ரொஹான் பெரே­ரா­வாக வாழ்ந்து மர­ணித்த ‘தத்­து­வ­ஞானி’ பஸ்லி நிஸார்

0 434

சபீர் மொஹமட்

கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒரு­வரை சந்­திக்க சென்று கொண்­டி­ருக்கும் போது பொரல்லை ‘ஜய­ரத்ன’ மலர்ச்­சா­லைக்கு முன்­பாக சில நண்­பர்­களும் இட­து­சாரி கம்­யூ­னிஸ கொள்கை அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற ஒரு சில­ரையும் கண்டேன். யாரோ என் நண்­பர்­க­ளுக்கு தெரிந்த ஒருவர் இறந்­தி­ருப்பார், என நினைத்து எனது பய­ணத்தை தொடர்ந்து சென்று கொண்­டி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டதால் திரும்­பவும் வீட்டை நோக்கி பய­ணித்தேன். அப்­போது பொரல்­லைக்கு சென்று இறந்­தி­ருப்­பது யார் என்­பதை பார்த்­து­விட்டுச் செல்வோம் என்ற ஒரு எண்ணம் தோன்­றி­யதால் பொரல்லை ஜய­ரத்ன மலர்ச்­சா­லைக்கு சென்றேன்.

அங்கே சென்­ற­போது இறந்­தி­ருப்­பது ரொஹான் பெரேரா என்­கின்ற ஒருவர் என்­பதை நண்­பர்கள் ஊடாக தெரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் இன்னும் ஒரு உண்­மையை அறிந்தேன். அதுதான் ரொஹான் பெரேரா என்­பவர் பிறப்பில் ஒரு முஸ்லிம் என்­ப­துடன் அவ­ரு­டைய பூத­வு­டலை இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜாவத்தை ஜும்ஆ பள்­ளிக்கு அடக்கம் செய்­வ­தற்­காக எடுத்துச் செல்­ல­வுள்­ளார்கள் என்­பது. கூறி­ய­துபோல் பூத­வு­டலும் வாகனம் ஒன்றில் ஏற்­றப்­பட்டு ஜாவத்­தையை நோக்கிச் சென்­றது. ஆனால் பொரல்லை ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் குழு­மி­யி­ருந்­த­வர்கள் அனை­வரும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் என்­பதால் அவர்கள் எவ­ருக்­குமே பள்­ளிக்கு செல்ல வேண்­டிய தேவை இருக்­க­வில்லை.

அப்­போது என் மனதில் பள்­ளிக்குச் சென்று ஜனாஸா தொழு­கையை தொழு­து­விட்டு வீட்­டுக்குச் செல்­ல­லாமே என்ற எண்ணம் தோன்­றி­யதால் நான் பள்­ளியை நோக்கி சென்றேன். பள்­ளியை அடைந்­ததும் கடும் மழை பெய்­வ­தற்­கான சாத்­தியம் இருந்­ததால் மீண்டும் வீட்­டுக்கே வந்தேன். வீட்­டுக்கு வந்து முதல் வேலை­யாக யார் இந்த ரொஹான் பெரேரா என இணை­ய­த­ளத்தில் ஆராயும் போதுதான் அவர் பற்­றிய ஒரு சில விட­யங்­களை அறி­யக்­கி­டைத்­தது.
யார் இந்த ரொஹான் பெரேரா?

1964 ஆம் ஆண்டு பிறந்­துள்ள இவர் ஊட­கங்­களில் பிர­சித்தி பெறாத ஆனால் கல்­வி­மான்கள் மத்­தியில் பிர­சித்தி பெற்ற ஒரு தத்­து­வ­ஞானி என்­பதை தெரிந்து கொண்டேன். ரொஹான் பெரேரா என அழைக்­கப்­ப­டு­கின்ற இவர், நவீன உலக பெண்­மைத்­துவம் பற்­றிய பல தத்­து­வங்­க­ளையும் கோட்­பா­டு­க­ளையும் தர்க்க ரீதியில் முன்­வைத்­துள்ளார். மேலும் இது சார்ந்த பல ஆராய்ச்­சி­க­ளையும் இவர் மேற்­கொண்­டுள்ளார். இன்னும் அவர் குறித்து ஆராய்­வ­தற்கு முன்னர் மழை நின்று விட்­டதால், ஜாவத்தை மைய­வா­டியில் என்ன நடந்­தது என்­பதை தெரிந்து கொள்ள வேண்­டிய ஆர்வம் என்னை தூண்­டி­யது.

அவ­ச­ரப்­பட்டு வந்து விட்­டோமோ, இவ்­வ­ளவு பெரிய ஒரு ஆளு­மையின் ஜனா­ஸா­விற்­கான இறுதிக் கட­மை­களை என்னால் செய்ய முடி­யாமல் போனதே என்ற கவ­லை­யுடன் திரும்­பவும் பள்­ளிக்குச் சென்றேன். அங்கே சென்று விசா­ரித்­த­போது குறித்த ஜனா­ஸாவின் தக­வல்­களில் ஒரு சில பிரச்­சி­னைகள் காணப்­பட்­டதால் அங்கே அடக்கம் செய்­ய­வில்லை எனவும் ஜனா­ஸாவை குப்­பி­யா­வத்தை மைய­வா­டிக்கு எடுத்துச் சென்­ற­தா­கவும் கூறி­னார்கள். உட­ன­டி­யாக குப்­பி­யா­வத்தை மைய­வா­டிக்கு சென்றேன். அங்கே ரொஹான் பெரே­ரா­வு­டைய குடும்ப உற­வி­னர்கள் என நான் பொரல்­லையில் கண்ட மூவர் உட்­கார்ந்­தி­ருந்­தார்கள். அவர்­க­ளிடம் சென்று ஜனா­ஸாவை என்ன செய்­தீர்கள் எனக் கேட்­ட­போது, இங்கே அடக்க முடி­யாது இன்னும் சற்று நேரத்தில் மாளி­கா­வத்த மைய­வா­டியில் அடக்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன என கூறி­னார்கள்.

அப்­போது அவர்கள் என்­னிடம் உங்­க­ளுக்கு இவரை தெரி­யுமா? இவ­ரிடம் நீங்கள் கற்­றுள்­ளீர்­களா? என கேட்­டார்கள். இல்லை என பதி­ல­ளித்தேன். அப்­போது இவரைப் பற்றி எப்­படி உங்­க­ளுக்கு தெரியும்? சற்று நேரத்­துக்கு முன்பு தான் இணை­ய­த­ளத்தில் இவர் பற்றி ஆராய்ந்தேன். யார் இவர்? இவர் ஒரு ஆசி­ரி­யரா ? ஆசி­ரியர் மட்­டு­மல்ல. அப்­போது அர­சி­யல்­வா­தியா ? இல்லை இல்லை இவர் ஒரு சமூக அர­சியல் தத்­து­வ­ஞானி !

எங்கே பேஸ்­புக்கில் இவர் இல்­லையே இவ­ரு­டைய பெயர் ரொஹான் தானே? இல்லை, இவர் சமூக வலைத்­த­ளங்கள் ஊட­கங்கள் எதி­லுமே இல்லை என நான் மாலையில் வாசித்தேன்.

அவர்­க­ளு­டைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்­சியும் அந்த நேரத்தில் இருக்­க­வில்லை. ஏதோ இனம் புரி­யாத கவலை அந்த மூவ­ரையும் ஆட்­கொண்­டி­ருந்­தது. அப்­போது அவர்­க­ளுக்கு மாளி­கா­வத்தை மைய­வா­டியில் ஜனா­ஸாவை அடக்கம் செய்­வ­தற்­காக வரும்­படி தொலை­பேசி அழைப்பு கிடைத்­தது. பின் நாங்கள் மாளி­கா­வத்­தைக்குச் சென்றோம்.

என்னுள் இருந்த அடுத்த கேள்வி, ஏன் இவர் ரொஹான் பெரே­ரா­வாக வாழ்ந்­துள்ளார்? இவர் பற்றி எது­வுமே அறி­யா­த­வர்­க­ளாக குடும்­பத்­த­வர்கள் ஏன் உள்­ளார்கள்? பொரல்லை பொது மயா­னத்தில் அடக்­கப்­ப­ட­வி­ருந்த இவர் எப்­படி மாளி­கா­வத்­தைக்கு வந்தார் ? அங்கே இருந்த குடும்­பத்­த­வர்­க­ளிடம் இது பற்றி வின­விய சந்­தர்ப்­பத்தில் இன்னும் பல உண்­மை­களை அறிந்தேன்.

இவ­ரு­டைய உண்­மை­யான பெயர், மஹ்மூத் பஸ்லி நிஸார். பிறந்து வளர்ந்­தது எல்லாம் கொழும்­பில்தான். ஆனால் 17 வயதில் வீட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார். அங்­கி­ருந்த குடும்ப உற­வி­னர்கள் கூறி­ய­தன்­படி ‘சிறு­வ­யதில் தங்­க­ளது குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பிள்ளை வீட்டை விட்டு ஓடிச் சென்­ற­தாக வயோ­தி­பர்கள் கூறி­யுள்­ளார்­களாம். இன்று தான் அந்த ஓடிச்­சென்ற சிறுவன் இந்த ரொஹான் பெரேரா என்று தெரி­ய­வந்­த­தாக’ அவர்கள் கூறி­னார்கள். மேலும் ரொஹா­னு­டைய தாய் இன்னும் உயி­ரோடு இருப்­ப­துடன் தாயை சந்­திப்­ப­தற்­காக மாத்­திரம் ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை தாய் இருக்கும் இடத்­திற்கு சென்று வரு­வ­தா­கவும் அதற்கு மேல் ரொஹான் குடும்ப உற­வி­னர்­க­ளுடன் எந்த ஒரு தொடர்­பிலும் இருக்­க­வில்லை எனவும் அங்­கி­ருந்த உற­வி­னர்கள் கூறி­னார்கள்.

பின்பு மேலும் ஒரு சில ரொஹான் பற்­றிய உண்­மை­களை ரொஹானின் நண்­பர்கள் ஊடாக தெரிந்து கொண்டேன். ரொஹான் பெரேரா தனது இளமை காலத்தில் அம்­ப­லாங்­கொடை, பேரா­தெ­னிய மற்றும் தெம­ட­கொட ஆகிய பிர­தே­சங்­களில் மிகவும் எளி­மை­யான முறையில் வாழ்ந்­துள்ளார். சட்ட ரீதி­யான முறையில் திரு­ம­ணங்கள் எதுவும் செய்து கொள்­ளாமல் தனி­மை­யி­லேயே பல வருட காலம் வாழ்ந்­துள்­ள­துடன் 87/89 ஜேவிபி கல­வ­ரங்­களில் இவ­ரு­டைய உயி­ருக்கும் பல ஆபத்­துக்கள் இருந்­துள்­ளன. பல மேற்­கத்­திய தத்­து­வங்­க­ளையும் புத்­த­கங்­க­ளையும் வாசித்து தனது அறிவை இளமை காலம் முத­லி­ருத்தே இவர் வளர்த்­துள்ளார். 1995ஆம் ஆண்­டு­களில் உரு­வாக்­கப்­பட்ட எக்ஸ் (x) என்று அழைக்­கப்­ப­டு­கின்ற கல்­வி­மான்கள் மற்றும் தத்­து­வ­ஞா­னி­க­ளு­டைய குழுவின் ஒரு முக்­கிய அங்­கத்­த­வ­ராக ரொஹான் இருந்­துள்ளார். அதேபோல் பல்­வே­று­பட்ட இட­து­சாரி அர­சியல் கொள்­கை­களை சர­மா­ரி­யாக தனது நிய­மங்கள் கொள்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி இவர் விமர்­சித்தும் உள்ளார். ரொஹா­னு­டைய உடல் பொரல்லை மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் அனுர குமார திசா­நா­யக்க உட்­பட இட­து­சாரி அர­சி­யல்­வா­திகள் தொழிற்­சங்க தலை­வர்கள் என பலரும் இறுதி அஞ்­ச­லிக்­காக அங்கே வந்­துள்­ளார்கள்.

குடும்ப உற­வி­னர்­க­ளிடம், 17 வயதில் வீட்டை விட்டு சென்ற பஸ்லி இவர் தான் என்­பதை எவ்­வாறு நீங்கள் இறந்த பின்னர் அறிந்­தீர்கள் என்ற விட­யத்தை கேட்­ட­போது இன்­னு­மொரு திடுக்­கிடும் தக­வலை அவர்கள் கூறி­னார்கள்.

ரொஹான் கிழக்கு மாகா­ணத்­திற்கு பய­ணித்த வேளை கடந்த 12 ஆம் திகதி வாழைச்­சேனை பிர­தே­சத்தை அண்­டிய ஒரு பகு­தியில் மார­டைப்பு கார­ண­மாக மர­ணித்­துள்ளார். உடல் வாழச்­சேனை வைத்­தி­ய­சா­லைக்கு பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் பின் ரொஹா­னு­டைய நண்­பர்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை இந்த உடலை எவ்­வாறு கொழும்­புக்கு எடுத்து வரு­வது என்­பது. அப்­போ­துதான் வாழைச்­சேனை பொலி­சாரின் உத­வி­யுடன் கொழும்பு ஹுனு­பி­டியைச் சேர்ந்த இஸ்மத் என்­ப­வரை ரொஹானின் நண்­பர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்­டுள்­ளார்கள். இஸ்மத் வாழைச்­சே­னையைச் சேர்ந்த ஹாருன் சஹ்வி என்­ப­வரை தொடர்பு கொண்டு, ரொஹான் பெரேரா என்ற ஒரு சிங்­கள சகோ­த­ரரின் பூத உடல் வாைழச்­சேனை வைத்­தி­ய­சா­லையில் உள்­ள­தா­கவும் அதனை கொழும்­புக்கு எடுத்து வரு­வ­தற்­கான வாகன உத­வி­களை செய்து தர முடி­யுமா எனவும் கேட்­டுள்ளார். அப்­போது ஹாருன் சஹ்வி தாரா­ள­மாக முடியும் எனக் கூறி தனது மரு­ம­கனை சார­தி­யாக அமர்த்தி அந்த விடு­முறை நாளில் கூட ஒரு சிங்­கள சகோ­த­ர­ருக்­காக கொழும்பை நோக்கி பூத உட­லுடன் வந்­துள்­ளார்கள்.

அதன் பின்னர் 13 ஆம் திகதி இரவு வேளையில் வாழைச்­சே­னையைச் சேர்ந்த ஹாருன் சஹ்வி ஹுனுப்­பிட்­டியை சேர்ந்த இஸ்­மத்­திற்கு தொலை­பேசி ஊடாக அழைப்பு விடுத்து, நாங்கள் இரண்டு நாட்­க­ளாக திண்­டாடி கொழும்­புக்கு அனுப்பி வைத்த ரொஹான் பெரே­ரா­வு­டைய உண்­மை­யான பெயர் மஹ்மூத் பஸ்லி நிஸார் என்­ப­துடன் அவர் பிறப்பில் ஒரு முஸ்­லி­மாக இருந்­துள்ளார் என்ற உண்­மைய கூறி­யுள்ளார். வாழைச்­சேனை வைத்­தி­ய­சா­லையின் பிரேத பரி­சோ­தகர் கூறி­யதன் பிர­கா­ரமே தனக்கு இந்த உண்மை தெரிய வந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். மாளி­கா­வத்தை மைய­வா­டியில் ஜனாஸா தொழு­கையைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையை ஆற்­றிய இஸ்மத் இந்த தக­வலை தான் தொலை­பே­சியில் கேட்­ட­போது தன்­னு­டைய உடல் நடுங்­கி­ய­தா­கவும் அல்­லாஹ்­வு­டைய நாட்டம் எப்­பேர்ப்­பட்­டது என்­பதை கண்­கூ­டாக தான் அந்த சந்­தர்ப்­பத்தில் கண்­ட­தா­கவும் கூறினார்.

ரொஹா­னுடைய தாயார் இன்னும் உயி­ரோடு இருப்­ப­துடன் தனது மக­னு­டைய இந்த மரணம் குறித்த செய்­திகள் கிடைத்­ததைத் தொடர்ந்து தாயு­டைய வேண்­டு­கோ­ளாக அமைந்­தது, மக­னு­டைய ஜனாஸா முஸ்லிம் முறைப்­படி அடக்கம் செய்­யப்­பட வேண்டும் என்­ப­தாகும். அதனைத் தொடர்ந்து இஸ்மத் உட்­பட ரொஹா­னு­டைய குடும்­பத்­தினர் ரொஹானின் நண்­பர்­க­ளிடம் பொரல்லை ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் தாயு­டைய இந்த வேண்­டு­கோளை முன்­வைத்­ததன் பின்னர் மிகவும் மிகவும் பணிவுடன் அதனை அவர்கள் ஏற்றும் உள்ளார்கள். இறந்த தனது நண்பன், சக போராளி, ஆசிரியர் மற்றும் வழிகாட்டி என பலரும் ரொஹான் பெரேராவுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு பூதவுடலை குடும்ப உறவினர்களிடம் கையளித்துள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்திலேயே எதிர்பாராத விதமாக நான் அங்கே சென்றுள்ளேன்.

 

இறுதியாக இரவு 9.45 மணியளவில் ஜனாஸா தொழுகை முடிவடைந்து மாளிகாவத்தையைச் சேர்ந்த இளைஞர்கள், மரணித்த பஸ்லியின் குடும்பத்தினர் மற்றும் உயிரோடு இருக்கும் போது ரொஹான் யார் என்றே தெரியாத ஆனால் இறந்த பின்னர் அவரின் மாணவனாக மாறிய நானும் சேர்ந்து அந்த ஜனாஸாவை அடக்கம் செய்தோம்.

அன்றைய தினம் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு மஹ்மூத் பஸ்லி நிஸாரின் கப்ரின் அருகே நின்று துஆ செய்­த­வ­னாக அங்­கி­ருந்து வீடு வந்து சேர்ந்தேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.