர் சார்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்கள் பெப்ரவரி 28 ஆம் திகதியும், முதல் பிரதிவாதி டயானா கமகே சார்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்கள் பெப்ரவரி 26 ஆம் திகதியும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று (8) தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பானது 32 பக்கங்களை கொண்டுள்ளதுடன், நீதியரசர் ஜனக் டி சில்வா தீர்ப்பினை எழுதியுள்ளார். ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்துடன் அவரே நேற்று தீர்ப்பினை திறந்த மன்றில் வாசித்தார்.
இலங்கை குடியுரிமையை நிரூபிக்க
தவறியுள்ளார்:
இந்த நிலையில் தீர்ப்பினை வாசித்த நீதியரசர் ஜனக் டி சில்வா, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது இலங்கை குடியுரிமையை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 89ஆவது உறுப்புரை பிரகாரம், இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் இந்நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினராக செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் :
“பிரதிவாதியான டயானா கமகே, தான் பிரித்தானிய கடவுச்சீட்டை உடையவர் என்பதை வழக்கு விசாரணைகளின் போது ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு வந்த்துள்ளமை தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் இராஜதந்திர கடவுச் சீட்டையும், உத்தியோகபூர்வ இலங்கை கடவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பிலும் வழக்கில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இலங்கை குடியுரிமைச் சட்டத்தின்படி, இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுக்கொள்ளும் போது அவரது இந்த நாட்டு குடியுரிமை தானாக இரத்தாகிவிடும். பிரதிவாதி டயானா கமகேவும் பிரித்தானிய பிரஜா உரிமையை பெற்றுக்கொண்ட பின்னர் அவரது இந்த நாட்டு பிரஜா உரிமை இரத்தாகிவிட்டது என்பது தெளிவான விடயமாகும். அவ்வாறு இருக்கையில் அவர் இலங்கையின் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளமையானது பிரதிவாதி (டயானா) தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளமையை புலப்படுத்துகின்றது” என நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
சி.ஐ.டி. விசாரணையில்
தெரிய வந்த விடயம் :
இதனிடையே, டயானா கமகேவுக்கு எதிராக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பிலும் அதன் அவதானிப்புக்கள் தொடர்பிலும் தனது தீர்ப்பில் நீதியரசர் ஜனக் டி சில்வா குறிப்பிட்டார்.
“டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரும் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்திருந்தார். அதனை ஆராய்கின்ற போது டயானா கமகே ஒரு பிரித்தானிய பிரஜை என்பது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு போதுமான காரணிகள் இருப்பது நீதிவானினால் அவதானிக்கப்ப்ட்டிருந்தது. பிரதிவாதியை கைது செய்ய நீதிவான் நேரடியாக உத்தரவிடாவிட்டாலும், அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. க்கு போதுமான காரணிகள் இருப்பதாக நீதிவான் குறிப்பிட்டுள்ளார். எனினும் சி.ஐ.டி. அவரைக் கைது செய்யவில்லை.
அவ்வாறு செய்யாததற்கு சிஐடியினருக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பதவி, அதிகாரம், செல்வம் போன்ற விடயங்களால் பாகுபாடுகாட்டப்படக் கூடாது என்பதற்காகவே சட்ட தெய்வத்தின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 12(1) உறுப்புரை பிரகாரம், ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.’ என நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்
விசாரணை :
இதனைவிட, மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பிலும் நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
‘மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணையின் போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அசல் பிரதிகள் சமர்ப்பிக்கப்படாமையை அந்த நீதிமன்றம் மனுவை நிராகரிக்க ஏதுவான காரணிகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. எனினும் அதனை ஏற்க முடியாது. குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை விடயங்களை ரிட் மனுவொன்றினை விசாரிக்கும் போது சமமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை ஆராயும் போது, அந்த நீதிமன்றத்திற்கு பிரதிவாதி டயானா கமகே சார்பில் முன் வைக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தின் பெரும்பாலான பகுதிகள் அப்படியே நகலெடுத்து ஒட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இவ்வாறான சுமார் 80 இடங்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பந்திகளே புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவறானது ‘ என நீதியரசர் ஜனக் டி சில்வா தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படியே, மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அரசியலமைப்பின் 89 ஆவது உறுப்புரை பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக டயானா கமகே செயற்பட சட்ட ரீதியிலான தகுதி இல்லை என நீதியர்சர் ஜனக் டி சில்வா, ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்துடன் தீர்ப்பை அறிவித்தார்.- Vidivelli