உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி முழு விபரமும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்
முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முற்று முழுதாக ஓர் அரசியல் சூழ்ச்சியே. இச் சூழ்ச்சியின் முழு விபரங்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதற்காகவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அது தொடர்பாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சர்வமத தலைவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
நிகழ்வில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நீர்கொழும்பு காதிநீதிவான் மெளலவி எம்.எம்.முஹாஜிரீன் மற்றும் அப்துல் ரஹ்மான் முது குடாவும், பெளத்த மதத்தின் சார்பில் ஒமல்பே சோபித தேரரும், இந்து சமயத்தின் சார்பில் சிவ சுரேஸ் குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மேலைத்தேய நாடுகளின் இலங்கைக்கான தூதவர்கள், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, பாப்பரசரின் பிரதிநிதி பிரைன் உருகுவே ஆகியோரும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர். தாக்குதலில் பலியானவர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.
இஸ்லாம் மதத்தின் சார்பில் சர்வமத அமைப்பின் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட மெளலவி எம்.எம்.முஹாஜிரீன் மற்றும் அப்துல் ரஹ்மான் முது குடா என்போர் இலங்கையில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து எடுத்து விளக்கினர்.
‘முஸ்லிம்களின் அடிப்படை கோட்பாடு படைப்பினங்களுக்கு இரக்கம் காட்டுவதாகும். முஸ்லிம்கள் நாட்டில் ஏனைய இனத்தவருடன் சமாதானமாகவே வாழ விரும்புபவர்கள். என்றாலும் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டு வந்துள்ளார்கள். 30 வருட உள்நாட்டு யுத்த காலத்திலும் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.
1990 ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 300 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதே வருடம் அக்டோபர் மாதம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வடக்கிலிருந்தும் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டார்கள். சமீப காலத்தில் திகன, அளுத்கம, மாவனெல்லை கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் இரத்தக் களறி ஏற்படா வண்ணம் பேராயர் விவேகமாக செயற்பட்டு தடுத்தார். அதற்கு முஸ்லிம் சமூகத்தினர் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளும், உண்மையான குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக முஸ்லிம் சமூகம் என்றும் முன் நிற்கும்’ என்றார்.- Vidivelli