(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் சட்டவிரோதமாக கடமையினை மேற்கொண்டு வந்த புத்தளம் மாவட்ட முன்னாள் காதிநீதிவான் கடந்த செவ்வாய்க்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விவாகரத்து வழக்கு தொடர்பில் இலஞ்சமாக 5000 ரூபா பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ள புத்தளம் முன்னாள் காதிநீதிவானுக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
தனது ஒரு வருட கால காதிநீதிவான் பதவிக் காலத்தில் தனது நடவடிக்கைகள் காரணமாக அவர் நீதிநிர்வாகப் பிரிவு மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பினையும் எதிர்கொண்டிருந்தார்.
இவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 16 முறைப்பாடுகளும், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு 12 முறைப்பாடுகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு புத்தளம் மாவட்ட காதிநீதிபதியாக இவரை நீதிச் சேவை ஆணைக்குழு நியமித்திருந்தது. இவரது பதவிக் காலம் 2024 மார்ச் மாதத்துடன் காலவதியானது. இவரது சேவைக்காலம் நீடிக்கப்படவில்லை. என்றாலும் அவர் தான் பதவி நீடிக்கப்படாத நிலையிலும் சட்ட விரோதமாக தனது காதிநீதிபதி பதவியினைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தார்.
சட்டவிரோதமாக வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வந்தார். இது தொடர்பிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. புத்தளத்திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் திட்டமிட்டு காத்திருந்து இவரைக் கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். புத்தளம் காதிநீதிபதியின் ஊழல் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் காதிநீதிவான் பதவி விலக்கப்பட்டதன் பின்பு அவ்வெற்றிடத்துக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கற்பிட்டி காதிநீதிவான் நியமிக்கப்பட்டும் அவர் தனது உடல் நிலை காரணமாக அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் கொழும்பு பிரதேச காதி நீதிவான் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலே தற்போது புத்தளம் காதிநீதிபதி அதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதிநீதிமன்ற கட்டமைப்பில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதற்காக முன்னாள் மேன்முறையீட்டு நீதமன்ற தலைவர் ஏ.டப்ளியு. சலாம் மற்றும் முன்னாள் காதிகள் சபை தலைவரும், சட்டத்தரணியுமான நத்வி பஹாவுதீன் ஆகியோர் காதிகள் அனைவரையும் ஒன்று கூட்டவுள்ளனர்.- Vidivelli