நோன்பினூடாக ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்ட இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இஸ்லாமிய மத நடைமுறைகளின்படி நோன்பு நோற்பதில் அனைவருக்குமிடையேயான பரஸ்பர நட்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய சமயக் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உன்னத குணங்கள் நிறைவேறும் காலகட்டமாக இது அமைவதால், ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்டு இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும் என இந்த நோன்புப் பொருநாள் தினத்தில் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பெருநாளை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றனர்.
அல் குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபியின் நடைமுறைகளை சமய முறையாகக் கடைப்பிடித்து இலங்கை முஸ்லிம் மக்களும் மிக்க மகிழ்ச்சியுடன் தூய்மையாக இந்த ெபருநாளை கொண்டாடுகின்றனர்.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பதும் நன்மைகளின் பக்கம் நம்மை புடம் போடுவதும் மிகவும் பாராட்டத்தக்கது.
மனிதாபிமானத்துடன் நாம் நடந்து கொண்டால், உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து, அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.இந்த சகோதரத்துவ பண்பை இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திடம் நாம் பல காலமாக கண்டு வருகிறோம். இது மனித குலத்துக்கு சிறந்த செய்தியை கூறுகிறது. சமூகத்தில் சகலரையும் உள்ளடக்கும் உன்னத போதனை என்றும் பாராட்டத்தக்கது.
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற படிப்பினைகளும் முன்ணுதாரணங்களும் அளப்பரியது.
எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நட்புறவு என்றென்றும் பேணப்பட வேண்டும். நாட்டுக்கு இதுவே பக்க பலம். அந்தந்த மதங்களுக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பன்முகத்தன்மையை பாராட்ட வேண்டும். பன்முகத்தன்மையில் உருவாகும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், கலாசார விழுமியங்களுக்கும் உரிய மரியாதையும் கௌரவமும் அளிக்கப்பட வேண்டும்.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் மக்களும் உலகளாவிய இஸ்லாமிய பெருமக்களுக்கும் என்னெஞ்ஞார்ந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.- Vidivelli