“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”
தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு
ஏ.ஆர்.ஏ.பரீல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இனங்களுக்கிடையில் வேற்றுமையினை உருவாக்கி இனக்கலவரத்தினை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். பெரும் எண்ணிக்கையிலான உயிர்களைப் பலியெடுத்து சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதன் மூலம் தங்களது அரசியல் இலக்கினை எய்திக் கொள்வதற்காக ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும். எமது ஆட்சியில் இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் தாக்குதலை திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி நீதியை நிலைநாட்டுவோம்’ என தேசிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடிப்படைவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இத்தாக்குதலில் 273 பேர் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டோர் முழுமையாகவோ பகுதியளவிலோ அங்கவீனமானார்கள். இத்தாக்குதலில் பலியானவர்கள், காயங்களுக்குள்ளானவர்கள், சொத்துக்களை இழந்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் உரிய முறையில் சட்டத்தை அமுல்படுத்துவது எமது முக்கிய பொறுப்பாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்பு உரிய தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காதவர்கள், தாக்குதல் தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளை திசை திருப்பியவர்கள் மற்றும் சூழ்ச்சிக்காரர்களைப் பாதுகாத்தவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உட்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகளின்படி அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித தராதரங்களும் பாராமல் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இத்தாக்குதல் தொடர்பாக விஷேட விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும். இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் படியும் பொறுப்புக்கூற வேண்டிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணையின் கீழ் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணை நடாத்தி தீர்ப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரிக்கை விடுத்தல் மற்றும் அதற்கான தேவையான வசதிகளை வழங்கல் இந்த தாக்குதலுடன் தொடர்பான தற்போது நாட்டிலிருந்தும் தப்பியோடியுள்ள அனைத்து குற்றவாளிகளையும் இந்நாட்டுக்குள் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்தல் . இவர்கள் மூலம் தாக்குதலை திட்டமிட்டவர்கள், சூழ்ச்சிசெய்தவர்கள் யார் என்பதை விசாரணை மூலம் அறிந்து கொள்ளல், அவர்களை தராதரம் பாராது தண்டனைக்குட்படுத்தல்,
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பலியானவர்களின் குடும்பங்களுக்கு, சொத்துகளுக்கு உரிய நஷ்ட ஈடு முறைமையை அறிமுகப்படுத்தல், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலையை சீராக்க திட்டமொன்றினை வகுத்தல்.
இத்தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விஷேட ஆணைக்குழு மற்றும் வேறு விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அதற்கென நீதிமன்ற அதிகாரம் கொண்ட விஷேட விசாரணை ஆணைக்குழு வொன்றினை நியமித்து தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு குறுகிய காலத்துக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli