ஏ.ஆர்.ஏ.பரீல்
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் காஸா மீது மனிதாபிமானமற்ற வகையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து அப்பாவி பலஸ்தீனர்களை கொடுமையாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேலின் படுகொலைகளுக்கு எதிராக உலகநாடுகளில் மாத்திரமல்ல இஸ்ரேலிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராகவும், அவரது அரசாங்கத்துக்கு எதிராகவுமான போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களின் போது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலை காப்பாற்றி வந்தாலும் அங்கும் பலஸ்தீன இனப்படுகொலைகளை அந்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இஸ்ரேலின் காஸாவுக்கு எதிரான யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மைதானத்தை ஆக்கிரமித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகங்களும் பொலிஸாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நியுயோர்க் – கொலம்பிய பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுக்கு வெளியிலும் பரவியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளோர் பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலுடனான நிதி தொடர்புகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள யுத்தம் காரணமாக கடந்த சுமார் 7 மாத காலத்தில் சுமார் 34,388 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77, 343 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அங்கவீனர்களாகவும் மாறியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது பல்வேறு பல்கலைக்கழகங்கள் சட்டத்தையும் ஒழுங்கினையும் நிலை நாட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற் கொண்டதனையடுத்து நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழக அதிகாரிகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை லொஸ் ஏன்ஜல்ஸிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன் ஆதரவு மாணவர்களின் முகாம் அண்மை நாட்களாக பரந்துபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நிலைமை மோசமாகியது. பல்கலைக்கழகத்தில் இரு பிரிவினரை வேறுபடுத்துவதற்காக போடப்பட்டிருந்த தடுப்பினை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றியதனாலே இந்நிலைமை உருவாகியதாக கல்போர்னியா பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேரி ஒசாகா தெரிவித்துள்ளார்.
இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தள்ளி முரண்பட்டுக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் தவறான சுலோகங்களையும் உச்சரித்துக் கொண்டனர். பல்கலைக்கழக பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டு இரு தரப்பினரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தினையடுத்து பல்கலைக்கழகத்தில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இப்பல்கலைக்கழக அசம்பாவித நிகழ்வுகளின் போது லொஸ் ஏன்ஜல்ஸ் பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்படவில்லை. அத்தோடு கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்கலைக்கழக பொலிஸார் இரசாயன கண்ணீர் புகையை உபயோகித்தனர்.
பொஸ்டனில் வட கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை களைவதற்காக பொலிஸார் 100 மாணவர்களை கைது செய்து ஆர்ப்பாட்ட முகாமை அகற்றினார்கள். இந்த பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் ‘யூதர்களை கொலை செய்யவும்’ எனும் சுலோகங்கள் முன்வைக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. என்றாலும் பலஸ்தீன் ஆதரவு பல்கலைக்கழக ஆர்ப்பாட்ட குழு இதனை மறுத்துள்ளது. இவ்வாறு சுலோகங்கள் உச்சரிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை புளூமிங்ஹாம் இந்தியான பல்கலைக்கழக பொலிஸார் அப்பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ஆர்ப்பாட்ட முகாமிலிருந்த 23 பேரைக் கைது செய்ததாக இந்தியானா மாணவர் பத்திரிகை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு அரிசோனா அரச பல்கலைக்கழக பொலிஸ் பிரிவு சட்டவிரோத ஆர்ப்பாட்ட முகாமை நடாத்தியதாக 69 பேரைக் கைது செய்துள்ளது. இந்த முகாமிலிருந்தவர்களில் அதிகமானோர் அரிசோனா அரச பல்கலைக்கழக மாணவர்களோ அல்லது பல்கலைக்கழக பணியாளர்களோ அல்ல என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட முகாமை நிறுவியதாகவும் நிர்வாகத்தின் உத்தரவுகள் மீறப்பட்டதாகவும் அவர்கள் கலைந்து செல்லவில்லை எனவும் அதனாலேயே கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சென் லூயிஸிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டின் மற்றும் அவரது பிரசார முகாமையாளரும் அடங்குவர்.
அமெரிக்காவெங்கும் பல்கலைக்கழக தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பொலிஸார் அடாவடித்தனமாக தலையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கைது செய்தனர். அத்தோடு பீடங்களின் உறுப்பினர்களையும் பலவந்தமாக கைது செய்தார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பீடங்களின் உறுப்பினர்களது விடுதலைக்கு குரல் கொடுத்தனர். ஒரு வாரத்துக்கு முன்பு நிவ்யோர்க்கில் 100க்கும் மேற்பட்ட பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழகத்திலிருந்தும் தடுத்து வைக்கப்பட்டனர். சிலர் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகம், தெற்கு கல்போர்னியா பல்கலைக்கழகம், வன்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் மின்னஸ் ஒடா பல்கலைக்கழகங்களிலும் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சில பல்கலைக்கழகங்கள் தங்களது பட்டமளிப்பு விழாக்களை இரத்துச் செய்தன. ‘‘மாணவர்கள் பெரும் சவாலை பொறுப்பேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் பல்கலைக்கழக சட்டவிதிகளை மீறியதாக காரணம் காட்டி வெளியேற்றப்படலாம். நியூஜேர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களின் டியுசன் கொடுப்பனவு வருடத்துக்கு சுமார் 50 ஆயிரம் டொலர்களாகும்’’ என அல்ஜஸீராவைச் சேர்ந்த ஜோன் ஹென்ட்ரன் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் கோர்னல் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான மொமோடு டால் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் ஒரு முகாமை அமைத்ததற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
‘எங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை. இங்கு முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்பு சவாலாக உள்ளது. அதாவது அரபு மாணவர்கள், பலஸ்தீன மாணவர்கள் மற்றும் பலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவானவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை எனவும் மொமோடு டால் தெரிவித்துள்ளார்.- Vidivelli