எஸ்.என்.எம்.சுஹைல்
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அகால மரணச் சம்பவம் மத்துகமவை மட்டுமல்ல, களுத்துறையை மட்டுமல்ல இலங்கை தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை செய்திகள் வெளியானதையடுத்து ஒருவித சோகம் நம்மை ஆட்கொண்டது.
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்தவர் பாலித தெவரப்பெரும, 2002 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசியலில் பிரவேசித்த அவர், மத்துகம பிரதேச சபையின் தவிசாளரானார்.
பின்னர் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களின்போது களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாகாணசபை உறுப்பினரானார். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் பிரவேசித்தார். 2020 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சமூக சேவைகள் பிரதியமைச்சராகவும், நிலைபேறான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதியமைச்சராகவும் உள்நாட்டு விவகாரம், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதியமைச்சராகவும் இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பதவி வகித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஐ.தே.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார் பாலித தெவரப்பெரும.
கிட்டத்தட்ட 18 வருடங்கள் பிரதிநிதித்துவ அரசியலில் தடம்பதித்த பாலித மக்களின் அபிமானம் பெற்ற அரசியல்வாதியாக திகழ்கிறார். குறிப்பாக அவரின் சமூக உணர்வு மற்றும் சமூக சேவைகள் ஊடாகவே இவர் மக்கள் அபிமானத்தையும் பிரபலத்தையும் பெற்றவராக திகழ்ந்தார்.
2014 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் குறிப்பாக தர்காநகர், அளுத்கம, பேருவளை, வெலிப்பனை போன்ற பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது, தனது உயிரை துச்சமென மதித்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக அரும்பாடுபட்ட மனிதநேயமிக்க ஒரு அரசியல்வாதியாக பாலித தெவரப்பெரும இருக்கிறார். குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பமொன்றை மிகவும் ஆபத்தான நிலையிலும் துணிந்தும் காப்பாற்றியபோது கடுமையாக தாக்கப்பட்டார். இவ்வாறு அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சம்பவத்தை இன்றும் முஸ்லிம்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர். இது விடயமாக நாம் 2014 ஆம் ஆண்டு வெலிப்பனை பகுதிக்கு சென்றிருந்தபோது, ‘பாலித தெவரப்பெரும சண்டிமல்லிதான், ஆனால் அவர் தங்கமானவர். அவருக்கு தங்க மனசு’ என அப்பகுதியிலுள்ள ஒருவர் கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.
இதேபோன்று, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் மதுகம, வெலிபன்ன பிரதேசத்தில் 63 வயதான நபரொருவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார். மறுதினம் குறித்த சடலத்தை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த எம்.பி பாலித தெவரப்பெரும, சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். எனினும் இது குறித்து அறிவிக்கப்பட்டும் திடீர் மரண விசாரணை அதிகாரி நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் பாலித்த தெவரப்பெரும கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மேலே எடுத்துள்ளார். சடலத்தை மேலே எடுப்பதற்கு முன்னர் களுத்துறை மாவட்ட செயலாளருடன் அவர் தொலைபேசியில் உரையாடி திடீர் மரண விசாரணை அதிகாரியின் காலதாமதம் குறித்து தெரிவித்துமுள்ளார்.
அத்துடன், 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பெருந் தொகையான மக்கள் இன்னல்களை எதிர்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் பாலித தெவரப்பெரும மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் பெரிதும் மெச்சப்பட்டன.
இதனிடையே, கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று காலப்பகுதியில் மிக நீண்டகாலமாக அட்டுலுகம முஸ்லிம் கிராமம் முடக்கத்துக்குள்ளானது. அத்துடன், மிகத் திட்டமிடப்பட்டு சில தரப்பினரால் அக்கிராமத்துக்குள் கெடுபிடிகளும் முடக்கிவிடப்பட்டன. முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்கொண்ட இந்த சந்தர்ப்பத்தில் பாலித அம்மக்களுக்கு பக்கபலமாக இருந்தார். 2020 ரமழான் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின்போது, அட்டுலுகம பகுதிக்கு நிவாரணத்தை வழங்குவதிலும் அம்மக்களுக்கு உதவுவதிலும் பாலிதவின் மனிதாபிமான சேவையை ஒருபோதும் மறந்துவிடமுடியாது.
ஜூலை 2016 இல், 9 மாணவர்களுக்கு அரசாங்கம் பாடசாலையில் சேர்க்க மறுத்த போது , அந்த அதிகாரிகளை கண்டித்து மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். இதன்போதும், 9 மாணவர்களையும் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்படாத நிலையில் பாடசாலையினுள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட சம்பவம் அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாலிதவுக்கு இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னரே மாணவர்கள் பாடசாலையின் தரம் 1 இல் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு பாலித தெவரப்பெருமவின் சண்டித்தனமான மனிதநேயப் பணிகள் நீண்டுகொண்டே செல்கிறது. இவர் முஸ்லிம் சமூகத்தால் பெரிதும் நேசிக்கப்படும் ஒருவராகவே இருந்தார். 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டின்போது பாலித தெவரப்பெரும பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு தனது மகன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தெவரப்பெரும, தொடர்ந்து மகனின் பெயரால் மக்கள் சேவையினை விஸ்திரப்படுத்தி செயற்பட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது,கவசமிடப்படாத மின்கம்பி ஒன்றை மிதித்த நிலையில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சுமார் 40 நிமிடங்களின் பின்னரே அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல்வாதி என்பதை தாண்டி, மனிதநேயத்தோடு மக்கள் மனதை ஈர்த்தவராக பாலித தெவரப்பெரும இருந்து வந்த நிலையில் இன்று அவரது மறைவு இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.-Vidivelli