ஏ.ஆர்.ஏ.பரீல்
‘உடலில் ஏற்படும் காயங்களைச் சுகப்படுத்துவதற்கு மருந்துகள் இருந்தாலும், மனதில் ஏற்படும் காயங்களை சுகப்படுத்துவது மிகவும் இலகுவானதல்ல’ என்று கூறப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவி அதனால் மரணங்கள் அதிகரித்திருந்த நிலையில் அப்போது பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான அரசாங்கம் கொவிட் 19 தொற்று ஜனாஸாக்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொண்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திடம் முறையாக மன்னிப்பு கோருவதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் நகரில் அண்மையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார காலியில் நடைபெற்ற ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டு பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
‘எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மரணங்கள் அடக்கம் செய்யப்படும்போது இவ்வாறான நிலைமை ஏற்படா வண்ணம், எவ்வித பிரச்சினைகளும் உருவாகாமலிருப்பதற்காக சட்ட முறைமையை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், இந்நாட்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் அடக்கத்துக்கு ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படமாட்டாது. முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு அமைவாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு அமைய இச்சட்டம் இயற்றப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
முஸ்லிம்களின் கொவிட் மரணம்
இலங்கையில் இரண்டாவது கொவிட் மரணம் நீர்கொழும்பு, கொச்சிக்கடை போருதொட்டை பகுதியில் நிகழ்ந்தது. போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஜமால் என்பவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி மரணமடைந்தார்.
தனது தந்தையின் இறுதிக் கிரியைகளை முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு அமைவாக கெளரவமான முறையில் மேற்கொள்ளப்பட முடியாமற் போனமை தொடர்பில் அவரது மகன் மொஹமட் கியாஸ் இன்றும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
‘அதைக் கூறி வேலையில்லை சேர். எனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செய்ய முடியாமற் போனது. எங்களது சமயத்தின்படி ஜனாஸாவில் மாற்றங்களைச் செய்யவோ, எரிப்பதற்கோ முடியாது. என்றாலும் எனது தந்தைக்கு அது நடந்துவிட்டது. எனது தந்தை மரணித்த பின்பு அவரது உரிமை மறுக்கப்பட்டு விட்டது. இப்போது எவ்வளவு மன்னிப்பு கோரினாலும் அதனால் பயன் உள்ளதா? வேறு எந்தவோர் நாட்டிலும் செய்யாத வேலையை இங்கு செய்து விட்டார்கள். ஜனாஸாவை எரித்துவிட்டார்கள். இதன்பின்பு இதைப்பற்றி பேசி பலன் இல்லை’ என மொஹமட் கியாஸ் பிபிசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
முதலாவது கொவிட் அலையில் 17 முஸ்லிம்களும், அதன் பின்னர் 353 முஸ்லிம்களும் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டு மரணமானார்கள். அவர்களை இஸ்லாமிய சமய கலாசாரத்துக்கு அமைவாக அடக்கம் செய்ய முடியாமற் போனதாகவும் அவர்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டதாகவும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சமூக சேவை செயற்பாட்டாளரான மொஹமட் இஸ்மத் தெரிவித்தார்.
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி கொவிட் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி கொவிட் ஜனாஸா மையவாடியில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அங்கு மையவாடியில் சுமார் 2900 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களை அவர்கள் வசித்த பகுதியைச் சேர்ந்த மையவாடியிலேயே 24 மணித்தியாலத்துக்குள் அடக்கம் செய்யவதற்கு 2022 மார்ச் 5ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.
அடக்கம் செய்வதற்கான தடை
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதால் நிலத்தடி நீரில் வைரஸ் கிருமிகள் பரவும் என அன்று பேராசிரியை மெத்திகா விதானகே தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த நிபுணத்துவ குழு சிபாரிசு செய்திருந்தது. என்றாலும் அவ்வாறு நிலத்தடி நீரில் கொவிட் வைரஸ் பரவாது என பேராசிரியை நீலிகா மாளவிகே உட்பட மற்றும் சிலர் வாதிட்டு வந்தனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) படி உலகெங்குமுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தன. ஆனால் கொவிட் தொற்றாளர்களின் மரணித்த உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட வேண்டுமென்று இலங்கை மிகவும் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது.
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டால் நிலத்தடி நீரில் வைரஸ் கிருமிகள் பரவி நோய் தொற்றுகள் அதிகரிக்கும் என நியமிக்கப்பட்டிருந்த விஷேட நிபுணத்துவ குழுவின் சிபாரிசுக்கமைய அரசாங்கம் தகனம் செய்யப்பட வேண்டுமென்ற உறுதியான கொள்கையை அமுல்படுத்தியது.
பேராசிரியை மெத்திகா விதானகேயின்
இன்றைய நிலைப்பாடு
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பாக சிபாரிசுகள் செய்யும் விஷேட நிபுணர்கள் அடங்கிய குழுவின் உறுப்பினராகவிருந்த பேராசிரியை மெத்திகா விதானகே இன்று இவ்விவகாரத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
‘‘நிபுணத்துவ குழுவில் வைத்திய சட்ட அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள். கொவிட் சடலங்களை அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் மூலம் வைரஸ் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புண்டு என்று அவர்கள் தான் கூறினார்கள். அவர்களின் அதிகமானோரின் கருத்துகளுக்கு அமைவாக நாம் கொவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்படக் கூடாது, எரிக்கப்பட வேண்டுமென தீர்மானம் எடுத்தோம். இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைமை எனக்கே ஏற்பட்டது. அதனால் என்னை எல்லோரும் ஏசினார்கள். இது எனது தேவைக்காக நான் செய்த வேலை அல்ல’’ என்று பேராசிரியை மெத்திகா விதானகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொவிட் தொற்று நோய் நீரினால் பரவும் நோயல்ல என வைரஸ் தொற்று தொடர்பான விஷேட நிபுணர் பேராசிரியர் மலிக் பீரிஸ் 2020இல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டிருந்தமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
எங்களை எரியூட்டுவது போன்ற
உணர்வு ஏற்பட்டது
‘‘முஸ்லிம்களுக்கென்று விஷேடமான சமய, கலாசார வழிமுறைகள் உள்ளன. இதற்கமைய ஜனாஸாக்களுக்கு மிகவும் உச்ச கெளரவம் வழங்கப்படுகிறது. ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மரணித்து 24 மணித்தியாலத்துக்குள் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்று இருந்த அரசாங்கம் எந்தவோர் அடிப்படை காரணங்களுமின்றி இந்த அடக்கம் செய்யும் எங்களது சம்பிரதாய உரிமையை இல்லாமற் செய்தது. எங்களது உறவினர்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது நாங்கள் எரிக்கப்படுவது போன்ற உணர்வே எங்களுக்கு ஏற்பட்டது. அத்தகைய வேதனை எங்களுக்கு ஏற்பட்டது. அதனை விபரிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை’’ என கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு பின்பு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்ட டாக்டர் சாபி சஹாப்தீன் தெரிவித்தார்.
அநேகமான சந்தர்ப்பங்களில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களை தங்களது அரசியல் இலக்கினை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொண்டன எனவும் அவர் தெரிவித்தார்.
பதவியில் இருந்த ஜனாதிபதி பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதை தடை செய்தார். ஏனென்றால் பெளத்தர்களின் ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது.
இதேவேளை இப்போதுள்ள ஜனாதிபதி சிலவேளை எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து மன்னிப்பு கோருவதாக இருக்கலாம். உண்மையில் இப்போது மன்னிப்பு கோருவதால் பலன் இல்லை. உடலுக்கு காயம் ஏற்படுத்தினால் அந்தக் காயத்தை எப்படியாவது சுகமாக்கிக் கொள்ளலாம். ஆனால் மனதுக்கு காயம் ஏற்படுத்தினால் அதை இலகுவில் சுகமாக்க முடியாது. இப்போது கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே இல்லை. ஆனால் அந்த தீர்மானத்தை எடுத்த பவித்ரா வன்னி ஆராச்சி அரசாங்கத்தில் இருக்கிறார் என்றும் டாக்டர் சாபி கூறினார்.
அரசியல் சுயநலம் என்கிறார்
கபீர் ஹாஷிம் எம்.பி.
எவ்வித விஞ்ஞான அடிப்படைகளுமின்றி முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாயத்தை சவாலுக்குட்படுத்திய அரசாங்கம் பல வருடங்களுக்குப் பிறகு திடீரென மன்னிப்பு கோருவதற்கு முயற்சிக்கின்றமை சந்தேகத்துக்குரியதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்துக்கு நடக்க வேண்டிய துன்பங்கள், துயரங்கள் நடந்து முடிந்து விட்டது. நடத்தப்பட்டு விட்டது. மன்னிப்பு கோருவதில் சந்தேகம் நிலவுகிறது. உண்மையான மன்னிப்பு கோரலாக இது அமையாது என்ற கருத்து எம்மிடையே நிலவுகிறது என்றும் கூறினார்.
விதுர விக்கிரமநாயக்கவின் கருத்து
பல வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட குற்றத்துக்கு மன்னிப்பு கோருவதால் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய இவ்விவகாரம் தொடர்பிலான பதிலிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இப்போது இதற்காக செய்ய வேண்டிய ஒரே சிறந்த ஏற்பாடு இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் இடம்பெறாமலிருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகும்.
மன்னிப்பு கோருவதால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் இல்லாமற் போகும் என நினைக்க முடியாது. சிலவேளை மன்னிப்பு கோருவதன் மூலம் அரசாங்கம் மேலும் அதிருப்திக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படலாம். ஏனென்றால் எதிர்க்கட்சியினர் இந்நிலைமையை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதுள்ள ஒரே வழி முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இன்னல்களுக்கு உள்ளாகாத வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். அவ்வாறு செய்தால் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.- Vidivelli