எம்.எச்.எம். ஹஸன் (M.Ed).
உதவிப் பொதுச் செயலாளர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.
‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்றுதான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மௌலவி இப்ராஹிம் அவர்களுடைய பட்டப்படிப்பின் பெறுபேறுகள் வெளியான நாள். அவருக்கு அது தெரிய முன்பே பல்கலைக்கழக கீழைத்தேய மொழிகள் பீடாதிபதி பேராசிரியர். டப்ளியூ. எஸ். கருணாரத்ன. தனது சொந்தக் காரில் உயன்வத்தையை நோக்கி புறப்படுகிறார். வீட்டுக்குச் சென்று இப்ராஹீம் மௌலவி அவர்களை அழைக்கிறார். அவருக்கு ஒரே ஆச்சரியம். இந்தப் பெரிய மனிதர் எனது வீடு தேடி வந்திருக்கிறார். வாங்க சேர் உள்ளே என்று அன்பாக அழைக்கிறார். பேராசிரியர் மகிழ்ச்சியோடு அவருக்கு கை குலுக்கி கங்குராஜிலேசன் என்று சொல்கிறார். என்ன விஷயம் சேர் என்று கேட்டதற்கு உங்களுடைய பெறுபேறுகள் இன்று செனட்டினால் வெளியிடப்பட்டது. அதில் நீங்கள் முதல் தரத்தில் சித்தி பெற்றிருக்கிறீர்கள். அது மட்டுமல்ல நான் 20 வருடங்களுக்கு முன் நிகழ்த்திய சாதனையை நீங்கள் முறியடித்திருக்கிறீர்கள். இறுதிப் பரீட்சையிலே 9 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றிருக்கிறீர்கள்.கடைசியாக அந்த சாதனையை நான் தான் நிலை நாட்டினேன். இன்று நீங்கள் அந்த சாதனையை முறியடிக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துக் கூறவே உங்களுடைய வீடு தேடி வந்தேன்’’ என்று பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டார். இப்ராஹீம் மௌலவி அவர்களுடைய திறமைக்கு இது ஓர் அறிமுகம்.
1937 ஆம் ஆண்டு அஸன் லெவ்வை தம்பதிகளுக்கு புதல்வராக உயன்வத்தையில் பிறந்த மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் தனது ஆரம்பக் கல்வியை உயன்வத்தை நூராணிய மகா வித்தியாலயத்தில் கற்று 1947 ஆம் ஆண்டில் மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். 9 வருடங்கள் அங்கே கற்று உயர்வாகச் சித்தியடைந்து அங்கேயே விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். கபூரியாவில் படிக்கும் காலத்திலேயே அவருக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியோடு தொடர்பு இருந்தது. 1957 இல் கபூரியாவில் இருந்து வெளியேறியது முதல் ஜமாஅத்தில் அங்கத்தவராகி அதன் பணிகளில் ஈடுபட்டார்.
மௌலவி ஆசிரியராக நியமனம் பெற்ற அவர் அட்டுளுகம உட்பட பல இடங்களில் பணியாற்றினார். அதே காலத்தில் அவர் ஜீ.சீ.ஈ சாதாரண பரீட்சையில் தோற்றி அதில் சித்தியடைந்தார். 1963 ஆம் ஆண்டில் அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சியை முடித்துக் கொண்டு 1965 முதல் பயிற்றப்பட்ட ஆசிரியராக தனது பணியைத் தொடர்ந்தார். இதே காலத்தில் அவர் ஜீ.சீ.ஈ உயர்தரப் பரீட்சைக்கு தயாராகி அதில் தேர்ச்சி பெற்றார். 1967 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு பிரவேசிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கே அரபு மொழியை விஷேட பாடமாகக் கற்று அவருடைய ஆசான் பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடைய பாராட்டையும் பெற்று முதல் வகுப்பில் சித்தியடைந்தார். அதன் பெறுபேறுகள் வந்த தினத்தின் நிகழ்வு பற்றித்தான் நாம் மேலே குறிப்பிட்டிருந்தோம்.
பட்டப்படிப்பின் பெறுபேறு வந்த சிறிது காலத்தில் அவர் களனிப் பல்கலைக் கழகத்திலும் அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் அரபு இஸ்லாமிய நாகரீகத் துறையின் விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டார். பல்கலைக் கழகத்தில் அவர் படிக்கும் போது அவரது சகபாடிகளாக இருந்தவர்கள் மர்ஹூம் முக்தார் ஏ முகம்மத் அவர்களும் பன்னூலாசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். அமீன் அவர்களுமாவார்.
ஜமாஅத்தே இஸ்லாமியில் 1957ம் ஆண்டு அங்கத்தவராக இணைந்து கொண்ட அவர் 1958ம் ஆண்டு தனது 21வது வயதில் அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டில் அல் ஹஸனாத் சஞ்சிகையை வெளிக் கொண்டு வருவதில் அவருக்கு மகத்தான பங்குண்டு. அதன் முதலாவது இதழ் 1970 ஆம் ஆண்டு மே மாதம் மாவனல்லையில் வெளியிடப்பட்டது. அல் ஹஸனாத்தில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்த அவர் அதன் பிரதம ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்.
உலகின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள ‘இதுதான் இஸ்லாம்” என்ற நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்து ‘இஸ்லாம் யனுகுமக்த” என்ற பெயரில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். பேராசிரியர் நயீம் சித்தீக்கி எழுதிய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றிய ஆங்கில நூலை ‘மாணவ ஹிதவாதி மஹ நபித்துமா” என்ற பெயரில் சிங்கள மொழியில் வெளியிட்டார். அவருடைய காலத்தில் அரபு, ஆங்கில மொழிகளிலிருந்து பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவற்றில் சிலவற்றை அவரே மொழிபெயர்த்தார்.
1984 ஆம் ஆண்டு ‘பிரபோதய” என்ற சிங்கள இஸ்லாமிய மாசிகையை வெளியிட்டார். தொடர்ந்து அதன் நிருவாகியாகவும் செயற்பட்டார்.
தலைசிறந்த தப்ஸீர்களுள் ஒன்றான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர்ஆன் தப்ஸீரை பன்னிரண்டு தொகுதிகளாக சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் குழுவுக்கு தலைமைதாங்கினார். 10 வருடங்களுக்கு மேலாக இப்பணியிலே அவர் தொடர்ந்து செயற்பட்டார். அதன் வெளியீடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அன்றைய பிரதமர் டீ.எம். ஜயரத்ன அவர்களது தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
1960 களில் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் வெளியிட்ட குர்ஆனின் சிங்கள தர்ஜமாவுக்குப் பின்னர் எளிமையான சிங்கள மொழியில் அடிக்குறிப்புகளோடு அல்குர்ஆனை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் முன்னோடியாக செயற்பட்டார். இன்றுவரை அது பல பதிப்புகளைக் கடந்து பலராலும் விரும்பி கேட்கப்படுகின்ற ஒரு தர்ஜமாவாக இருக்கிறது.
பல்கலைக் கழகத்தில் முழுநேர விரிவுரையாளராக இருந்து கொண்டே ஜமாஅத்தே இஸ்லாமியின் பணிகளிலும் வேறு சமய சமூகப் பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டார். 1976ம் ஆண்டு முதல் தடவையாக ஜமாஅத்தின் அமீராக பதவியேற்ற அவர் 1977ம் ஆண்டு உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வரை அப்பதவியில் இருந்தார். மீணடும் 1982ம் ஆண்டு அமீராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் 1994 வரை பதவி வகித்தார்.
சமகால உலமாக்களான மர்ஹூம் மஸுத் ஆலிம், ஜே.எம். ரியாழ் மௌலவி, மௌலவி ரூஹுல் ஹக் ஆகியோரோடு இணைந்து ‘இத்திஹாதுல் முஸ்லிமீன்’ என்ற முஸ்லிம் ஒற்றுமை இயக்கத்தை ஆரம்பிப்பதிலே பெரும் பங்காற்றினார். பல வருடங்களின் பின் அவ்வமைப்பு செயலிழந்து போனதைப் பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று நிருவாக சபை உறுப்பினராகவும் அதன் உப தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் ஆகிய பாடங்கள் தொடர்பிலான பல்கலைக் கழக மற்றும் தேசிய கல்வி நிறுவக -கல்வித் திட்டக் குழுவில் அவர் தொடர்ந்து பங்களிப்புச் செய்தார்.
ஜீ.சீ.ஈ. சாதாரண தர, உயர் தர அரபு மொழி பிரதம பரீட்சகராக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தோடு இணைந்து நீண்ட காலம் சேவையாற்றினார். அல் ஆலிம் பரீட்சையின் பாடத்திட்ட மற்றும் பரீட்சை விடயங்களிலும் உத்தியோகபூர்வமாக ஈடுபட்டார்.
இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) புலமைப் பரிசில் திட்டத்தின் மாணவ ஆலோசகராகவும் பணியாற்றினார்.
சமகால முஸ்லிம் அரசியல் தலைவர்களோடும் அவர் கௌரவமான தொடர்புகளைப் பேணி வந்தார். காலம் சென்ற அமைச்சாகளான எம்.எச். முஹம்மத் ஏ.சீ.எஸ். ஹமீத் ஆகியோர் இப்ராஹீம் மௌலவி அவர்களின் நட்பை மிகவும் விரும்பினர். எந்த ஒரு பிரச்சினையின் போதும் நேரடியாக அவர்களோடு தொலைபேசியில் உரையாடி அவற்றைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு தொடர்புகளைப் பேணி வந்தார்.
மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்த மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹிம் அவர்கள் ஒரு கலாநிதிப் பட்டத்தைப் பெற்று பேராசிரியாராக வந்திருக்கவேண்டியவர். ஜமாஅத்தே இஸ்லாமியிலும் சமூகத்திலும் பல்கலைக் கழகத்திலும் முழுநேரமாக பணிகளில் ஈடுபட்டிருந்தமை அதற்குத் தடையாக இருந்திருக்கலாம்.
பாகிஸ்தான் சென்று ஒரு முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். ரியாதிலுள்ள இமாம் பல்கலைக் கழகத்தில் முதுமாணி கற்கைக்காக சென்று அங்கு சில காலம் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த சமயம் அவருடைய மூத்த மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை உருவாகியபோது படிப்பை நிறுத்தி விட்டு இலங்கை வந்தார். அதன் பின்னரும் ஒரு தடவை இங்கிலாந்துக்குச் சென்று தனது கலாநிதிப் பட்டத்தை மேற்கொள்ள முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது குடும்ப மற்றும் சமூக நெருக்குதல்கள் அதற்குத் தடையாக அமைந்தன.
இலங்கையின் இஸ்லாமிய ஷரீஆக் கல்வித் துறையில் அவர் காட்டிய ஈடுபாடு மகத்தானது. மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி, மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா பெண்கள் உயர்கல்வி நிறுவனம், ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக்கல்லூரி, திஹாரிய தன்வீர் எகடமி ஆகிய கல்வி நிறுவனங்களை அமைப்பதில் முன்னோடியாக இருந்தார். ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் ஆரம்ப கல்வித்திட்டக் குழுவின் ஒரு அங்கத்தவராக இருந்தார். ஹெம்மாதகமையில் அமைந்துள்ள தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தை அமைப்பதிலும் அவருக்கு பிரதான பங்கு உள்ளது.
நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் பெற்றோர்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யபபட்டு சிறுவர்கள் அனாதையாக்கப்பட்ட சூழலில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவசரமான ஒரு நிறுவனம் தேவை என்ற அடிப்படையில் அது பற்றி கலாநிதி எம்.ஐ.எம். அமீன் அவர்களோடு ஆலோசித்து சிறுவர் இல்லம் அமைக்கும் திட்டத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
சமூக விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு நிறுவனம் இல்லாத குறையைப் போக்க ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செரன்திப் நிறுவனம் (SIRD) என்ற பெயரில் ஒரு ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டார். அதனூடாக கூட்டு ஸக்காத் தொடர்பான பல கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடத்தினார். இஸ்லாமிய பாலர் பாடசாலை தொடர்பாக அமெரிக்காவில் வெளியான ஒரு நூலையும் மொழிபெயர்த்து வெளியிட ஆவன செய்தார்.
ஸக்காத்தை கூட்டாகக் கொடுக்க வேண்டும் என்பதிலும் அல் குர்ஆனை விளங்கும் தப்ஸீர் வகுப்புகள் பள்ளிவாயில்கள் தோறும் நடைபெறல் வேண்டும் என்று அவர் மிகவும் கரிசனை காட்டினார். நீண்ட காலமாக ஜமாஅத்தின் தலைமையகத்தில் அல் குர்ஆன் விளக்க வகுப்பை நடத்தி வந்தார். அல்குர்ஆனை ஓதுவோம், விளங்குவோம், அதன்படி நடப்போம், அதன்பால் அழைப்போம் என்ற தொனிப்பொருளில் வருடாந்தம் சுவரொட்டிகளை தயாரித்து நாடு முழுவதும் காட்சிப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர் ஆரம்பித்து நடத்தினார்.
ஜமாஅத்தே இஸ்லாமியில் நீண்ட காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட போதும் அவற்றுக்காக எந்தவொரு கொடுப்பனவையும் அவர் பெற்றுக் கொண்டதில்லை. அவர் பல்கலைக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியமைக்காக அவருக்கு கிடைத்த பல்கலைக் கழக ஊழியர் சேமலாப நிதி (UPF) கொடுப்பனவை அப்படியே ஜமாஅத்தே இஸ்லாமியின் கட்டிட நிதிக்காக அன்பளிப்புச் செய்தார். தலைமையகக் கட்டிட வேலைகளுக்கு அந்நேரம் அது மிகவும் பேருதவியாக அமைந்தது.
இப்ராஹீம் மௌலவி ஒரு வித்தியாசமான மனிதர். அழகாக நேர்த்தியாக ஆனால் எளிமையாக உடை அணிவார். அனைவரோடும் புன்முறுவலோடு உரையாடுவார். எல்லோருடைய பெயர்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து அழைப்பார். அவரைச் சந்தித்த எவரும் மீண்டும் சந்திக்க வேண்டாமா என்று நினைக்கின்ற அளவுக்கு அவர் மனிதர்களைக் கவர்ந்திழுத்தார். இயக்க வேறுபாடுகள் அமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து உலமாக்களாலும் அறிஞர்களாலும் சாதாரண மக்களாலும் ஏகோபித்து விரும்பப்பட்ட ஒரு மனிதராக இப்ராஹீம் ஹஸரத் அவர்கள் வாழ்ந்து காட்டினார்.
அவர் முற்போக்குச் சிந்தனையுள்ள ஒரு ஆலிம். இன்னும் பத்து வருடங்களுக்குப் பின் நாடும் உலகமும் எங்கே போகும் என்பதை திட்டமிட்டுத் தீர்மானித்து அதற்கான நகர்வுகளில் ஈடுபட்டவர். அவர் பணம் சம்பாதித்ததில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. மக்களைச் சம்பாதித்தார். மறுமைக்கான சொத்துகளைச் சம்பாதித்தார். ஒரு தனி மனிதனால் இவ்வளவு பணிகளையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா என்ற கேள்வி எழலாம். முடியும் என்பதற்கு மௌலவி இப்ராஹீம் அவர்கள் சான்று பகர்ந்தார். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க நாமும் பிரார்த்திப்போம்.- Vidivelli