(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நீதிச் சேவைகள் ஆணைக்குழு புத்தளம் மற்றும் சிலாபம் நீதி நிர்வாகப் பிரிவின் காதிநீதிபதியாக கடமையாற்றியவரை பதவி நீக்கம் செய்திருந்தும் குறிப்பிட்ட காதிநீதிவான் தொடர்ந்தும் தனது பதவியில் அமர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா காதிநீதிவான்களின் சம்மேளனம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா காதிநீதிவான்களின் சம்மேளனத்தின் தலைவர் இப்ஹாம் யெஹ்யா நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘புத்தளம் மற்றும் சிலாபம் நீதிநிர்வாகப் பிரிவின் காதிநீதிவானாக கடமையாற்றியவர் கடந்த மார்ச் 1ஆம் திகதி முதல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றிடத்துக்கு பதில் கடமையாற்றுவதற்கு கல்பிட்டிய பிரதேச காதிநீதிவான் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டும் அவர் அப்பதவியை ஏற்கவில்லை.
இந்நிலையில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட காதிநீதிவான் தன்வசமுள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி வழக்குகளின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதிலும், உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும், பிள்ளை தாபரிப்புகளைச் சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பிட்ட காதிநீதிபதி பிரிவில் வாழும் மக்களில் பலர் காதிநீதிவான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமையை அறியாதுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள காதிநீதிவான் வழக்குகளில் சட்டவிரோதமாக தீர்ப்புகளையும் வழங்கி வருகிறார். எனவே நீதிச் சேவை ஆணைக்குழு இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக குறிப்பிட்ட பதவி விலக்கப்பட்டுள்ள காதிநீதிவானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக். கொள்கிறோம்.
மேலும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் காதிநீதிமன்ற கட்டமைப்புக்குள் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கோருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli