இஸ்ரேல் தாக்கினால் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி எச்சரிக்கை , பிராந்திய நாடுகள் ஈரானின் இராணுவ பலத்தை நம்ப வேண்டும் என்றும் அழைப்பு
ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்குதலை நடாத்தினாலும் அது ‘பாரிய மற்றும் கடுமையான’ பதிலடியைச் சந்திக்க வேண்டி வரும் என ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இஸ்ரேல் மீது ஈரான் நடாத்திய வான் வழித்தாக்குதலானது இஸ்ரேலின் இராணுவத் தோல்வி மாத்திரமன்றி ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களுக்கு மூலோபாய ரீதியாகவும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற தேசிய இராணுவ தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஈரானிய இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளினதும் பாரிய அளவிலான இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றதுடன் அவற்றின் அதிநவீன ஆயுத தளபாடங்களும் பாதுகாப்பு சாதனைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
தனது உரையின்போது இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண விரும்பும் அரபு நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ‘‘ஈரானின் தாக்குதலின் மூலம் உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் இராணுவம் ஆகியவற்றில் சியோனிச ஆட்சி தோல்வியடைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அது ஒரு மூலோபாய பின்னடைவாகும். சில நாடுகள் சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்க முயன்றன, ஆனால் அவை இப்போது தங்கள் சொந்த நாடுகளிலேயே அவமானப்படுத்தப்பட்டுள்ளன. இது அந்த ஆட்சிக்கு ஒரு மூலோபாய தோல்வியாகும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானிய ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கான உலகளாவிய ஆதரவையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பையும் கோடிட்டுக்காட்டினார். பலஸ்தீனத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு முன்னணி இப்போது அனைத்து நாடுகளின் மற்றும் மதங்களின் அடையாளமாக மாறியுள்ளது என்பதை வலியுறுத்தினார்.
“எங்கள் ஆயுதப் படைகள் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிசெய்து, பிராந்தியம் முழுவதும் இறையாண்மையை நிலைநிறுத்துகின்றன.மேலும் அவை முற்றிலும் நம்பகமானவை” என்று ஈரானிய ஜனாதிபதி கூறினார். பிராந்திய நாடுகள் இஸ்ரேலுடனான வெளிநாட்டு உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளை நம்புவதை விட தங்கள் சொந்த வளங்கள் மற்றும் முஸ்லிம் படைகளையே நம்பியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடாத்திய ‘உண்மையான வாக்குறுதி’ எனும் பெயரிலான தாக்குதலானது வரையறுக்கப்பட்டதும் தண்டிப்படை நோக்காகக் கொண்டதும் என வலியுறுத்திய அவர் இஸ்ரேலிய அரசாங்கம் ஏதேனுமொரு இராணுவ சாகசத்தை காண்பிக்க முற்பட்டால் அதனை பிராந்தியத்திலிருந்து முற்றாக துடைத்தழிப்பதற்கு ஈரான் ஒருபோதும் பின்நிற்காது என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரான் நடாத்திய தாக்குதலானது வெல்ல முடியாத இராணுவம் எனும் இஸ்ரேலின் கட்டுக்கதையை தகர்த்துவிட்டது என்றும் அது ஒரு சிலந்தி வலைக்கு ஒப்பானது என்பது தற்போது வெளித் தெரிய வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“ஆபரேஷன் ட்ரூ ப்ரொமிஸ் ஒரு வரையறுக்கப்பட்ட மற்றும் ஒரு விரிவான நடவடிக்கை அல்ல. நாங்கள் ஒரு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், இஸ்ரேலில் எதுவும் எஞ்சியிருக்காது ”என்றும் அவர் கூறினார்.
ஈரானிய ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் “ஈரானிய இராணுவம் தேசத்தின் சார்பாக நிற்கிறது மற்றும் தாயகம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இஸ்லாமியப் புரட்சியின் மதிப்புகளைப் பாதுகாக்க செயல்படுகிறது. இறை நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நமது இராணுவம் உலகின் ஏனைய படைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது. எமது இராணுவம் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற படை. அதன் இராணுவ அறிவு நவீனமானது மற்றும் அத்தகைய திறமை ஈரானிய இராணுவத்தை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்தியுள்ளது. எமது இராணுவம் அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
போர் விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள் மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்களின் உற்பத்தி உட்பட இஸ்லாமிய குடியரசின் இராணுவ திறன்கள், பிராந்திய மற்றும் திநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
போர் விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள் மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்களின் உற்பத்தி உட்பட இஸ்லாமிய குடியரசின் இராணுவ திறன்கள், பிராந்திய மற்றும் உலக அளவில் நாட்டை ஒரு வலிமைமிக்க சக்தியாக நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் பிராந்தியப் நாடுகள் ஈரானிய ஆயுதப் படைகளை நம்பியிருக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.- Vidivelli