எப்.அய்னா
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளின் ஒரு அங்கமான, பதிவு செய்யப்பட்ட முகவர்களிடையே கோட்டாக்களை ஒதுக்கீடு செய்த நடவடிக்கை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனம் மற்றும் பதிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்டளை நீதிப் பேராணை ( ரிட் ஒப் மன்டாமுஸ்) மனுவொன்று யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் எனும் ஹஜ் முகவர் நிறுவனத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பரிசீலனை செய்யப்பட்ட நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றம் 4 இடைக்கால கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
அதில் 2024 ஆம் ஆண்டுக்காக தற்போதும் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களாக கருதப்படும் ஹஜ் முகவர்களிடையே, ஹஜ் கோட்டாக்களை பகிர்வதற்கு வழக்கின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவராக மனுதாரரான யுனைடட் ட்ரவல்ஸை உள்ளீர்க்க வேண்டும் எனவும் மற்றொரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு இடைக்கால கட்டளைகளையும் பரிசீலிக்கும் போது, புதிதாக யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனத்தை பதிவு செய்யப்பட்ட முகவராக உள்ளீர்த்து, ஹஜ் கோட்டாக்களை மீள் ஒதுக்கீடு செய்வதை மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை வலியுறுத்துவதாகவும் இந்த இடைக்கால தடை ஹஜ் பயணங்களுக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை எனவும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வருடம் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 93 ஹஜ் முகவர்களும் நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பகிர்ந்தளிப்புக்கே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீள் ஒதுக்கீடு செய்ய நீதிமன்றின் இடைக்கால கட்டளைகள் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.
இவ்வருடத்துக்கான பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களை தெரிவு செய்வதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி சி.ஏ./ ரிட்/ 173/2024 எனும் ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்: யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் (United Travels & Holidays (PVT) LTD)
மனுவின் பிரதிவாதிகள்:
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் தலைவர் ஸைனுல் ஆப்தீன் மொஹம்மட் பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹீம் அன்ஸார், அக்குழுவின் உறுப்பினர்களான இபாஸ் நபுஹான், நிப்ராஸ் நஸீர், எச்.எம். மில்பர் கபூர், அஹ்கம் உவைஸ், 2023 ஆம் ஆண்டின் ஹஜ் முறைப்பாடுகள் குறித்து விசாரித்த சுயாதீன விசாரணைக் குழுவின் செயலாளர், புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர்.
இந் நிலையில், இந்த கட்டளை நீதிப் பேராணை மனுவானது ( ரிட் ஒப் மன்டாமுஸ்) மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என். சமரகோன் முன்னிலையில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சஞ்ஜீவ களுஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆஜரானார்.
அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹீம் அன்ஸார், அக்குழுவின் உறுப்பினர்களான இபாஸ் நபுஹான், நிப்ராஸ் நஸீர், எச்.எம். மில்பர் கபூர், அஹ்கம் உவைஸ், 2023 ஆம் ஆண்டின் ஹஜ் முறைப்பாடுகள் குறித்து விசாரித்த சுயாதீன விசாரணைக் குழுவின் செயலாளர் ஆகியோருக்காக விதான பத்திரன சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான எம்.ஐ.எப். சுரைய்யா, சிபான் மஹ்ரூப் ஆகியோருடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜரானார்.
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் தலைவர் ஸைனுல் ஆப்தீன் மொஹம்மட் பைசல், புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோருக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி மிஹிரி டி அல்விஸ் ஆஜரானார்.
மனு தொடர்பிலான மனுதாரரின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த மார்ச் 25 ஆம் திகதியும் பிரதிவாதிகளின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த மார்ச் 28 ஆம் திகதியும் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்படியே, கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் இம்மனுவில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்து, மனுதாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் 4 இடைக்கால கட்டளைகளையும் பிறப்பித்திருந்தது.
இடைக்கால தடை உத்தரவுகள் :
1. யுனைடட் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் 2024 ஜனவரி 17ஆம் திகதி ஹஜ் குழு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. இவ்வருடம் ஹஜ் முகவராக யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனம் நியமிக்கப்படாமை தொடர்பில் அந்த நிறுவனத்தின் மேன்முறையீட்டை கவனத்திற் கொள்ள முடியாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2024 பெப்ரவரி 29 ஆம் திகதி அனுப்பிய கடிதத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. 2024 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களிடையே, ஹஜ் கோட்டாக்களை பகிர்வதற்கு வழக்கின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. 2024 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவராக மனுதாரரை உள்ளீர்க்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி :
கடந்த வருடம் (2023) ஹஜ் யாத்திரிகர்களை ஹஜ் கடமைக்கு அழைத்துச் சென்ற ஹஜ் முகவர் நிலையங்களில் ஒன்றான யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஒருவர் முறைப்பாடு ஒன்றினை செய்ததாக கூறப்படுகின்றது. முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அந்நிறுவனத்துக்கு ஹஜ் முறைப்பாட்டு விசாரணைக் குழு 2 வருடங்கள் தற்காலிக தடை விதித்தது. ஹஜ் முறைப்பாட்டு விசாரணை குழுவினால் விதிக்கப்பட்ட இத் தண்டனைக்கெதிராக குறிப்பிட்ட முகவர் நிலையம் மேன்முறையீடு செய்துள்ளது.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டபோது யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனமும் அதில் கலந்துகொண்டுள்ளது. முகவராக நியமனம் பெறுவதாயின் நேர்முகப் பரீட்சையில் 50க்கு மேற்பட்ட புள்ளிகள் பெற வேண்டுமெனக் கூறப்படும் நிலையில் குறித்த நேர்முகப் பரீட்சையில் யுனைடட் ஹஜ் முகவர் நிறுவனம் 68 புள்ளிகளைப் பெற்றுள்ளமை தொடர்பிலும் வழக்கின் இடையே சுட்டிக்காட்டப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் யுனைடட் முகவர் நிலையத்துக்கு எதிராக 2 முறைப்பாடுகள் ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றின் ஹஜ் வழிகாட்டல்களின் படி ஹஜ் முகவர் நியமன நேர்முகப் பரீட்சைக்கு முன்பே முறைப்பாடு தொடர்பான விசாரணை நடாத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டதன் பின்பே முறைப்பாடு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாகவும் முறைப்பாடுகள் ஹஜ் யாத்திரை நிறைவுற்று 3 மாத காலத்துக்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பின்னணியில் 5 மாதங்களின் பின்பே விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் மனுதாரர் குற்றம் சுமத்துகின்றார்.
அத்துடன் கடந்த வருடம் 2023இல் மனுதாரரான யுனைடட் ஹஜ் நிறுவனத்துக்கு 25 ஹஜ் கோட்டா ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 10 கோட்டாவை ஹஜ் குழுவின் தலைவர் தனது நிறுவனத்துக்கு அறிவிக்காமலேயே வேறு இரு ஹஜ் முகவர்களுக்கு தலா 5 கோட்டாக்காள் வீதம் வழங்கியுள்ளதாகவும் ஹஜ் குழுவின் தலைவருக்கு எதிராக குறித்த முகவர் நிறுவனத்தினால் ஹஜ் முறைப்பாடு விசாரணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் மனு மீதான பரிசீலனைகளின் போது வெளிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே பழிவாங்கும் நோக்குடன் தன் மீது தடை விதிக்கப்பட்டதாக மனுதாரரான யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிரதிவாதிகளான ரிசீலனைகளின் போது வெளிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே பழிவாங்கும் நோக்குடன் தன் மீது தடை விதிக்கப்பட்டதாக மனுதாரரான யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிரதிவாதிகளான ஹஜ் குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அக்குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றில் விடயங்களை முன் வைத்துள்ளதுடன், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கீழ் நடந்த சுயாதீன விசாரணையின் பரிந்த்துரைக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விடயங்களை முன் வைத்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்று அறிவித்தல் அனுப்பியுள்ளதுடன், மேற்குறிப்பிட்ட 4 இடைக்கால தடை உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli