ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 725

அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்குத் தெரியவரும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்ததன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்காக ஜனாதிபதி என்ற வகையிலும் தனிப்பட்ட வகையிலும் தான் குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

நல்லாட்சி என்ற சொல்லை நாம் எங்கு பயன்படுத்திய போதும் நாட்டின் அரச நிர்வாகம் தூய்மையானதொரு நிர்வாகம் என்ற சான்றிதழை இன்னும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும், நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்ற சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்துடன், தொடர்ந்தும் நாட்டு மக்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்கு தெரியவரும் என்றும், குற்றவாளிகள் உரிய தண்டனையை பெறவேண்டியிருக்குமென்றும் குறிப்பிட்டார்.

வறுமையற்ற நாட்டையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் கட்டியெழுப்புவது இன்று எம்முன் உள்ள முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்வதில் நாட்டின் அரச அதிகாரிகள் மீது தான் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். .
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.