அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள்: ஞானசார தேரருக்கு எதிரான பரிந்துரைகளை சமர்ப்பிக்குக
சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் கேள்வி;
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை தொடர்கிறது
(எப்.அய்னா)
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ஞானசார தேரருக்கு எதிராக பரிந்துரைகளை முன் வைத்துள்ள நிலையில், அவ்வாணைக் குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த வாரம் (02) மீண்டும் இடம்பெற்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் உயர் நீதிமன்றின் 404 ஆம் விசாரணை அறையில், விசாரணைக்கு வந்தது. நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன.
இம்மனுக்கள் தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்னம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்டவர்கள் ஆஜராகின்றனர்.
ஏற்கனவே மனுக்கள் மீதான விசாரணையின் ஆரம்ப வாதமாக சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மன்றில் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்னமும், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் வாதங்களை முன்வைத்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்கம வன்முறைகளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமிடங்களும் ஆற்றிய உரை ( அபசரண உரை என அறியப்படும் உரை) ஏற்கனவே உயர் நீதிமன்றில் காணொளியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காணொளியின் திரை வசன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இக்கூட்டம் தொடர்பில் முன் கூட்டியே அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருந்தும் அக்கூட்டத்தை நடாத்த அனுமதியளித்து, பொலிஸ் கட்டளைச் சட்டத்தை சரிவர அமுல் செய்ய பொலிஸார் தவறியுள்ளதாகவும் பொலிஸாரும் அரசாங்கமும் தமது பொறுப்புக்களை சரிவர அமுல் செய்ய தவறியதாகவும் அதன் விளைவே அளுத்கம மற்றும் அதனை அண்மித்த முஸ்லிம் கிராமங்கள் மீதான அத்துமீறிய தாக்குதல் எனவும் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் மன்றில் சுட்டிக்காட்டினர்.
இதன்போது மன்றில் வாதங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ‘உண்மையில் இந்த கலவரம் ஒரு போக்குவரத்து சம்பவத்திலிருந்து ஆரம்பித்தது. இரு முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இடையே வழமையாக பாதையில் நடக்கும் ஒரு வார்த்தை பிரயோக சம்பவம், திரிபுபடுத்தப்பட்டு கலவரத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. திகனையிலும் இதுதான் நடந்தது. போக்குவரத்து சம்பவத்தை மையப்படுத்தி நடந்ததாக கூறப்பட்ட தேரர் மீதான தாக்குதல் தொடர்பில் அளுத்கம பொலிஸார் 3 பேருக்கு எதிராக களுத்துறை நீதிமன்றில் வழக்குத் தொடுத்தனர். அதில் அம்மூவரும் நிரபராதிகள் என கூறி, அப்படி ஒரு தாக்குதல் நடந்தமைக்கான சான்றுகள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என குறிப்பிட்டார்.
இதன்போது குறித்த தாக்குதல் சம்பவ வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரிடம் நீதியரசர்கள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க, அவ்வழக்கு பொலிஸாரால் தொடுக்கப்பட்டது எனவும் சட்ட மா அதிபருக்கு அதுகுறித்த தகவல் இல்லை எனவும், விபரங்களைப் பெற்று மன்றுக்கு சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதங்களை முன் வைக்கும் போது, ‘ இந்த போக்குவரத்து சம்பவத்துக்கு மேலதிகமாக அளுத்கம நகரில் சிட்டி சென்டர் எனும் வர்த்தக கட்டிடம் எரியூட்டப்பட்டது. இவ்வாறான பின்னணி சம்பவங்கள் இருக்கும் போது, அப்போதைய பதற்ற சூழலில் ஞானசார தேரரின் குறித்த கூட்டத்துக்கு தடை விதிக்க பல தரப்பினரும் கோரினர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூட பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பியது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, அளுத்கம, பேருவளை மற்றும் திகன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளது. அதில் ஞானசார தேரருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்)கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு பரிந்துரையும் செய்துள்ளது’ என நீதியரசர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதன்போது பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்கவை நோக்கி ஞானசார தேரருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, தற்போது அவர் சிறையில் இருப்பது அதன் கீழா என நீதியரசர்கள் வினவினர்.
அதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க, ஞானசார தேரர் தற்போது சிறையில் இருப்பது தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றத்துக்காக என்பதை உறுதி செய்ததுடன், ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ஞானசார தேரருக்கு எதிராக பரிந்துரைகளை முன் வைத்துள்ள நிலையில், அவ்வாணைக் குழு அறிக்கையை உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இவ்வழக்கு எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி தர்காநகர் அதிகாரிகொட, வெலிபிட்டிய, சீனன் வத்த, துந்துவ, பேருவளை, வெலிப்பன்னை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் பதிவாகின. இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விஷேடமாக, இதன் பின்னர் இவ்வாறான வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க பொறிமுறை ஒன்றினை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பூடாக வழங்கி அதனை அமுல் செய்ய சட்டத்தை அமுல் செய்பவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இம்மனுக்கள் ஊடாக கோரப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் , அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, அப்போதைய பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்ளியூ.சி.என். ரணவன, அபோதைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த வன்முறை காரணமாக 48 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ( சூட்டுக் காயங்கள் உட்பட), 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், 2248 முஸ்லிம்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்ததாகவும், 79 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் ( 17 வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிப்பு) மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையிலேயே தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், வன்முறைகளுடன் தொடர்புடையோருக்கு, அதற்கு காரணமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli