வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?
பொறுப்பு கூறவேண்டியோர் அதிகாரத்திலுள்ள வரை விசாரணைகள் இடம்பெறாது என்கிறார் காவிந்த ஜயவர்தன
(எம்.ஆர்.எம்.வசீம்,இரா. ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் களனிகம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பல கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை முறையான விசாரணைகள் இடம்பெறாது. நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள போதும் இதுரை நீதி கிடைக்கவில்லை. 277 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் படுகாயமடைந்தார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
அரச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு அறிந்திருந்த நிலையில் தான் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முற்போக்கான சிந்தனையால் தவறான தீர்மானத்தை எடுத்து தற்கொலை குண்டுதாரிகளாக தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.இதனை சாதகமாக கொண்டு கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.
குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.நிலந்த ஜயவர்தன, பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் நேரடியாக தொடர்புபட்டிருந்தார்கள்.குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியதாகவே இவர்கள் அறிந்துள்ளார்கள். ஆனால் மைத்திரிபால சிறிசேன தான் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ. பிரிவு பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது.பயங்கரவாதி சஹ்ரானுடன் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கு பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆகவே சஹ்ரானுக்கும், இவருக்கும் இடையிலான தொடர்பு என்ன?
மாத்தளை பகுதியில் பொடி சஹ்ரான் என்று குறிப்பிடப்படும் நபருடன் பொலிஸ் பரிசோதகர் பண்டார என்பவர் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்றவுடன், தாக்குதலை ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்குமாறு இவர் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.
வெடிபொருட்கள் அடங்கிய லொறி 2019.04.05 ஆம் திகதி அதிகாலை 03 மணிக்கு களனி கம பகுதியில் செல்லும் போது அப்பகுதியில் வீதி பாதுகாப்பில் இருந்த ரத்நாயக்க என்பவர் வாகனத்தை சோதனை செய்ய முற்படுகையில் தற்போதைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த வாகனத்தை விடுவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அந்த பொலிஸ் அதிகாரி 2019.04.05 ஆம் திகதி அதிகாலை 03.10 மணிக்கு பதிவு புத்தகத்தில் 333 பக்கத்தில் 92 ஆவது பந்தியில் பதிவிட்டுள்ளார்.
சந்தேகத்துக்கிடமான வாகனத்தை பரிசோதனை செய்ய வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஏன் குறிப்பிட வேண்டும். அந்த வாகனத்தை விடுவிக்குமாறு அவருக்கு யார் ஆலோசனை வழங்கியது.பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது முறையான விசாரணைகள் இடம்பெறாது.எமது அரசாங்கத்தில் ஆரம்பத்தில் இருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.அதுவரை போராடுவோம் என்றார். – Vidivelli