ஏ.ஆர்.ஏ.பரீல்
மத்திய கிழக்கில் யுத்த நிலைமையொன்று சூடு பிடித்துள்ளது. எந்த நிமிடத்தில் அங்கு யுத்தமொன்று வெடிக்கும் என அப்பிராந்திய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது எதிர்பாராவிதமாக தாக்குதலொன்றினை நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக கடந்த சனிக்கிழமை இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி 300க்கும் மேற்பட்ட ஆளற்ற விமானங்களையும் ஏவுகணைகளையும் ஏவியிருந்தது. இது இஸ்ரேல் மீது ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலில் 170 ஆளற்ற விமானங்களும் 30 கப்பல் ஏவுகணைகளும் ஈடுபட்டன என்றாலும் இவை உரிய இலக்கை அடையவில்லை. ஏவப்பட்ட 110 பீரங்கி குண்டுகளில் சிலவே இஸ்ரேலிய இலக்கை அடைந்தன. ஆளற்ற விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் சுமார் 99 வீதமானவை உரிய இலக்கினை அடைவதற்கு முன்பு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன என இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டெனியல் ஹக்காரி தெரிவித்திருந்தார்.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்குமான வான்வழி தூரம் ஈராக், சிரியா மற்றும் ஜோர்தான் ஊடாக சுமார் 1000 கிலோ மீற்றர்களாகும். கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி ஆளற்ற விமானங்களையும் ஏவுகணைகளையும் ஏவியிருந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்தது. இதேவேளை இத்தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ஆளற்ற விமானங்கள், ஏவுகணைகள் தங்களது நாட்டு வான் பரப்புகளுக்கு மேலால் பறந்ததாக ஈராக்கிய பாதுகாப்பு படையினர் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை பெரும் எண்ணிக்கையிலான ஆளற்ற விமானங்களும் ஏவுகணைகளும் அமெரிக்க படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களால் 80க்கும் மேற்பட்ட ஆளற்ற விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் யெமனிலிருந்து ஏவப்படுவதற்கு தயாராகவிருந்த 7 ஆளற்ற விமானங்களும் உள்ளடங்குகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி
ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு அமெரிக்காவானது ஈரான் மீதான எந்தவொரு பதிலடித் தாக்குதலிலும் பங்கேற்காது என வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு எச்சரித்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானால் மேற்கொள்ளப்பட்ட முன்னொரு போதும் இடம்பெறாத செயற்பாட்டுக்கு தமது படையினர் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் கவனமாகவும், தந்திரோபாயமாகவும் சிந்திக்க வேண்டும் என ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெத்தன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவிக்கையில், அமெரிக்காவானது தான் பரந்தளவிலான மோதலைத் தவிர்ப்பதை விரும்புவதாக இஸ்ரேலுக்குக் கூறியுள்ளார். தாம் இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாக்கவுள்ளதாகவும் ஆனால் இதில் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் பங்கேற்பது விதிவிலக்காகவுள்ளதாகவும் கிர்பியும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஒஹியோ மாநிலத்துக்கான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரான மைக்டேர்னர் தெரிவிக்கையில் மோதல்களைத் தணிவிப்பது தொடர்பான கிர்பியின் விமர்சனங்கள் தவறானவை எனவும் மோதல்கள் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள நிலையில் பதிலடியொன்றைக் கொடுப்பதே அமெரிக்க அரசாங்கத்தின் தேவையாகவுள்ளதெனவும் கூறினார்.
இப்போது என்ன நடக்கிறது?
ஈரானின் தாக்குதலுக்கு சரியான பதில் வழங்கப்படும் என இஸ்ரேலின் சனல் 12 TV யைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் அமைச்சரவை அவசரமாகக் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்ந்தது. இஸ்ரேலின் வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஈரானுடனான எதிர் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஅவ் கவன்டீ தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரான் இஸ்ரேலை மீண்டும் எச்சரித்துள்ளது. ‘இஸ்ரேல் ஈரானுக்கெதிராக தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமானால் தங்களது இராணுவ நடவடிக்கைகைள் முன்னரைவிட மிகப் பலமானதாக அமையும் என ஈரானின் ஆயுதப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மொஹமட் பக்ஹரி அரச தொலைக்காட்சி சேவைக்கு கூறியுள்ளார்.
இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்றால் அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் எத்தகைய தாக்குதலுக்கும் பதிலடி வழங்கத் தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிப்படையின் கட்டளை அதிகாரி ஹுசைன் சலமி தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நாஸர் கனானி ஈரானின் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் தற்பாதுகாப்புக்கானதுமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் போர் அமைச்சரவை
கலந்துரையாடல்
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஆளற்ற விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அமைச்சரவை ஒன்று கூடி ஆராய்ந்தது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பிலான தீர்மானம் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேலின் கூட்டணி ஈரானின் நடவடிக்கை குறித்து கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பென்ஜமின் நெதன்யாகுவின் அரசாங்கம் இதற்கு உரிய பதிலடி வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியது.
இஸ்ரேலுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலின் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரானின் இத்தாக்குலுக்கு உரிய பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேலின் இராணுவ பிரதானி லெப். ஜெனரல் ஹர்சி ஹலேவி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்படும்? எப்போது இத்தாக்குதல் முன்னெடுக்கப்படும்? என்ற விபரங்களை வெளிப்படுத்தவில்லை.
ஈரான் மீது புதிய தடைகள்?
ஈரான் இஸ்ரேல் மீது அண்மையில் மேற்கொண்ட தாக்குதலையடுத்து ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கவனம் செலுத்தியுள்ளன.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலையடுத்து எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகார கொள்கை தொடர்பான பிரதானி ஜோசப் பொரல் தாம் ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெஹ்ரானின் ஏவுகணைத் திட்டத்திற்கு தடை விதிக்குமாறு இஸ்ரேல் தனது நேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஏவுகணைத் திட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகளின் தடை எதிர்வரும் ஒக்டோபருடன் காலாவதியாகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தடை ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்டதாகும்.
எவ்வாறாயினும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) உட்பட பல நாடுகள் ஈரானுக்கு எதிரான தடைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருவதுடன் புதிய தடைகளையும் அமுல்படுத்தியுள்ளன.
சிரியாவிலுள்ள தனது கொன்சியுலர் காரியாலயத்தின் மீது கடந்த 1ஆம் திகதி இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் 13 பேர் பலியானதாகவும் இதற்கு பதிலடி வழங்கும் வகையிலே இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் ஈரானின் ஏவுகணைத் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு 30 நாடுகளின் தலைவர்களைக் கோரியுள்ளார்.
அத்தோடு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பெயரிடுமாறும் கோரியுள்ளார். அமெரிக்கா IRGC யை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ள போதிலும் ஐக்கிய இராச்சியம் (UK) இதுவரை அவ்வாறு பெயரிடவில்லை.
இதேவேளை அமெரிக்க திறைசேரி செயலாளர் யெலன் எதிர்வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதிய தடைகளின் கீழ் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான திட்டம் உள்வாங்கப்படும் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, பாதுகாப்பு அமைச்சு என்பனவும் உள்வாங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் தெரிவித்துள்ளார்.- Vidivelli