கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம்.புஹாரி (கபூரி)
இலங்கைத் திருநாட்டில் பௌத்தர், கி21றிஸ்தவர், இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற நான்கு மதத்தினரும் ஒரு தாய் பெற்ற சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். இடைக்கிடையே சில மனக்கசப்புக்கள் ஏற்பட்ட போதிலும் சகலதையும் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.
சமீப காலங்களாக பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் ஏற்பட்டு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் துவேஷ மனப்பாங்கை வெளிக்கொணரத் தொடங்கியபோது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்றி ஒவ்வொரு சமூகத்தவரும் மற்ற சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தனர்.
இந்தச் சிந்தனைகளுக்குத் தூபமிடுவதுபோல் நடந்த நிகழ்வுகள்தான் “ஸஹ்ரான்” என்ற சுயநலமியின் நடவடிக்கைகள். இதன் பின்னர்தான் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மையினரை அடக்கி ஆளும் சிந்தனை தோற்றம் பெற்றது. இதனால்தான் அளுத்கம, பேருவல, திகன, அம்பாரை என்று தொடங்கி டொக்டர் ஷாபி வரை துவேஷம் தலைவிரித்துத் தாண்டவமாடிய நாடகங்கள்.
போதாக்குறைக்கு கொவிட் 19 என்ற அரக்கனும் தலைதூக்கினான். ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டான். இதில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற வேறுபாடுகள் இன்றி சகலரினதும் பிரேதங்களை எரிக்க வேண்டும் என்று மெத்தப்படித்த மேதாவிகள் சிலர் அரசுக்கு ஆலோசனை வழங்கியது மட்டுமன்றி தங்களது வக்கிர புத்திக்கு தீனிபோடவும் முனைந்தனர்.
பொதுவாக நமது நாட்டில் சிலர் தங்களது உறவுகளின் பிரேதங்களை மண்ணில் புதைப்பதும், தீயினால் எரியூட்டுவதும் சாதாரணமாக நடைபெற்று வரும் வேளையில் முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரம் தங்களின் பிரேதங்களை மண்ணில் புதைக்க வேண்டுமென்றும் இது தங்களின் மார்க்க அனுஷ்டானங்களில் ஒன்று என்ற தங்களின் சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.
இச்சமயத்தில்தான் ஒரு சிலர் சில முக்கியஸ்தர்களின் உள்ளங்களில் முஸ்லிம் சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்வதற்கான ஒரு வேண்டுகோளை அரசுக்கு ஆலோசனையாக வைத்தனர். அரசியல்வாதிகளும் தங்களது கையாலாகாத தலைமைத்துவத்தை அவர்களின் உள்ளங்களில் ஒழித்திருந்த வக்கிர புத்தியையும் வெளிக்கொண்டுவர ஒரு சாதகமான சந்தர்ப்பமாகவே இதனைக் கருதினர். அவர்களால் எதையும் சொல்லவோ கட்டளையிடவோ முடியவில்லை. மகுடி கேட்ட நாகம் போல் அவர்களும் அதற்குத் தலையசைத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டதோ முஸ்லிம் சமூகம் மட்டும்தான். இந்த அநியாயத்தை நிறுத்துங்கள் எங்கள் சமூகத்தின் பிரேதங்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று அழுதனர், கெஞ்சினர். ஏனைய சமூகத்திலுள்ள நிதான போக்குடையவர்களும், சமாதான விரும்பிகளும் வேறுபாடுகளின்றி தங்களது எதிர்ப்பை பல்வேறு வழிகளில் வெளிக்கொணர்ந்தனர்.
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அரசும் அமைதியாகவிருந்தது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தலைமைகளும் தங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரிக்கும் அளவுக்கு வந்து விட்டனர்.
இருந்தாலும் துணிச்சலுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு பெண் வைத்தியர் முன்வந்தார். அவரது தந்தையும் கொவிட் 19 நோயில் இறந்து விட்டார். அவரது ஜனாஸாவை எரிப்பதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நமது சமூகத்திலுள்ள ஒரு சில தலைமைகளும் முதுபெரும் சட்டத்தரணிகளும், ஜனாதிபதி சட்டத்தரணிகளும் அமைதியாக இருந்த வேளையில் இந்தப் பெண் டாக்டர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தார். அவரது உறவுகளும், நட்புகளும் அவருக்குக் கைகொடுத்தனர்.
அந்த வைத்தியரின் தந்தையான இப்றாஹீம் ஆசிரியர் அவர்களின் ஜனாஸாவை மறு அறிவித்தல் வரும்வரை எரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் அவருக்குத் துணை நின்றது. ஜனாஸா வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் விடயம் சர்வதேசம் வரை சென்று விட்டது. முஸ்லிம் நாடுகளும் ஏனைய நாடுகளும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
போதாக்குறைக்கு பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்து உலக முஸ்லிம் சமூகத்தினதும் அதிருப்தியை தெரிவித்து இந்நிலை நீடித்தால் நாடுகளுக்கிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று அழுத்திக் கூறியதும் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தது. ஜனாஸாக்கள் எரிக்கப்படாது அடக்கப்பட வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
காலங்கள் கடந்து விட்டன. வருடங்கள் உருண்டோடி விட்டன. தற்போது பாராளுமன்றத்தில் ஒரு குரல் ஒரு இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாஸா எரிப்புக்காக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதற்கான ஆய்வுடன் கூடிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறுகிறார்.(விடிவெள்ளி 04.04.2024)
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பத்திரிகைச் செய்திக்குப் பின்னர்தான் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில தலைமைகளும், சில ஜனாதிபதி சட்டத்தரணிகளும் விழித்துக் கொண்டார்கள் போலுள்ளது.
‘‘மன்னிப்பை ஏற்க முடியாது. விரிவான விசாரணை தேவை’’ என்று நான் முந்தி நீ முந்தி என்று அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.(விடிவெள்ளி 11.04.2024)
சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? தேர்தல்கள் வரப்போகிறதல்லவா? முஸ்லிம் சமூகத்தை உசுப்பேற்ற வேண்டுமல்லவா? கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பேரங்கள் பேசவும், டீல் பேசவும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாமல்லவா?
நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள் எரிக்கப்படும்போது ஏன் பிறந்து இரண்டு மாதங்களே ஆகாத பால்மணம் மாறாத ஒரு பச்சிளம் பாலகனை எரிக்கக் கொண்டு செல்லும்போது வராத துணிச்சலும் ரோஷமும் இப்போதுதான் வருகிறது. இதனையெண்ணி அழுவதா? சிரிப்பதா?
மஹிந்தவின் 52 நாள் ஆட்சிக்கெதிராக போர்க்கொடி தூக்கி கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு உச்ச நீதிமன்றம் சென்று வாதாடிய தலைமைகள் இவ்விடயத்தில் நீதிமன்றம் செல்வதில் அசமந்தப் போக்காக இருந்ததன் மர்மம் என்ன? என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள துணிவு இவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய ஆட்சியாளராகவிருந்த சர்வ அதிகாரமும் கொண்டிருந்த கோத்தாபயவுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
“ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. அதுவும் கொங்றீட் பெட்டிகளில் அடக்கம் செய்ய ஆலோசித்திருந்தேன். ஆனால் சுகாதார அமைச்சின் நிபுணர்கள் அதற்கு இடம்தரவில்லை. பேராசிரியர் மெத்திகாவே தகனம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தார்” என்று தனக்குக் கீழ் உத்தியோகம் பார்க்கும் ஒருவரின் ஆலோசனையை மீற முடியாது என சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்காத சர்வாதிகாரி கோத்தாபய இப்போது இப்படிக் கூறுகின்றார்.
அதுமட்டுமல்ல “அழுத்கம, பேருவல வன்முறைகளுக்கு அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” என சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன நீதிமன்றில் வாதாடுகின்றார்.(விடிவெள்ளி 29.02.2024)
இப்படி சகலரும் தங்கள் தவறுகளை உணர்ந்து பரிகாரம் தேடும் வேளையில் நமது சமூக தலைமைகளும் நாங்களும் விழித்துக் கொண்டுதானிருக்கிறோம் என்பதை நமது மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதற்காக அறிக்கை விடுகிறார்களோ!
“இதே வேளை இவ்வாறு மன்னிப்பு வழங்குவதன் மூலம் பலவந்த தகனம் தொடர்பாக தாம் விசாரணைகளை முன்னெடுக்கக்கூடிய அனைத்து வழிகளையும் அரசாங்கம் அடைத்துவிட முயற்சிக்கிறது” என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிறின் சரூர் தெரிவித்துள்ளார். “பலவந்த தகனம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட தவறான தீர்மானத்தை வெளிக்கொணர்வதை மன்னிப்பு மூலம் தடுத்துவிட முடியாது. பலவந்த தகனம் தொடர்பாக கடுமையான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலமே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் தடுக்க முடியும்” எனவும் சிறீன் சரூர் தெரிவித்தார். (விடிவெள்ளி 11.04.2024)
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகல முஸ்லிம் அரசியல் தலைமைகளும், புத்தி ஜீவிகளும் உலமாக்கள், பள்ளிவாசல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும் ஜனாஸா எரிப்பு விடயத்தில் சகல சமூகங்களையும் சார்ந்த உச்ச நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அரசாங்கம் நிறுவி இதனுடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் வெளிக்கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால் என்ன?
இதனைப்பற்றி சமூகத்தை சிந்திக்க வைப்பதும், உற்சாகப்படுத்துவதுமே இக்கட்டுரையாளனின் நோக்கமாகும். – Vidivelli