இலங்கையின் ஹஜ் விவகாரம் மீண்டும் நீதிமன்றப்படிகளை மிதித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இம்முறை ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முகவர் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கினையடுத்து ஹஜ் ஏற்பாடுகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனம் மற்றும் பதிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்டளை நீதிப் பேராணை ( ரிட் ஒப் மன்டாமுஸ்) மனுவொன்று ஹஜ் முகவர் நிறுவனம் ஒன்றினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றம் 4 இடைக்கால கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்காலத் தடை இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரையைப் பாதிக்காத போதிலும் இவ்வருட யாத்திரைக்கான ஏற்பாடுகளில் பாரிய தாமதத்தையும் இழுபறிகளையும் ஏற்படுத்தப் போகிறது என்பது திண்ணம்.
இந்த வழக்கின் பின்னணியில் ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளின் ஒரு அங்கமான, பதிவு செய்யப்பட்ட முகவர்களிடையே கோட்டாக்களை ஒதுக்கீடு செய்த நடவடிக்கை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்திருந்தது. எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவை மீறும் வகையில் ஹஜ் குழு நடந்து கொண்டுள்ளதாகக் கூறியே இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘நீதிமன்றின் உத்தரவை ஹஜ் முகவர்கள் பின்பற்றத் தேவையில்லை’ என கூறும் குரல் பதிவுகள் நீதின்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே ஹஜ் குழுவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு மூலம் இவ்வருட ஹஜ் யாத்திரை பாதிக்கப்படும் என குறித்த குரல் பதிவுகள் மூலம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கம்போல இவ்வருடமும் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 93 ஹஜ் முகவர்களும் நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முகவர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தே தற்போது சிக்கலான நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இது விடயத்தில் ஹஜ் குழு கவனமான முறையில் நடந்து கொண்டிருப்பின் இவ்வாறான நிலைமை தோற்றம் பெற்றிருக்காது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அவ்வழிகாட்டல்கள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன. ஹஜ் வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் ஹஜ் விவகாரத்தில் இவ்வாறான சர்ச்சைகள் தோன்றுவதற்கு வாய்ப்பிருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஹஜ் குழு என்பன இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும்.
வருடா வருடம் ஹஜ் விவகாரத்தில் நீதிமன்றப் படிகளை மிதிப்பது ஆரோக்கியமானதல்ல. இந்த இழுபறியானது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இலட்சக் கணக்கான பணத்தை முதலிட்டு புனித யாத்திரை செல்லும் கனவில் உள்ள மக்களை இந்த விவகாரம் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது விடயத்தில் சகல தரப்புகளும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli