ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டில் தேர்தல் களை கட்டப்போவது தெரிகிறது. நாட்டு மக்களும், அரசில்வாதிகளும் தேர்தல் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இந்நாட்டு அரசியலில் இவ்வருடம் தீர்மானமிக்கதாகும்.
அரசியலமைப்பின்படி இவ்வருடம் தேசிய தேர்தலொன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தலே முதலில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறியிருக்கிறார். இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் 2025இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது நாட்டு மக்களின் ஐனநாயக உரிமையை உறுதி செய்வதாக அமைகிறது. இதன்மூலமே நாட்டு மக்களின் கருத்தினை விருப்பத்தை வெளியிட முடிகிறது.
தேர்தலை பிற்போடுவது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் கால எல்லையை நீடிப்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். தேர்தல் நடாத்தப்படுவதற்கான கால எல்லை 4 வருடங்கள், 5 வருடங்கள் அல்லது ஆறு வருடங்களாகும். 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பிலும் அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட 19, 20, 21 ஆம் திருத்தங்களிலும் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய காலவரையறை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்ற திகதியிலிருந்து ஐந்து வருட காலம் 2024இல் பூர்த்தியாகின்றமையினால் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவரின் பதவிக்காலம் நிறைவுறுவதற்கு ஒரு மாத காலத்துக்கு குறையாமலும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று அரசியலமைப்பின் 31 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் இறுதியில் அல்லது நவம்பரில் நடத்தப்பட வேண்டியுள்ளது.
என்றாலும் இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகிறது. தேர்தல் விவகாரங்களில் நாட்டு மக்கள் ஜனாதிபதியின் உறுதிமொழியினை சந்தேகத்துடனே நோக்குகிறார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஆரம்பத்தில் வாக்குறுதியளித்திருந்த ஜனாதிபதி பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையே நடத்தவில்லை.
சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு உகந்த காலமல்ல. தேர்தலுக்கு பாரிய நிதியினை செலவிட வேண்டியுள்ளது. அந்நிதியினை மக்களின் நிவாரணங்களுக்கு செலவிட முடியும். அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதியை தொடர்ந்தும் பதவியில் வைத்துக் கொள்வதே நல்லது என அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதாக ஜனாதிபதி இதுவரை கருத்து வெளியிடவில்லை. அவ்வாறான அதிகாரம் அவருக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டும் இல்லை. அவ்வாறு பிற்போடுவதென்றால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளை முதலில் ஜனாதிபதி தேர்தலா? இன்றேல் பொதுத் தேர்தலா? என்ற சர்ச்சையும் மேலெழுந்துள்ளது. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி முதலில் பொதுத்தேர்தலையே வலியுறுத்தி வருகிறது. பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ பொதுத் தேர்தலே முதலில் என மிகக் கடுமையாக வலியுறுத்தி வருகிறார்.
பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. 5 வருட கால நிறைவின் பின்பு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பும் இதனையே தெரிவிக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அறிவிக்கலாம். அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. இதனாலேயே பாராளுமன்றத்தில் உள்ள சிலரும், வெளியில் சில அரசியல்வாதிகளும் முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி நிற்கிறார்கள்.
பொதுத்தேர்தல் மூலமே உண்மையான மக்கள் ஆணை வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் விவாதிக்கிறார்கள். என்றாலும் ஜனாதிபதி தேர்தல் மூலமும் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில் ஏன் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்? என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதேவேளை புதிதாக நியமனம் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில் பொதுத்தேர்தலே நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுனவின் மக்களாணையில் இருந்துகொண்டு கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக ஜனாதிபதியினால் செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விடத்தில் ஜனாதிபதிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பொரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பொதுத்தேர்தல் இடம் பெற்றால் அரசியல் ஸ்திரத்தன்மையில் முரண்பாடான தன்மையே தோற்றம் பெறும். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் மக்களாணைக்கு அமையவே தற்போதைய ஜனாதிபதி பதவி வகிக்கிறார். அதனால் எமது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக அவரால் செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியே முதலில் பொதுத்தேர்தலை வலியுறுத்துகிறது. இது அரசியல் சுயநலம் கருதிய கோரிக்கையாகவே நோக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. தங்களது ஜனாதிபதி அபேட்சகர் விடயத்திலும் உறுதியாக இருக்கின்றன. அபேட்சகர்களை தெரிவு செய்து கொண்டுள்ளன. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்குப் பதிலாக பொதுத்தேர்தலைக் கோரி நிற்கும் கட்சிகள் தமது ஜனாதிபதி அபேட்சகர் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை.
பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி அபேட்சகராக அரசியலமைப்பின்படி மஹிந்த ராஜபக்ஷவினால் களமிறங்க முடியாது. நாமல் ராஜபக்ஷ அரசியல் அனுபவத்தில் குறைந்தவர் என்பதால் அவர் களமிறக்கப்படமாட்டார். பஷில் ராஜபக்ஷ களமிறங்குவதென்றால் அரசியலமைப்பின் படி அவர் தேவையான தகைமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி அபேட்சகராக ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர வேறொருவர் களமிறக்கப்பட மாட்டார் என்பது தெளிவாகும். இதனாலே பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் பொதுஜன பெரமுன தனது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள முடியும் எனக் கருதியே பஷில் ராஜபக்ஷ முதலில்பொதுத் தேர்தல் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
நாட்டு மக்கள் தற்போது அரசியல் மாற்றமொன்றினையே எதிர்பார்க்கிறார்கள். நாட்டில் நிலவும் பொருளாதார நிலை சீராக வேண்டும். வறுமை நிலையிலிருந்து மீள வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒருவரின் பின்னே அவர்கள் கைகோர்க்கவுள்ளார்கள். ஜனாதிபதி முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படமாட்டாது என்றே கூறியிருக்கிறார். இதேவேளை தனது திட்டங்களை எவ்வித தாமதமும் இன்றி முன்னெடுத்து வருகிறார். மக்களும் பொதுத் தேர்தலை வலியுறுத்த வில்லை. அதனால் ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் என எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல்கள் ஆணையாளர்
‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் களத்தில் பேசப்படும் விடயங்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தியுள்ளோம். பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி தற்போதைய பாராளுமன்றத்தைக் கலைப்பாராயின் பொதுத்தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதியையும் அவர் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ‘ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை நடத்தும் திகதியை இதுவரை தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடுவோம்’ என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 17 அல்லது அக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான வாக்கெடுப்பு திகதியை ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை. அனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு திகதி தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவிப்பு
முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பொதுத் தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்பதையும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைத்து கடந்தவாரம் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி இவ்விவகாரத்தை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான தேசிய பொருளாதார மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தற்போது சிறந்த முறையில் நகர்த்தப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கே முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும். இப்பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் இறுதிவரை தொடரும் . அதனால் இதற்கு முன்னர் நாட்டில் தேர்தலொன்றுக்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டிய கால கட்டம் சர்வதேச நாணய நிதியத்துடனான பணிகளுக்கு இடையூறாக அமையாது. அதனால் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என உறுதியான தனது நிலைப்பாட்டினை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
மே தின பேரணிகளைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இம்முறை தேர்தலுக்காக என்னவிதமான தகிடுதத்தங்களை அரங்கேற்றப் போகிறார்களோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli