எம்.எச்.எம்.பர்ஹத் மரிக்கார் (ஹக்கானி)
இலங்கையில் பிறை விவகாரத்தில் இருக்கின்ற சர்ச்சை புதிதான ஒன்றல்ல. எனினும் அவ்வப்போது இந்த சர்ச்சை தோன்றி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் இந்த ஆக்கம் இது பற்றி யசரியான புரிதலை ஏற்படுத்தி நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லலாம் என்பதைப் பற்றியே ஆராய முற்படுகிறது.
இலங்கையில் பிறை விவகாரத்தில்
பிரதான மூன்று பிரிவினர்
சர்வதேச அல்லது மக்கா பிறையின் படி அமல் செய்பவர்கள்.
கணக்கீட்டின் படி ஷேக் அவர்களின் அறிவித்தலின் பிரகாரம் அமல் செய்பவர்கள்.
இலங்கையின் பிறைக் குழுவின் உள்நாட்டு பிறை அறிவித்தலின் படி அமல் செய்பவர்கள்.
இவர்களுள் முதல் இரண்டு சாராருக்கும் இலங்கையின் பிறைக்குழுவின் அறிவித்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் பிறைக் குழு விடயத்தில் எதுவும் பேச வேண்டியதுமில்லை. அவர்கள் அவர்களின் பாட்டில் அவர்களுடைய உலமாக்களின் வழிகாட்டலில் அமல் செய்து விட்டாலே பிரச்சினையின் பாதி முடிந்து விடும்.
இம்முறை பிறை கண்டமை பற்றி அறிவிப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தில் சமூக ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்த பதிவுகள் இட்ட மற்றும் வட்ஸப்பில் குரல் பதிவுகள் இட்டு வீர வார்த்தை பேசி குழப்பியவர்களுள் இவர்களே பாதி. இதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
எனவே இந்த இரண்டு சாராருக்கும் இலங்கை பிறைக் குழுவின் விடயங்களில் தலையிடவோ, அல்லது அவர்களின் நலவுகளை பாராட்டவோ, அல்லது அவர்களின் பிழைகளில் குறை கூறவோ எந்த வித தேவையும் இல்லை. காரணம் அந்த இரண்டு குழுவும் ஏலவே இலங்கை பிறைக்குழுவிற்கு கட்டுப்படாதவர்கள் அல்லது அவர்களை ஏற்காதவர்கள்.
மேற்கூறப்பட்ட இரண்டு சாராரும் அவரவர் முறைப்படி அமல் செய்து விட்டு இலங்கை பிறை விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் அரைவாசி பிரச்சினை முடிந்துவிடும். அல்ஹம்துலில்லாஹ். மீதமுள்ள அரைவாசிக்கு வருவோம்.
தாமதித்து அறிவிப்பது என்பது அவ்வளவு பெரிய விடயமல்ல. சர்வதேச மக்கா பிறைப்படி அறிவிப்பவர்கள் வழமையாக இந்த நேரத்தில் தான் அறிவிக்கின்றார்கள் என்பதை யாவரும் அறிவோம்.
மூன்றாவது தரப்பினரான இலங்கை பிறைக்குழுவின் அறிவித்தலின் படி அமல் செய்பவர்களையும் மூன்றாக பிரிக்கலாம்.
பிறை தொடர்பான அறிவு உள்ளவர்கள், பிறைபார்ப்பதில் தம்மை வழமையாக ஈடுபடுத்துபவர்கள் மற்றும் பிறைக்குழுவை சார்ந்தவர்கள். (பிறைக்குழு யார் என்பது தனித் தலைப்பு)
பேஸ்புக், வட்ஸ்அப் பதிவர்கள். பிறை தொடர்பாக தமது கருத்துக்கள் கணிப்புக்கள் பற்றி பதிவிடுபவர்கள்.
பிறை விவகாரத்தில் தமது எந்த ஈடுபாடும் இல்லாமல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக பிறைக் குழு அறிவிக்கும் அறவிப்பை ஏற்று அமல் செய்யும் பொதுமக்கள். (இவர்களுள் உலமாக்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள் என சமூகத்தின் பல தரப்பினரும் அடங்குவார்கள்).
இவர்களுள் மூன்றாம் தரப்பினரான பொதுமக்கள் பிறை விவகாரத்தில் இலங்கையின் பிறைக் குழுவின் அறிவிப்பை ஏற்று அமல் செய்கிறார்கள். இவர்களால் எந்தவித பிரச்சினையும் இல்லை.
மீதமுள்ள அரைவாசிப் பிரச்சினையில் 25 வீதப் பிரச்சினை முதல் தரப்பான பிறை சம்பந்தப்பட்ட விடயத்தில் ஈடுபடுபவர்களிடமும், மற்றய 25 வீதப் பிரச்சினை பேஸ்புக், வட்ஸ்அப் பதிவர்களிடமுமே இருக்கிறது.
முதலில் பேஸ்புக் பதிவர்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும். தாம் தமது சொந்த கருத்தில் அல்லது சொந்த ஆய்வின் படி (முஜ்தஹித்களாக) பிறை விவகாரத்தில் அமல் செய்யப்போகின்றோமா அல்லது இலங்கை பிறைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவித்தலை ஏற்று பின்பற்றி (முகல்லித்களாக) அமல் செய்யப்போகின்றோமா.
இந்த முடிவை எடுத்து விட்டால் அவர்களின் பிரச்சினையும் இலங்கையில் இருக்காது. சொந்த முடிவில் அமல் செய்தால் அவர்களுக்கும் பிறைக் குழுவிற்கும் சம்பந்தம் இருக்காது. அல்லது பிறைக்குழுவின் அறிவிப்பை நாம் பின்பற்றப் போகின்றோம் என்றால் அவ்ர்களும் மூன்றாம் குழுவில் இணைந்து விடுவார்கள். அவர்களாலும் பிரச்சினை இருக்காது.
இனி மீதமுள்ளது 25 வீதப் பிரச்சினையே. இதனை மிகவும் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். காரணம் இதிலுள்ளவர்கள் சமூகப்பொறுப்பை சுமந்தவர்கள்.
பிறை விவகாரத்தில் தம்மை ஈடுபடுத்தும் பிறைக்குழு மிகவும் நிதானமாகவும், தமது அபிலாஷைகளுக்கு அப்பாலும் மரணத்திற்கு பின்னர் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் முன்னிறுத்தப்படுவேன் என்ற பொறுப்புவாய்ந்த உணர்வோடு செயற்பட வேண்டும்.
இலங்கையில் யார் பிறைக் குழு?
பிறைக்குழு என்றதும் எமது அனைவரது மனக் கண் முன்பும் வந்து நிற்பது ஜம்இய்யத்துல் உலமாவும், ரிஸ்வி முப்தியும் தான். பிறைக் குழுவின் எந்த விடயமென்றாலும் வழமையாக ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்வாங்கப்படும் பெயர்கள் ஜம்இய்யத்துல் உலமாவும், ரிஸ்வி முப்தியும்.
விடயம் அவ்வாறல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறைக்குழு என்பது ரிஸ்வி முப்தியோ ஜம்இய்யாவோ அல்ல. மாற்றமாக பின்வருவோர் பிறைக் குழுவினராக கருதப்படுகின்றனர்.
- கொழும்பு பெரிய பள்ளிவாசலின் உறுப்பினர்கள். (இவர்களுள் உலமாக்கள் மற்றும் பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் உள்ளடங்குவார்கள்.)
- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம். (இது இலங்கை அரசாங்க திணைக்களம். அரபு நாடுகளில் இந்த திணைக்களங்களே முடிவுகளை எடுக்கின்றார்கள்.) - இது தவிர இலங்கையின் பலதரப்பட்டோர் இந்த பிறைக் குழு தீர்மானிக்கும் மாநாட்டில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்.
இப்போது சற்று தெளிவடைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு மீதமுள்ள 25 வீதப் பிரச்சினையை பார்ப்போம்.
முதலாவது : பிறைக்குழுவானது பிரதான ஐந்து தீர்மானங்களை எடுத்துள்ளீர்கள். இதில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த உலக முஸ்லிம் மார்க்க அறிஞர்களுடன் இணைந்து மறுபரிசீலனை செய்தால் பிறை விவகாரத்தில் சற்று முன்னோக்கலாம் என்றிருந்தால் அதனை செய்வது காலத்தின் தேவை.
இரண்டாவது : பிறை பார்த்து ஒரு முஸ்லிம் சாட்சி சொல்லும் போது அதனை பிறைக் குழு ஆராயும் விடயத்தில் இருக்கின்ற விடயங்களை மக்கள் மயப்படுத்துங்கள். இது பிறைக்குழுவின் பொறுப்பாகும். நீங்கள் ஒருவர் பிறை கண்டால் எப்படி எல்லாம் கேள்வி கேட்பீர்கள் என்பதை அறிந்தால் தான் அத்துனையையும் கவனத்தில் கொண்டு பிறைபார்ப்பவர் செயற்படுவார்.
மூன்றாவது : பிறைக் குழுவிற்கு தகவலை பெரிய பள்ளியை சார்ந்தவர்களோ, ஜம்இய்யாவை சார்ந்தவர்களோ அல்லது திணைக்களத்தை சார்ந்தவர்களோ தான் தர வேண்டும் என்ற எந்தவித அடிப்படையும் இல்லை. இது உங்கள் உள்வீட்டு பிரச்சினை அல்ல. ஜம்இய்யாவின் கிளைகள் அறிவிக்க நாம் அதை ஏற்க மாட்டோம் என பெரிய பள்ளியோ, திணைக்களத்தின் அதிகாரிகள் பிறையை காண அதை நிராகரிக்க ஜம்இய்யாவோ முனையக்கூடாது.
நான்காவது : பிறைக் குழுவில் உள்ளவர்கள் தமது அபிப்பிராயங்களை பிறைக்குழு மாநாட்டில் இருந்து கொண்டு தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பும் செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது : பிறை காணமுடியுமான நாட்களில், பிறை காண வாய்ப்பு குறைவான நாட்களில் என பிறை பார்ப்பதற்கு சாத்தியமான ஊர்களை அடையாளப்படுத்தி பிறை பார்ப்பதற்கான குழுக்களை அமைத்தல். ஏற்கனவே அமைத்துள்ளதை நாம் அறிவோம். ஆனாலும் அதனை சற்று மீள் கட்டமைத்தல்.
ஆறாவது : 12 மாதங்களும் பிறை பார்க்கின்ற போதிலும் ரமழான் முடிந்து ஷவ்வால் பிறையிலேயே மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்ற விடயத்தை அடையாளப்படுத்தி அனைத்து மஸ்ஜித்களிலும் இமாம்களுக்கு திணைக்களத்தின் அனுசரணையில் பிறைக்குழு வழிகாட்ட வேண்டும். மேலும் நிருவாகிகளும் கட்டாயம் அனைத்து மஸ்ஜித்களிலும் அன்றைய தினம் ஒன்று கூடி பிறை பார்ப்பவர்கள் அறிவிக்கும் அறிவித்தலை உரிய முறையில் அறிவிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏழாவது : பிறைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை நன்றாக அலசி ஆராய்ந்து நியமிக்க வேண்டும். கடும்போக்கான, கொள்கைவாதிகளாக தம்மை அடையாளப்படுத்திய, முற்கோபக்கார்கள், தாம் பிடித்த முயலுக்கு நாலுகால்கள் என்று இருப்பவர்களுக்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.
எட்டாவது : பிறைக் குழு சுயாதீனமாக இயங்க முடியாத நிலை இருந்தால் பகிரங்கமாக அல்லாஹ்விற்காக அதனை வெளிப்படுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
ஒன்பதாவது : ஒன்றாக கூடி தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் வெளியில் வந்து எதிராக அல்லது எமக்கு விருப்பமில்லை ஆனாலும் என்ன செய்ய என்றெல்லாம் தமக்கு வேண்டப்பட்டவர்களோடு பேசுவதை பிறைக்குழுவை சார்ந்தவர்கள் விட்டு விட வேண்டும்.ஆக இப்படியான சில விடயங்களை செய்யும் போது நிச்சயமாக பிறை சர்ச்சையை தவிர்க்கலாம். சந்தோஷமாக நாம் எமது பெருநாள்களை கொண்டாடவும் முடியும்.