காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பான மீளாய்வு சபை மீண்டும் இயங்கும் சாத்தியம்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார் ஹக்கீம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள உடைமைகளில் (வீடு மற்றும்காணி) குடியிருப்போர் மற்றும் உரிமை கோருவோர் தொடர்பில் தகராறுகள் எழும்போது அவைபற்றி விசாரித்த பின்னர், வீடமைப்பு ஆணையாளர் மேற்கொள்கின்ற தீர்மானத்தில் திருப்தியடையாத பட்சத்தில் அவை சம்பந்தமாக முறையீடு செய்வதற்கு முடியாத விதத்தில் மீளாய்வு மேன்முறையீட்டு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாதிருந்தமையினால் கடந்த காலங்களில் அந்தச் சபை முற்றாகச் செயலிழந்திருந்தது.
அதன் விளைவாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.சகல சமூகத்தினரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் கூட, தலைநகரில் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை ,கொம்பனித்தெரு, மாதம்பிட்டி , மட்டக்குளி, கிருலப்பனை போன்ற சன நெருக்கடியான பிரதேசங்களில் செறிந்து வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் இதனால் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் .
இது விடயமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனை குழுவிற்கு அறிவித்து, பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டதன் பயனாக, பிரஸ்தாப மீளாய்வு சபைக்கான உறுப்பினர்களை நியமித்து, குறித்த சபையை மீண்டும் இயங்க வைப்பதற்கு நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் கீழ் வருகின்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழுள்ள காணி மற்றும் வீடுகளில் வசிப்போரும், உரிமை கோருவோரும் பிணக்குகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றிற்கு திருப்திகரமான தீர்வு எட்டப்படாத நிலையில், இந்த சபைக்கு முறையீடு செய்வதன் மூலம் காலதாமதமின்றி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும்.
இதற்காக 1974 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டம் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli