மஹர பள்ளிவாசல் விவகாரம் : புதிதாக விசாரணை நடாத்தி சுமுகமான தீர்வு பெற்றுத் தருக
வக்பு சபையிடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள, சிறைச்சாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மஹர ஜும்ஆ பள்ளிவாசல் தொடர்பில் புதிதாக விசாரணைகளை ஆரம்பித்து சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் வக்பு சபையின் தலைவரைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் பள்ளிவாசலின் தலைவர் ரி.எம்.ஹபீல் எஸ். லக்ஷானா, செயலாளர் ரி.ஈ.பொர்ஹாம், பொருளாளர் ரி.ரஜிஊன் எஸ். லக்ஷானா என்போர் கையொப்பமிட்டு வக்பு சபையின் தலைவருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2019 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து மஹர பள்ளிவாசலினால் மஹர சிறைச்சாலைக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் எனக் கருதி அப்பள்ளிவாசல் சிறைச்சாலை நிர்வாகத்தினால் கையகப்படுத்தப்பட்டது. பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டது. பள்ளிவாசலினுள் புத்தர் சிலை வைக்கப்பட்டது.
இப்பள்ளிவாசலை இப்பகுதியில் வாழும் 350 குடும்பங்கள் தங்களது சமய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். கடந்த ஐந்து வருட காலமாக இப்பகுதி மக்கள் தங்கள் சமய கடமைகளுக்கு பள்ளிவாசல்களைத் தேடி பல மைல்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
இப்பள்ளிவாசலை மீள முஸ்லிம்களுக்கு கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு நாங்கள் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், சமய கலாசார அலுவல்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபை போன்றவற்றிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. வக்பு சபை ஏற்கனவே இது தொடர்பில் விசாரணை ஒன்றினையும் நடத்தியுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மஹர ஜும்ஆ பள்ளிவாசல் மீண்டும் முஸ்லிம்களிடமே திரும்ப வழங்கப்பட வேண்டுமென 2020இல் சிபாரிசும் செய்திருந்தார். என்றாலும் அந்த சிபாரிசுகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
மஹர பள்ளிவாசல் உடமைகள் பல தடவைகள் சேதமாக்கப்பட்டு வந்துள்ளன. 2013.03.04ஆம் திகதி பள்ளிவாசல் பிரதான வாயிலிலும், மதில் சுவரிலும் பன்றியின் படங்கள் வரையப்பட்டன. இதனையடுத்து பொலிஸ் பாதுகாவலும் வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி பள்ளிவாசல் சிறைச்சாலை நிர்வாகத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் 1903இல் சிறைச்சாலையில் பணிபுரிந்த மலே சமூகத்தின் மத கடமைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகும். பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் நாம் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்கள் அல்ல. அன்றாடம் சமயக் கடமைகளைப்பூர்த்தி செய்து கொண்டு ஏனைய சமூகத்துடன் நல்லுறவுடன் வாழ்ந்து வருபவர்கள். எங்களது பள்ளிவாசல் கையகப்படுத்தப்பட்டு விட்டதால் வயதானவர்கள் சமயக் கடமைகளுக்காக தூர இடத்துப் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் வக்பு சபை இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடனும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு பெற்றுத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli